சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர்தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகையால்தான், அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச் சன்னிதி ஒன்று இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும் பைரவருக்கும் இருக்கும்.
ஒருவர் பயத்தை நீக்குவது, எதிரி தொல்லைகளில் இருந்து காப்பது, கடன் தொல்லைகள் தீர்ப்பது என வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த தெய்வம்தான் பைரவர். அத்தகைய பைரவரை நாம் எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவரை ராகு கால நேரத்தில் வழிபட வேண்டும். அப்படி வழிபடும்போது வடை மாலை சாத்தி ருத்ராபிஷேகம் செய்தால் பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீர்வதுடன், திருமணத் தடைகள் நீங்கும். இத்துடன் பைரவருக்கு முந்திரி மாலையும் புணுகும் சாத்தி வழிபட்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் பைரவருக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். அது மட்டுமின்றி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதும், புணுகு சாத்துவதும், சந்தனக் காப்பு செய்து வழிபடுவதும் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபடுவதால் கடன் தொல்லைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் நாம் இழந்த பொருள், செல்வம் அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
புதன்கிழமை: புதன்கிழமையில் பைரவரை நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் வீடு, மனை, சொத்து, செல்வம் சேர்வதற்கான அனுகூலம் கிடைக்கும். அது மட்டுமின்றி, தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய இந்த நாளில் பைரவரை வணங்கி வரலாம்.
வியாழக்கிழமை: வியாழக்கிழமைகளில் பைரவரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கும். அதாவது, கண் திருஷ்டி மட்டுமின்றி, நமக்கு வேண்டாதவர்கள் நமக்குக் கெடுதல் செய்ய நினைத்து செய்யும் அனைத்து தீய செயல்களும் வேரோடு அழிய வியாழக்கிழமை வழிபாடு உகந்தது.
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமையில் பைரவரை வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதும், வில்வ மாலை கொண்டு வழிபாடு செய்வதும் நம்முடைய வாழ்க்கையில் சகல செல்வத்தையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.
சனிக்கிழமை: சனி பகவானின் குரு பைரவர். ஆகையால், சனிக்கிழமையில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டால் சனியின் பாதிப்பான ஏழரை சனி, அஷ்டம சனி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் நீங்கும்.
இத்துடன் பைரவருக்கு அஷ்டமி தினம் மிகவும் உகந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி இந்த இரண்டிலும் பைரவரை வழிபடுவது மேலும் சிறப்பானது. நம்முடைய கடன் துன்பங்கள் தீர தேய்பிறை அஷ்டமியிலும், வாழ்க்கையில் செல்வ வளம் வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்பவர்கள் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவரை வணங்க வேண்டும்.