
செல்வம் சேரவும், வாழ்க்கையில் நமக்கு அவ்வப்பொழுது ஏற்படும் பலவிதமான தடைகள் நீங்கவும், பாவங்கள் தொலையவும் நமது முன்னோர்கள் ஒரு எளிய சிறிய வழியைக் கூறி அருளியிருக்கின்றனர். அது தான் காமதேனு வழிபாடு!
காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால், அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.
பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :
பசுவின் பற்களில் புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான மருத்தும், நாக்கில் சரஸ்வதியும், குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின் முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.
நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும், லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.
எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன. அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”
பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது. பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன. ஆகவே, பசுவை வழிபட்டால் போதும் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் மட்டுமல்ல அனுபவ மொழியும் ஆகும்.
ஐந்து பசுபதி தலங்கள்
பசுபதி தலங்கள் ஐந்து மிக்க சிறப்பு வாய்ந்தவையாக அமைந்துள்ளன.
அவையாவன:
1. ஆவூர்
2. நேபாளம்
3. திருக்கொண்டீஸ்வரம்
4. பந்தணைநல்லூர்
5. கருவூர்
1. ஆவூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆவூர். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பசுபதீஸ்வரர். அம்மனின் நாமம் பங்கஜவல்லி மற்றும் மங்களாம்பிகா. தீர்த்தம் காமதேனு தீர்த்தம். வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு பிரம்மாவின் அறிவுரைப்ப்டி இங்கு வந்து வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம் இது.
திருஞானசம்பந்தர், “பூவியலும் பொழில் வாசம் வீசப் புரிகுழலார் சுவடொற்றி முற்றப் பாவியல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே” என்று பாடுகிறார்.
2. நேபாளம்
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இதைப் பற்றி விரிவாக லிங்க புராணம் எடுத்துரைக்கிறது.
சிவபிரானின் உச்சியைப் பார்க்க பிரம்மாவும், அடியைப் பார்க்க விஷ்ணுவும் முயன்ற போது பிரம்மா தான் உச்சியைப் பார்த்து அதற்கு அப்பாலும் சென்று விட்டதாக பொய் உரைத்தார். இது உண்மை தானா? என விஷ்ணு தெய்வீகப்பசுவான காமதேனுவிடம் கேட்க காமதேனு அது உண்மை இல்லை என்பதைக் கூறும் விதமாக வாலை இல்லை என்று ஆட்டியது. ஆகவே, அது புனிதமானதாக ஆனதோடு அனைத்துக் கோயில்களிலும் வழிபடும் இடத்தைப் பெற்றது.
3. திருக்கொண்டீஸ்வரம்
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் திருக்கண்டீஸ்வரம் என்று இப்போது வழங்கப்படும் திருத்தலம் இது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் பெயர் பசுபதீஸ்வரர். அம்மன் சாந்த நாயகி. தீர்த்தம் பாற்குளம், தல விருட்சம் வில்வம்.
கொண்டி என்றால் பசு என்று அர்த்தம். இங்கு அம்பாள் பசுவாகி தனது கொம்பால் உழும் போது கொம்பு பட்டு லிங்கத்திலிருந்து இரத்தம் சொறியவே தன் மடியிலிருந்து பால் சொரிந்து காயத்தைப் போக்கினார். வியாழ பகவான் சிவபிரானை வழிபட்டு பல பேறுகள் பெற்ற தலம். தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
4. பந்தணைநல்லூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் என்று இப்போது வழங்கப்பட்டு வரும் இந்தத் திருத்தலம் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடல் அருளப்பெற்ற தலமாகும். இறைவன் நாமம் பசுபதீஸ்வரர் அம்மன் நாமம் வேணுபுஜாம்பிகா. தல விருட்சம் சரக்கொன்றை மரம், தீர்த்தம் சூரிய தீர்த்தம்.
பார்வதி தேவி ஒரு சமயம் பந்து விளையாட ஆசைப்பட, சிவபிரான் நான்கு வேதங்களையும் நான்கு பந்துகளாக ஆக்கித் தந்தார். விளையாட்டில் நேரம் போவது தெரியாமல் தேவி விளையாடிக் கொண்டே இருக்க, சூரியன் மறையாமல் இருக்க ரிஷிகள் சந்தியாவந்தனம் செய்ய முடியாமல் தவித்தனர். சூரியனிடம் அவர்கள் முறையிட சூரியன் சிவபிரானிடம் முறையிடுகிறார். இதனால் தேவியை ஒரு பசுவாகப் பிறக்கும்படி சிவன் சபிக்க, தேவி பசுவாக இங்கு வந்து வழிப்பட்ட தலமாகும் இது. இங்கு வழிபட்ட காம்போஜ தேச மன்னன் தன் குருடு நீங்கப் பெற்றான். அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த அற்புத தலம் இது.
5. கருவூர்
இறைவன் நாமம் பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர். அம்மன் நாமம் சௌந்தர்யநாயகி. தல விருட்சம் வஞ்சி, தீர்த்தம் தடாகை தீர்த்தம். வஞ்சிவனம் என்று பெயர் பெற்ற இந்தத் தலத்தில் காமதேனு அங்கு புற்றில் இருந்த லிங்கத்திற்குப் பால் சொரிந்து வழிபடவே மகிழ்வுற்ற சிவபிரான் காமதேனுவிற்கு படைக்கும் ஆற்றலைத் தந்தார்.
படைப்பாற்றலால் கர்வம் கொண்டிருந்த பிரம்மா இதனால் கர்வம் நீங்கி சிவனை வழிபடவே அவருக்கே படைப்புத் தொழிலை சிவன் மீண்டும் தந்தார். காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார். பல பெருமைகளைக் கொண்ட இந்த ஊரில் தான் கருவூர்த்தேவர் அவதரித்தார். ஆக, இந்த ஐந்து தலங்களும் பசுவின் மகிமையை உலகிற்கு உணர்த்திய தலங்களாகும்.
பசுவின் அருளைப் பெற ஒரு சின்ன வழி பசுபதீஸ்வரரின் வழிபாடு. அத்துடன் அகத்திக்கீரையை பசுவிற்குக் கொடுத்து வழிபட்டால் சகல தடைகளும் நீங்கும். காரிய சித்தி உண்டாகும்.
கன்றுடன் இருக்கும் காமதேனுவின் படத்தை அதில் உள்ளிருக்கும் தேவர்களுடன் கூடிய சித்திரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். சின்ன வழி தான்! ஆனால் செல்வம் சேரும் வழியாயிற்றே!!