

காலண்டர் (Calendar) என்பது, நாட்களை, வாரங்களை, கிழமைகள், மாதங்களை மற்றும் வருடங்களை ஒழுங்கமைத்து, காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு அமைப்பு அல்லது அட்டவணை ஆகும். காகிதத்தில் அச்சிடப்படும் காலண்டர்கள், உலகம் முழுவதும் நாடுகளால் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக இந்த காலண்டர்கள் சூரிய அல்லது சந்திர இயக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. தமிழில் இதனை 'நாட்காட்டி' என்றும் அழைக்கின்றனர். சுருக்கமாக, காலண்டர் என்பது காலத்தை அளக்கவும், திட்டமிடவும் உதவும் ஒரு கருவியாகும்.
தற்போது மக்களை கவரும் வகையில் புத்தாண்டுக்கு வரும் காலண்டர்களில் சுவாமி படங்களை பிரிண்ட் போட்டு விற்பனை செய்கிறார்கள். மற்றும் நகை, துணிக்கடை மற்றும் பொருட்களை வாங்கும் கடைகளில் சுவாமி படத்தை அச்சிடப்பட்ட காலண்டர்களை இலவசமாக கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் தினசரி பார்க்கும் காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, அஷ்டமி, நவமி, நட்சத்திரம், திதி, சூரிய உதயம், விசேஷ நாட்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
சாமி படங்கள் அச்சிடப்பட்ட புதிய காலண்டர்களை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி மாட்டுவது நல்லது. இதனால் வளர்ச்சி உண்டாகும்.
புத்தாண்டு பிறந்தவுடன் அனைவருக்கும் புதிது புதிதாக சுவாமி படம் போட்ட காலண்டர்கள் கிடைக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பழைய காலண்டரை என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் சுவாமி படம் போட்ட பழைய காலண்டர் அட்டையை என்ன செய்வது? பழைய சுவாமி காலண்டரை வீட்டில் வைக்கலாமா? பழைய காலண்டருக்கு மேல் புதிய காலண்டரை மாட்டி வைக்கலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ளலாம் வாங்க...
நிறைய காலண்டர் கிடைத்து விட்டது என்பதற்காக வீடு முழுவதும் பல காலண்டர்களை மாட்டி வைப்பதும் தவறான செயலாகும். தேவைக்கேற்ற அளவில் ஒன்று அல்லது இரண்டு காலண்டர்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புத்தாண்டிற்குப் புதிய காலண்டர்கள் வாங்கி மாட்டும்போது, பழைய காலண்டர்களில் உள்ள தெய்வங்களின் படங்களை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.
அதாவது பழைய காலண்டரில் உள்ள சுவாமி படம் அழகாக உள்ளது என்பதற்காக அதை அப்படியே மாட்டி வைக்கக்கூடாது. பழைய காலண்டர் மேல் புதிய காலண்டரை மாட்டி வைப்பதும் தவறான செயலாகும்.
இவ்வாறு செய்யும் போது தான் பிரச்னைகளே ஆரம்பமாகிறது. வீட்டில் எதனால் கஷ்டம் வருகிறது என்றே தெரியவில்லை, குடும்பத்தில் கஷ்டம், வறுமை என்று சிலர் புலம்புவதை கேள்விபட்டிருப்பீர்கள்.
பழைய காலண்டர் மேல் புதிய காலண்டரை மாட்டி வைப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக அமையும். குடும்பத்தில் கஷ்டம் குறையவே குறையாது. இதனால் கிழிந்த காலண்டர் மற்றும் பழைய காலண்டரை உடனடியாக அகற்ற வேண்டும். பழைய காலண்டர் அட்டைகளில் உள்ள சாமி படங்களை குப்பைத் தொட்டியில் போடாமல், ஓடும் நீரில் விடுவது அல்லது பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது சிறந்த முறை என ஆன்மீக ரீதியாக பரிந்துரைக்கப்படுகிறது.
சுவாமி படம் போட்ட காலண்டரை குப்பையில் போட சிலருக்கு மனசு வராது. அவர்கள் அந்த சுவாமி படம் போட்ட காலண்டரை கோவிலில் கொண்டு சென்று மரத்தடியில் வைத்து விடுவார்கள். அப்படி செய்வது மிகவும் தவறான செயலாகும்.
நம் வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை கோவிலுக்கு கொண்டு போய் வைத்து கோவிலில் உள்ள இடத்தை அசுத்தம் செய்து விட்டு நாம் வருகின்றோம். இது மேலும் பாவத்தை சேர்க்கக்கூடிய செயல்.
காலண்டரில் இருக்கும் சுவாமியின் அட்டை படத்தை ஸ்டிக்கர் போல் ஒட்டித்தான் வைத்திருப்பார்கள். அந்த ஸ்டிக்கரை மட்டும் பிரித்து எடுத்து தண்ணீரில் ஊற வைத்து நன்றாக ஊறியதும் கரைத்து கொட்டி விடலாம். இந்த முறையிலும் காலண்டரை நீங்கள் அப்புறப்படுத்தலாம்.
அழகாக இருக்கும் சுவாமி காலண்டரை பூஜை அறையில் மாட்டி பூஜை செய்வது மிகப்பெரிய தவறு. பூஜை அறையில் பூஜை படங்களுக்கு மத்தியில் காலண்டரை வைத்து பூஜை செய்யக்கூடாது.
பழைய காலண்டர்கள் உங்கள் வீட்டில் இருக்க, இருக்க உங்கள் வாழ்வில் பழைய பிரச்னைகளும் உங்களுடனே இருக்கும் என்கிறார்கள் ஆன்மிக சான்றோர்கள். உடனே சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் வீட்டில் உள்ள பழைய காலண்டர்களை அப்புறப்படுத்தி விடுங்கள் நண்பர்களே!