‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்று சொல்வார்கள். கடுகினுடைய அளவு சிறியதாக இருந்தாலும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்பதை புரிந்துக்கொள்ள அவ்வாறு கூறுவார்கள். இந்த கடுகைப் பயன்படுத்தி செய்யக்கூடிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நம் மீது பொறாமைக் கொண்டு சிலர் வைக்கும் கண் திருஷ்டியை போக்க கடுகு மிகவும் உதவுகிறது. நம்மிடம் யார் அன்பு செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களின் பெயரை சொல்லி இரண்டு கைகளிலும் கடுகை வைத்துக்கொண்டு அதை நெருப்பில் போடவேண்டும். இவ்வாறு மூன்று முறை அல்லது ஒன்பது முறை செய்தால், உங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களிடம் நட்பாக பேசுவார்கள்.
வெளிநாட்டிற்கு சென்றவர்கள் ஒரு காலக்கட்டத்தில் சரியாகப் பேச முடியாமல் போகலாம். அப்போது இந்த பரிகாரத்தை செய்தால், அவர்களே நம்மிடம் தொடர்பு கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து அளவிற்கு சென்றுவிட்டால், அவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லதாகும். இதனால் அவர்களிடையே அன்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாம்பிராணி தூபம் போடும்போது அதில் வெண்கடுகு சேர்த்துப்போடுவது குடும்பத்தில் கருத்து வேறுபாட்டை சரிசெய்யும், எதிரிகளை அழிக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளைத் தடுக்க கடுகை வைத்து செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால், இரண்டு கைகள் நிறைய கடுகை எடுத்துக்கொண்டு எதிரிகளின் பெயரை சொல்லி, 'இவரால் தமக்கு எந்தவித பிரச்னையும் வராமல் இருக்க வேண்டும்’ என்று நினைத்தோ அல்லது கூறியோ அதை நெருப்பில் போட வேண்டும்.
இதில் இன்னொரு முறை இருக்கிறது. அதாவது, எண்ணெய்யை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் கடுகை எதிரியின் பெயரை சொல்லி, 'எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்னைகள் தீர வேண்டும்' என்று 3, 6, 9, 16 என்ற எண்ணில் கடுகை எண்ணெய்யில் போட வேண்டும். கடுகு நன்றாக வெடித்து பொரிய ஆரம்பிக்கும்.
பிறகு எண்ணெய் சூடு அடங்கியதும் அந்த கடுகை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் உங்கள் எதிரியை அதிகமாக சந்திக்கிறீர்களோ, அங்கே அந்த கடுகை தூவி விடவும். இதனால் உங்கள் மீது அவருக்கு இருக்கும் கோபம், கருத்து வேறுபாடு குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பரிகாரத்தை செய்வதன் மூலமாக உங்களுடைய வெற்றிக்கு தடையாக இருக்கும் எதிரிகளை ஜெயிக்கலாம்.