“மணிவாசகன் சொல்லச் சிற்றம்பலத்தான் கையெழுத்து”- இது என்னன்னு தெரியுமா மக்களே?

lord shiva and Maanikavasagar
lord shiva and Maanikavasagar
Published on

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”

“தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்.”

இவ்வாறு பலவிதமாகப் போற்றப்படும் திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சைவக் குரவர்கள் நால்வருள் முதல் மூவர் பாடிய பதிகங்கள் தேவாரம் என்று முதல் ஏழு திருமுறைகளாக வைத்துப் போற்றப்படுகின்றன. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் இரண்டும் எட்டாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகின்றன.

திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகராக இருக்கலாம். ஆனால் அதைக் கைப்பட எழுதியவர் யார் தெரியுமா? பார்க்கலாம் வாருங்கள்.

மாணிக்கவாசகர் பல சிவாலயங்களைத் தரிசித்துவிட்டு தில்லையை அடைகிறார். அங்கு அருள்புரியும் அம்பலவாணரை நித்தமும் வணங்கி, பல அற்புதங்களை நிகழ்த்துகிறார். ஒருநாள் எல்லாம் வல்ல ஆடல்வல்லான் வேதியர் உருவில் மாணிக்கவாசகர் முன் தோன்றுகிறார். பல ஊர்களிலும் உள்ள சிவாலயங்களைத் தொழுது அவர் பாடிய பாடல்களை எல்லாம் சொல்லச் சொல்கிறார் வேதியர் உருவில் வந்த சிவபெருமான்.

மாணிக்கவாசகரும் அதற்கு இசையவே, ஓலைச் சுவடிகளை வைத்துக்கொண்டு எழுதத் தயாராகிறார் அம்பலவாணர். “நமச்சிவாய வாழ்க” எனத் தொடங்கும் சிவபுராணத்தை முதலாக எம்பெருமான் எடுத்துக் கொடுக்கிறார். அவர் எடுத்துக் கொடுத்தபடியே “நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” எனத் தொடங்கும் சிவபுராணம் தொடங்கி, கீர்த்தி திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை என வரிசையாக அச்சோப்பதிகம் வரை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, வேதியராக வந்த சிவபெருமான் தன் கைப்பட ஓலைச் சுவடிகளில் எழுதுகிறார்.

“பாவை (திருவெம்பாவை) பாடிய வாயால் கோவை பாடுக,” என வேதியர் கேட்கவும், மாணிக்கவாசகர் திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் சுவடியில் எழுதி “மணிவாசகன் சொல்லச் சிற்றம்பலத்தான் கையெழுத்து” எனக் கையொப்பமிட்டு, சுவடிகளைப் பஞ்சாட்சரப்படியில் வைத்து மறைகிறார். வேதியராக வந்தவர் எம்பெருமானே என்பதை உணர்ந்து நெகிழ்கிறார் மாணிக்கவாசகர்.

இதையும் படியுங்கள்:
திருவாசகம் ஒரு அறிவாசகம்!
lord shiva and Maanikavasagar

மறுநாள் காலை பஞ்சாட்சரப்படியில் சுவடிகளைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் அதிசயித்தனர். சுவடியின் முடிவில் நடராஜப் பெருமானின் கையொப்பம் இருப்பதைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரை நாடி விவரம் அறிந்தார்கள். சுவடியில் இருக்கும் பாடல்களின் பொருளை எடுத்துரைக்குமாறு அவரிடம் வேண்டி நிற்கின்றனர். தில்லைவாழ் அந்தணர்களுடன் சிற்றம்பலத்தை அடைந்த மாணிக்கவாசகர், கூத்தப் பெருமானின் குஞ்சிதபாதமே இப்பாடல்களுக்கு விளக்கம் என்று கூறி இறைவனோடு இரண்டறக் கலந்தார். அந்த நாளே ஆனி மக நன்னாள் ஆகும்.

ஆக, திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் என்றாலும், அதைக் கைப்பட எழுதியவர் சிவபெருமாள் என்ற தகவல் மெய்சிலிர்க்கவைக்கிறதல்லவா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com