
பெருமாள் மூன்றடிகளில் உலகை அளந்தவர். அதனால், அவருக்குள்ளே உலகம் மட்டுமல்ல, அண்ட சராசரமும், அனைத்து கிரகங்களும், உலகங்களும் அடக்கம். பெருமாளை வழிபட்டாலே நவகிரகங்களையும் சேர்த்துக் கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது வைணவர்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அப்படி இருக்க, தனியாக ஏன் ஒரு நவகிரக சன்னிதி வைத்து வழிபட வேண்டும்? தேவையற்றது அல்லவா. அதனால்தான் பெருமாள் கோயில்களில் நவகிரகங்கள் இல்லை.
மேலும், திருமால் கோயிலில் திருமால்தான் மிக உயர்ந்தவர் ஆவார். வைணவர்களை பொறுத்தவரையில் எல்லாமே பெருமாள்தான். ராமாவதாரம் சூரியனோடும், கிருஷ்ணாவதாரம் சந்திரனோடும், நரசிம்மாவதாரம் செவ்வாயோடும், கல்கி அவதாரம் புதனோடும் தொடர்புடையவர் ஆவர்.
அதேபோல், வாமனாவதாரம் குருவோடும், பரசுராமாவதாரம் சுக்ரனோடும், கூர்மாவதாரம் சனி பகவானோடும், மச்சாவதாரம் கேதுவோடும், வராக அவதாரம் ராகுவோடும், பலராமாவதாரம் குளிகன் என்று பெருமாளின் அவதாரங்கள் அனைத்து கிரகங்களோடும் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளும் நவகிரக தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை: ஸ்ரீவைகுண்டம் - சூரிய தலம், வரகுணமங்கை - சந்திரன் தலம், திருக்கோளூர் - செவ்வாய் தலம், திருப்புளியங்குடி – புதன் தலம், ஆழ்வார்திருநகரி - குரு தலம், தென்திருப்பேரை - சுக்ரன் தலம், பெருங்குளம் – சனி தலம், இரட்டை திருப்பதி, தேவர்பிரான் ராகு தலம், இரட்டை திருப்பதி, அரவிந்த லோசனர் - கேது தலம்.
இப்படியாக, அனைத்துமாகி நிற்பவனே நாராயணன். மேலும், பெருமாளின் சுப்ரபாதத்தில்,
‘சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்’
என்று வருகிறது.
இதற்கான பொருள், ‘நவகிரகங்கள் அனைத்தும் பெருமாளின் தரிசனத்தையும் அருளையும் பெறக் காத்துக் கிடக்கிறார்கள்’ என்பதாகும். ஆகவே, நவகிரகங்கள் அனைத்தும் பெருமாளுக்குள் அடக்கம் என்பது நிதர்சனம். இதனால்தான் பெருமாள் கோயிலில் நவகிரக சன்னிதி தனியாகக் கிடையாது.