காசியபர் முனிவருக்கு மகனாகப் பிறந்தவர் தும்புரு. இவர் குதிரையின் முகமும், மனித உடலும் கொண்டவர். தேவலோகத்தின் ஆஸ்தான இசைக் கலைஞர். இவரும் நாரதரும், வீணை வாசிப்பதில் வல்லவர்கள். நாரதரின் வாசிப்பை நாரத கானம் என்றும், தும்புருவின் வாசிப்பை தேவ கானம் என்றும் கூறுவர். தும்புருவின் கையில் இருக்கும் வீணைக்கு 'கலாவதீ' என்று பெயர். நாரதரின் கையில் இருக்கும் வீணைக்கு, 'மகதி' என்று பெயர். நாரதரிடமிருந்து பல இசை நுணுக்கங்களை தும்புரு பயின்றதால், நாரதரை தும்புருவின் குரு என்றே கூறலாம். தும்புருவை கந்தர்வர்களின் தலைவன் என்றும் கூறுவர்.
இருவருமே சிறந்த விஷ்ணு பக்தர்கள் என்பது எல்லோருமே அறிந்த விஷயம்தான். இருவரும் வீணை வாசிப்பதில் வல்லவர்கள். எப்பொழுதுமே கலை என்று ஒன்று இருந்தால் கர்வம் என்பது கூடவே வரும் அல்லவா? இருவருக்கும் அவரவர் வாசிப்பதுதான் சிறந்த இசை என்கிற கர்வம் மேலோங்கி இருந்தது.
தங்களின் இசை வல்லமையை தீர்மானித்துக் கொள்வதற்காக இருவரும் மகாவிஷ்ணுவை அணுகி, வீணையை வாசித்துக் காட்டினார்கள். மகாவிஷ்ணு, “இருவருமே திறம்பட வாசிக்கிறீர்கள். எனக்கு யாருடைய இசை உயர்ந்தது என்று கூறத் தெரியவில்லை. ஒன்று செய்யுங்கள். அனுமன் சகலகலா வல்லவன். அவரிடம் சென்று நீங்கள் வீணை வாசித்துக் காட்டினால் யாருடைய வீணை இசை சிறப்பாக இருக்கிறது என்று அவரால் கூற முடியும்” என்று கூறினார்.
இருவரும் அனுமனிடம் சென்றார்கள். “இது என்ன புதிய வம்பாக இருக்கிறது. இரண்டு பேருமே நன்றாகத்தானே வாசிப்பீர்கள். இதில் என்ன சந்தேகம்? சரி உங்கள் ஆசையை கெடுப்பானேன். மேலும், பகவானே உங்களை என்னிடம் அனுப்பி இருக்கிறார். முதலில் தும்புரு நீங்கள் வாசியுங்கள். அடுத்தது நாரதர் வாசிக்கட்டும்” என்று கூறிவிட்டு இருவருக்கும் எதிரில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டார் அனுமன்.
அனுமன் கூறியபடி முதலில் தும்புரு வீணையை வாசித்தார். அப்பொழுது பறந்து கொண்டிருந்த பட்சிகள், தவழ்ந்து கொண்டிருந்த கடல் அலைகள், அசைந்து கொண்டிருந்த தாவரங்கள் எல்லாம் அப்படியே நின்று விட்டன. அடுத்தது நாரதர் தனது வீணையை எடுத்து இசைத்தார். பட்சிகள் பறக்கத் தொடங்கின. கடல் அலைகள் தவழத் தொடங்கின. தாவரங்கள் காற்றில் தலை அசைத்தன. இப்படி நிகழ்ந்ததைக் கண்ட தும்புருவிற்கும் நாரதருக்கும், அனுமன் யாருக்கு சாதகமாக பதில் சொல்லப் போகிறார் என்கிற ஒருவித தயக்கம் எழுந்தது.
“யார் வீணை வாசிப்பதில் வல்லவர் என்கிற தீர்ப்பை எனக்கு இப்பொழுது கூற முடியாது. நீங்கள் இருவரும் உங்கள் வீணை கருவிகளை என்னிடம் தாருங்கள்” என்று கூறி, இரண்டையும் வாங்கி, அந்தப் பாறையின் மேல் தனக்கு அருகில் வைத்துக் கொண்டார்.
ஒரு வீணையை எடுத்து அவர் இசைக்கத் தொடங்கினார். தும்புரு, நாரதர் உட்பட அனைத்து ஜீவராசிகளும் மெய் மறந்து அந்த இசையை ரசிக்கத் தொடங்கினார்கள். பகவானே இறங்கி வந்து அவர்களுக்கு நடுவில் அனுமனின் இசையை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தது கூட அவர்களுக்குத் தெரியாது. அப்பொழுது அனுமன் அமர்ந்திருந்த பாறை மெல்ல உருகத் தொடங்கியது. அனுமன் அந்தப் பாறையில் தான் வாசித்த வீணையோடு பகவானை நமஸ்கரித்து விட்டு நகர்ந்து கொண்டார். அவர் எழுந்ததும் பாறை மீண்டும் இறுகத் தொடங்கியது. இதில் பாறையில் ஒரு வீணை சிக்கிக் கொண்டது.
“இப்பொழுது ஒரு வீணை பாறையில் மாட்டிக்கொண்டு உள்ளது அல்லவா? உங்கள் இருவரில் யார் வாசித்தால் இந்த பாறை உருகி அந்த வீணையை எடுக்க முடியுமோ அவரே வீணை வாசிப்பதில் வல்லவர் என்று நான் தீர்ப்பு கூறுவேன்” என்றார். இருவரும் “ஐயனே வைகுண்டத்தில் இருந்து பகவானே உங்கள் இசைக்கு மயங்கி இங்கே எழுந்தருளியுள்ளார் என்றால் நாங்கள் எம்மாத்திரம்? எங்களையெல்லாம் விட நீங்கள்தான் வீணை வாசிப்பதில் சிறந்தவர் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்களின் கர்வம் அழிந்தது. ஆகையால், இந்த வீணையை நீங்களே எடுத்துக் கொடுத்து விடுங்கள்” என்று பணிவுடன் கோரி நின்றார்கள்.
அனுமனும் மீண்டும் வீணை வாசித்து, பாறையில் சிக்கி இருந்த வீணையை மீட்டுக் கொடுத்தார். அனைவரும் ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரித்துக் கொண்டார்கள்.