நாம் அணியும் நவரத்தினங்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன? அவற்றை எப்படி பார்த்து வாங்கி அணிய வேண்டும்? அப்படி அணிவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்ற சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு கதையின் மூலம் இந்தப் பதிவில் காண்போம்.
வலன் என்னும் அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் செய்து வந்தான். அவனது தவத்தை முக்கண்ண மூர்த்தி மகிழ்ந்து ஏற்று அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க, அதற்கு வலன், “நான் யுத்தத்தில் சாகா வரம் வேண்டும். அங்ஙனம் விதியால் இறப்பின் எனது உடல் எவரும் விரும்புகின்ற நவமணிகளாக வேண்டும்” என வரம் கேட்டான். சிவமூர்த்தியும் அவ்வாறே வரம் அளித்துச் சென்றார்.
இவ்வாறு பெற்ற வலனாசுரன் தேவர்களை வருத்தி வந்தான். இவனை உபாயத்தினால் வெல்ல எண்ணிய இந்திரன், வலனாசுரனிடம், “அசுரனே நீ மகா வல்லவன். உன்னுடன் நான் நட்பு கொள்ள விரும்புகிறேன்” என்று பயந்தாற்போல கூறி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று கூறினான். இந்திரன் இவ்வாறு சொல்ல, வலன் இந்திரனிடம், “அட இந்திரா! நீயா எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டாய்? உன்னிடம் வரம் கேட்கும் நிலையில் நான் இல்லை .உனக்கு என்ன வரம் வேண்டும் என்னிடம் கேள். நான் உனக்குத் தருகிறேன்" என்றான்.
இந்திரன், “நீ இம்மை மறுமைக்கும் புகழை நிறுத்தி எனக்கு யாகப் பசுவாக ஆகுக என்று வலனிடம் வரம் கேட்க, அவ்வாறே வலன் இந்திரனின் யாகப் பசுவாக ஆயினான். இவனது உடல் விலை உயர்ந்த ரத்தினங்கள் ஆயின. இந்திரனுக்கு யாகப் பசுவான வலனின் ரத்தம் மாணிக்கங்கள் ஆயின. பற்கள் முத்துக்கள் ஆயின. மயிர்கள் வைடூரியம் ஆயின. எலும்புகள் வைரம் ஆயின. பித்தம் மரகதம் ஆயின. நிணம் கோமேதகம் ஆயிற்று. தசைகள் பவளம் ஆயின. கண்கள் நீலமாயின. கபம் புஷ்பராகம் ஆயிற்று. இவற்றின் இடங்களும், நிறங்களும், பிரிவுகளும், தெய்வங்களும், ஒளிகளும் குற்றங்களும் பயன்களும் பின்வருமாறு கூறுகின்றன.
வைரம், முத்து ஒரு பிரிவு, மாணிக்கம், பவளம் ஒரு பிரிவு, புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம் ஒரு பிரிவு, மரகதம், நீலம் ஆகியன ஒரு பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முத்து, வைரம், பச்சைக்கல் ஆகியன சாத்வீக குணம் உடையன என்றும், பவளம், மாணிக்கம், கோமேதகம் ஆகியன ராசத குணம் உடையன என்றும், நீலக்கல் தாமச குணம் உடையன என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரத்தினங்களை பரீட்சை செய்து அதன் மதிப்பு என்ன விலை என்று கூறுவோர் திங்கட்கிழமையன்று முத்தினையும், வைடூரியத்தையும், செவ்வாய்க்கிழமையன்று பவழத்தினையும், புதன்கிழமையன்று பச்சைக்கல்லையும், வியாழக்கிழமையன்று புஷ்பராகத்திணையும், வெள்ளிக்கிழமையன்று வைரத்தினையும், சனிக்கிழமையன்று நீலக்கல்லையும், ஞாயிற்றுக்கிழமையன்று மாணிக்கம் மற்றும் கோமேதகக் கல்லையும் மதித்து விலை கூற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்குரிய நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அதனை மதிப்பிட்டு விலை கூறுதல் கூடாது என்பது ஐதீகம்.
இவற்றில் மாணிக்கத்தில் புள்ளி, கீற்று, வேற்று நிறச் சார்பு, தராசம் என்கிற குற்றம் இல்லாததை அணிந்தால் பகை வென்று விஜயலட்சுமி நேசனாவான் என்று கூறப்பட்டுள்ளது. அவனை துஷ்ட தேவதைகள் மற்றும் மிருகங்கள், வியாதி, பாப கிரகங்கள் எதுவும் அண்டாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
முத்து நட்சத்திரம் போல் ஒளிமிக்கதாக இருக்க வேண்டும் என்றும், வைரம் உறுதியானதாய், மரகதம் பொன்வண்டு நிறத்தினை உடையதாயும், பவளம் திருகல், கோணல், புழு அரித்தல், முகம் ஒடிதல் போன்றவை இல்லாததாகவும் இருப்பதை பார்த்து அணிந்தால் புத்திர லாபம், சகல ஐஸ்வர்யங்கள், தீர்க்காயுள் போன்றவை உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.