தான தர்மம் செய்வதற்கு முன்பு, நாம் தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வது அவசியம். தர்மம் என்பது யாரும் கேட்காமல், தேவைப்பட்ட ஒருவருக்கே கூட அது தெரியாமல் செய்யக்கூடிய நன்மையாகும். இது புண்ணிய கணக்கில் சேரும். தானம் என்பது பிறருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலையை எடுத்துக் கூறி அறிந்த பிறகோ தருவது தானம் ஆகும்.
ஒருவர் பசியால் வாடும்போது தனது பசியைக் கூறி உதவி கேட்க, இவர் கொடுப்பது தானமாகும். அதுவே அவர் பசி அறிந்து, அவர் கேட்காமலே அவருக்கு உணவு அல்லது உதவி செய்வது தர்மமாகும். நல்ல காரியங்களுக்காக நாம் தருவதை தர்மம் என்று சொல்லலாம். இது நம் தலைமுறையை தாண்டியும் காக்கும். நம்மை விட வசதி குறைந்தவர்களுக்கு அவர்கள் கேட்கும்போது நாம் தருவதை தானம் என்று சொல்லலாம்.
தர்மம் என்பது நாமாக மனம் ஒப்பிக் கொடுப்பது. இதில் எதிர்பார்ப்பு எதுவும் இருக்காது. பொதுநலம் கருதியும் செய்வது இதில் அடங்கும். உதாரணமாக, கோயில் கும்பாபிஷேகம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவது. பொதுவாகவே, தானமாக இருந்தாலும் தர்மமாக இருந்தாலும் அதை அவரவர் இடத்திற்கு சென்று தர வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இன்றைக்கு இதை யாரும் பொதுவாக பின்பற்றுவதில்லை.
கர்ணன் தர்மங்கள் நிறைய செய்து புண்ணியங்களை ஈட்டியவன். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ண பகவான் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர, தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாக தாரை வார்த்துத் தந்த பிறகு கர்ணன் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கேட்டுக் கொடுப்பது தானம், கேட்காமலே கொடுப்பது தர்மமாகும்.
மொத்தம் 32 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்று வேதங்களும் சைவ சித்தாந்தங்களும் கூறுகின்றன. அன்னதானம், ஆடை தானம், பழ தானம், ருத்ராட்ச தானம், பூ தானம், கோ தானம், கன்னிகா தானம், எண்ணெய் தானம், விருட்ச தானம், சொர்ண தானம், தண்ணீர் தானம், குடை தானம், காலணிகள் தானம், வெந்நீர் தானம், பூமி தானம், கல்வி தானம் என்று 32 வகையான தானங்கள் உள்ளன.
வேதாந்த சாஸ்திரங்களின்படி எது தாங்குகின்றதோ அதுவே தர்மம் என்று கூறுகிறது. தனிமனித தர்மம், சமூக தர்மம், தேசிய தர்மம் மற்றும் மனித சமூகத்திற்கான தர்மம் என்று தர்மங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தர்மம் என்பது ஒருவர் தனது செய்கையால் தனது குடும்பத்தினருக்கும், தனது சந்ததியினருக்கும், தனது தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் ஆகும். தர்மம் தலைகாக்கும், தர்மம் செய்ய கருமம் தீரும் என தர்மம் பற்றி பழமொழிகள் பல உண்டு. தானத்தை விட தர்மம்தான் உயர்ந்தது. ஏனெனில், தர்மம் என்பது கேட்காமலே கொடுக்கப்படுவது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது.