
இராமாயணத்தில் வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம், துளசி இராமாயணம் என பல வகையான இராமாயண காவியங்கள் உள்ளன. 'வேதங்களின் சாரம்' என்று அழைக்கப்படும் இராமாயணத்தை வால்மீகி இருபத்தி நான்காயிரம் ஸ்லோகங்களில் இயற்றினார். இருபத்தி நான்கு அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திரத்தின் விரிவாக்கமே இராமாயணம்.
பன்னிரு ஆழ்வார்களில் குலசேகராழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது அவருடைய வரலாற்றைப் படித்தால் எளிதில் விளங்கும். இராமாயணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை ஆழ்வார்கள் ஆங்காங்கே தங்கள் பிரபந்த பாசுரங்களில் பாடி உள்ளனர். ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களில் இடம் பெற்ற இராமாயண நிகழ்வுகளை நிரல் நிறையாகத் தொகுத்து அளித்தவர் வியாக்கியானச் சக்கரவர்த்தி ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை. பாசுரங்களில் இருந்து தொகுக்கப்பட்ட காரணத்தினால் இந்த இராமாயணம் 'பாசுரப்படி இராமாயணம்' என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தங்களிலிருந்து உரிய பாசுர வரிகளை எடுத்து பத்து நிமிடங்களுக்குள் பாராயணம் செய்து விடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இராமாயணமே 'பாசுரப்படி இராமாயணம்' என அழைக்கப்படுகிறது.
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது சுருக்கமான இந்த இராமாயண நூல்.
பெரியவாச்சான் பிள்ளை யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருமகனாய் தஞ்சாவூருக்கு அருகில் அமைந்த திருவெள்ளியங்குடி என்னும் ஊருக்கு அருகில் அமைந்த சங்கநல்லூர் என்னும் ஊரில் கி.பி.1167 ஆம் ஆண்டில் ஆவணி ரோகிணியில் அவதரித்தவர். ஆவணி ரோகிணியில் அவதரித்த காரணத்தினால் இவருக்கு 'ஸ்ரீகிருஷ்ணர்' என்ற திருநாமத்தை இவருடைய பெற்றோர் சூட்டி மகிழ்ந்தனர். இவர் நம்பிள்ளையின் சிஷ்யராவார். இராமாயண அர்த்த விசேஷங்களை இவர் எடுத்துரைத்த காரணத்தினால் 'இராமாயணப் பெருக்கர்' என்றும் அழைக்கப்பட்ட பெருமை உடையவர்.
பால காண்டம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
பாசுரப்படி ராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்து வந்தால், நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும், ராமாயணத்தை பாராயணம் செய்த பலனும் கிடைக்கும். இதை தினமும் பாராயணம் செய்யும் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவனும் மக்கட்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.