மோதிரம் அணியக்கூடிய பழக்கம் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு. நம்முடைய சாஸ்திரத்தில் மோதிரத்தை ஒரு குறிப்பிட்ட விரலில் அணியும்போது செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் ஒரே நிலையில் இருக்கிறது என்றால், நாம் முன்னேற்றம் அடைய மகாலக்ஷ்மியின் அருள் வேண்டும். மகாலக்ஷ்மியின் அருள் நமக்குப் பரிபூரணமாக வேண்டும் என்றால், வெள்ளி மோதிரம் அணிய வேண்டும்.
பௌர்ணமி நாளன்று வெள்ளி மோதிரம், அருகம்புல், மஞ்சள், மல்லிகைப்பூ ஆகியவற்றை கோயிலில் உள்ள மகாலக்ஷ்மி சன்னிதியில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு ஆண்கள் வலது கை மோதிர விரலிலும், பெண்கள் இடது கை மோதிர விரலிலும் அணிந்தால், மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் வேலை பரிபூரண வெற்றியடையும் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு முறை என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமை அல்லது திருவோணம் நட்சத்திரம் அன்று ஆண்களாக இருந்தால், வலது கை மோதிர விரலிலும், பெண்களாக இருந்தால், இடது கை மோதிர விரலிலும் அன்று இரவு முழுவதும் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
காலை எழுந்ததும் அந்த மோதிரத்தை தண்ணீர் இருக்கக்கூடிய டம்ளரில் போட்டு விடவும். அன்று நாள் முழுவதும் அந்த மோதிரம் தண்ணீரிலேயே கிடக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு பெருமாள் படத்தின் முன்பு மோதிரத்தை வைத்து வேண்டிக்கொண்டு அணிந்து கொள்ள வேண்டும். இதனால் சகல சௌபாக்கியமும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
வெள்ளி மோதிரத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இது மகாலக்ஷ்மியின் அம்சமாகும். இதற்கு தீட்டு கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால்தான் குழந்தை சம்பந்தமான பொருட்கள் வெள்ளியால் உருவாக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வெள்ளி காப்பு, கொலுசு அணிவிக்கப்படுகிறது. பெண்கள் இன்று வரை வெள்ளிக் கொலுசை கால்களில் அணிந்திருப்பார்கள்.
கட்டை விரலில் மோதிரம் அணிந்தால் ஆரோக்கியம் மேம்படும், ஆற்றல் அதிகரிக்கும். ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியும்போது நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆளுமைத்திறன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நடு விரலில் மோதிரம் போடுவதால், நமக்குப் பிடித்த உறவுகள் நம்முடன் நெருக்கமாக இருப்பார்கள்.
மோதிர விரலில் மோதிரம் அணிந்தால் பணம், செல்வம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. சுண்டு விரலில் மோதிரம் போட்டால் ஹார்மோன் பிரச்னைகள் சரியாகி ஹார்மோன் சமநிலை சீராகும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வெள்ளி மோதிரத்தை நீங்களும் அணிந்து பயன் பெறுங்கள்.