
சனாதன தர்மத்தில் தானம் செய்தல், இறைவனின் அருளைப் பெற மிகச்சிறந்த வழியாக உள்ளது. தானத்திற்கும் தர்மத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தானம் என்பது எதையோ எதிர்பார்த்து செய்வது. வேறு நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் இறைவனின் அருளைப் பெற தானம் செய்கின்றனர். தர்மம் என்பது முற்றிலும் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. இறைவனின் அருளையும் அவர்கள் எதிர்பார்த்து எதுவும் தருவதில்லை. தானம் செய்து இறைவனின் ஆசிகளைப் பெற விரும்புபவர்கள் எந்த நாளில் என்ன தானம் செய்யலாம் என்பதை அறிந்துக் கொண்டால், அதன் மூலம் அந்த நாளுக்கு உரிய கடவுளின் ஆசியைப் பெறலாம்.
தானம் செய்ய நாளும் கிழமையும் பார்க்க வேண்டியதில்லை என்றாலும், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் ஆதிக்கம் நிறைந்தது. அந்த நாளில் அந்தக் கடவுளின் மனம் குளிர தானம் செய்தால், அவரின் ஆசிகளைப் பெறலாம். தானத்தினால் இறைவனின் ஆசிகளை மட்டும் பெறவில்லை, பொருள் இல்லாதவர்களுக்கு, பொருள் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறோம். மற்றவர்களை திருப்திபடுத்துவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். இயலாதவர்கள் பெறும் தானத்தின் மூலம், அவர்கள் வாழ்வில் மேன்மையடைய முடியும். எந்த நாளில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஞாயிறு: வாரத்தின் தொடக்க நாளான இன்று சூரியனுக்குரிய நாளாகும். சூரியன் புகழ், கௌரவம் மற்றும் ஆரோக்கியத்தைத் தருபவர். அன்று அரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும் மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்வது, சூரிய பகவானின் மனதை குளிர்விக்கும்.
திங்கள்: சந்திரனுக்குரிய நாளாக இது உள்ளது. இவர் அழகு, நீர், மனம், அமைதி ஆகியவற்றைத் தருபவர். அன்று அரிசி, பால், தயிர், வெண்ணெய், வெள்ளை உடை, வெள்ளி, முத்துக்கள் போன்றவற்றை தானம் செய்து சந்திரனின் அருளைப் பெறலாம்.
செவ்வாய்: அங்காரகன் அல்லது முருகனுக்கு உகந்த நாள் இது. சக்தி, தைரியம், வெற்றி, நிலத்தின் அதிபதியாக அங்காரகன் இருக்கிறார். இன்று பருப்பு, நிலக்கடலை, சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற இனிப்புகள், ஆயுதங்கள், நிலம் ஆகியவற்றை தானம் செய்து அங்காரகன் ஆசியைப் பெறலாம்.
புதன்கிழமை: புத்தி, சொல், வியாபாரம் ஆகியவற்றிற்கு அதிபதியான புத பகவானின் நாள் இது. இன்று பச்சைப் பயறு, பச்சை நிற ஆடைகள், பச்சை நிற இனிப்புகள் ஆகியவற்றை தானம் செய்து புத பகவான் அருளைப் பெறலாம்.
வியாழக்கிழமை: அறிவு மற்றும் அதிர்ஷ்டத்தின் கடவுளான குரு பகவானின் நாள் இது. இன்று பருப்பு வகைகள், லட்டுகள், மஞ்சள் துணிகள், மஞ்சள், வளையல் ஆகியவற்றை தானம் செய்து குரு பகவானின் அருளைப் பெறலாம்.
வெள்ளிக்கிழமை: அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பொருள், கலை, செல்வம் ஆகியவற்றின் அதிபதியான சுக்கிர பகவானுக்கு உரிய நாள் இது. மிகவும் மங்கலகரமான இந்த நாளில் தானம் செய்வது அதிக நன்மை தரும். அரிசி, பால், தயிர், வெள்ளை ஆடைகள், சர்க்கரை ஆகியவற்றை தானம் செய்து சுக்கிர பகவானின் அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை: நீதி மற்றும் கர்மாவின் கடவுளான சனீஸ்வர பகவானின் நாள் இது. இன்று எள், கடுகு, உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்புப் பொருட்கள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டிய நாள் இது. இன்றைய நாளில் பொருள் இல்லாதவர்களுக்கு உதவி செய்தவன் மூலம் சனி பகவானின் அருளைப் பெற முடியும். இதன் மூலம் சனி பகவானின் உக்கிரப் பார்வையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.