துஷ்யந்தன் ஏன் சகுந்தலையை மறந்தான்?

துஷ்யந்தன் சகுந்தலை
துஷ்யந்தன் சகுந்தலை
Published on

பெரியோர்கள் பார்த்து வைத்து நிச்சயித்த  திருமணமோ அல்லது காந்தர்வ திருமணமோ எப்படி இருந்தாலும், எதிர்வரும் காலத்தில் ஒருவரையொருவர் மறந்து விடுவோம் என்று அந்த சமயத்தில் எண்ணி இருக்க மாட்டார்கள். ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது ஆச்சரியத்திற்கு உரியதுதான். ஆம். துஷ்யந்தன் சகுந்தலையை மணந்து கொண்டதையே மறந்து விட்டிருந்தான் என்பது வியப்புக்குரிய செய்திதான். எதனால் அவன் சகுந்தலையை மணந்து கொண்டதையே மறந்து போனான்?

பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற வேண்டி,  விசுவாமித்திரர் கடும் தவத்தை மேற்கொண்ட பொழுது, இந்திரனுக்கு தன்னுடைய பதவி பறிபோய் விடுமோ என்கிற பயம் உண்டானது. அதனால் அவன் தேவலோக மங்கை மேனகையை பூமிக்கு அனுப்பி  விசுவாமித்திரரின் தவத்தை கலைக்க ஏற்பாடு செய்தான். அவன் நினைத்தது நடந்தது.

விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த பெண்ணை,  காட்டிலேயே விட்டுவிட்டு, மேனகை தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பதால் தேவலோகம் திரும்பினாள். விசுவாமித்திரரும் தன்னுடைய தவம் கலைந்தது என்பதால் மேற்கொண்டு தவத்தை மேற்கொள்ள அவ்விடம் விட்டு அகன்றார்.

தன்னுடைய ஆசிரமத்திற்கு அருகில் காட்டில் தனியாகக் கிடந்த பெண் குழந்தையை கண்வ மகரிஷி, சகுந்தலை என்று பெயரிட்டு, மிகவும் பாசத்தோடும் பரிவோடும் வளர்த்து வந்தார். அப்பொழுது அஸ்தினாபுரத்தை ஆண்டுவந்த அரசன், வேட்டையாட அந்த காட்டிற்கு வந்த பொழுது அவன் எய்த அம்பு ஒரு மானின் காலை காயப்படுத்தியது. அந்த மானின் காலுக்கு மருந்து தடவி போஷித்த சகுந்தலையைக் கண்டான்  மன்னன் துஷ்யத்தன். சகுந்தலையும் அவனைக் கண்டாள். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மையல் கொண்டார்கள்.அவர்கள்  காட்டில் காந்தர்வ மணம் புரிந்து கொண்டார்கள் என்கிற கதை எல்லோருக்குமே தெரியும்.

தனது நாட்டிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால் துஷ்யந்தன் சகுந்தலையிடம்,  முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டு, ‘விரைவில் திரும்பி வருவேன். கவலைப்படாதே’ என்று கூறிவிட்டுச் சென்றான். சென்றவன் சென்றவன்தான் பல காலமாக வரவே இல்லை.

சகுந்தலைக்கு துஷ்யந்தனின் ஞாபகம் அதிகமாக இருந்தது. அவ்வப்பொழுது அவள் தனிமையில் அமர்ந்து அவனைப் பற்றிய நினைப்புகளில் மூழ்கியபடி இருந்தாள். ஒரு நாள் அப்படி  அந்நிலையில் அவள் இருந்த பொழுது துர்வாச முனிவர், கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகை தரும்படியாக நேர்ந்தது. அவர் சகுந்தலையைப் பார்த்தார். ஒரு முனிவர் வருகிறார் என்கிறபொழுது, எழுந்து மரியாதை கூட செலுத்தத் தெரியாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் மீது அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. 'ஏ பெண்ணே, நான் வருவது கூட கவனிக்காமல் யாரை நினைத்துக் கொண்டு கற்பனையில் மூழ்கிக் கிடக்கிறாய்? நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அவன் உன்னை மறந்து போவான்' என்று சாபம் கொடுத்தார். துர்வாசர் என்றாலே கோபமும் சாபமும்தான் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தானே.

இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சகுந்தலையின் தோழி முனிவரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்து, 'ஐயனே இது மிகப்பெரிய சாபம். இதற்கு ஏதாவது உபாயம் கூறுங்கள்' என்று கேட்டாள். அப்பொழுது முனிவர், 'இவளிடம் ஒரு முத்திரை  மோதிரத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான் அல்லவா? அந்த மோதிரத்தை துஷ்யந்தன் பார்த்தால் அவனுக்கு மீண்டும் இவளது ஞாபகம் வரும்' என்று கூறினார். இருவரும் முனிவரை வணங்கிக் கொண்டார்கள்.

சில நாட்களில் சகுந்தலை ஒரு அழகான ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பரதன் என்று பெயரிட்டு, சகுந்தலையையும் அவள் சிசுவையும் கண்வ மகரிஷி, வாத்சல்யத்துடன் போற்றிப் பாதுகாத்தார்.

சகுந்தலையையும் அந்த சிசுவையும் துஷ்யந்தனிடம் சேர்க்க வேண்டும் என எண்ணிய மகரிஷி அவர்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஒரு ஆற்றினை கடக்க வேண்டியிருந்தது. படகில் பயணிக்கும் பொழுது சகுந்தலை நீரில் கையை விட்டு அளைந்து சந்தோஷித்த சமயத்தில்,  அணிந்திருந்த முத்திரை மோதிரம் நீருக்குள் நழுவி விழுந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத 7 உணவுகள் எவை தெரியுமா?
துஷ்யந்தன் சகுந்தலை

அரண்மனையில் துஷ்யந்தனை சந்தித்து நடந்த விபரங்களை கண்வ மகரிஷி மன்னனுக்கு தெரிவித்தபொழுது அவன், 'இந்தப் பெண்ணை நான் பார்த்ததில்லை. இது என் புத்திரனும் இல்லை' என்று கூறி அனுப்பி விட்டான். சகுந்தலை மனமுடைந்து திரும்பினாள். துஷ்யந்தன் ஏன் அவ்வாறு கூறினார் என்றால் துர்வாச முனிவரின் சாபம் உள்ளது அல்லவா? அதனால் சகுந்தலையை அறவே மறந்து விட்டான். முத்திரை மோதிரத்தைக் காட்ட அவளிடம் மோதிரமும் இல்லை. அது ஆற்றோடு போய்விட்டது. ஆனால், இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று சாதகமான விதி எழுதப்பட்டிருந்தபொழுது, அது நிறைவேறாமல் போய்விடுமா? ஆற்றில் மீன் பிடிக்க வந்த மீனவன் ஒருவனுடைய வலையில்,  மீன்களுடன் முத்திரை மோதிரமும் சிக்கியது. முத்திரையைக் கண்டவுடன், அம்மோதிரம் அரச குடும்பத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொண்டான். அதை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்று, அரசனிடம் ஒப்படைத்தான்.

நடந்தது அனைத்தும் அவனுக்கு நினைவிற்கு வர, சகுந்தலையைச் சந்தித்த அதே காட்டிற்கு விரைந்தான். அங்கு ஒரு பாலகன், சிங்கத்தின் வாயைப் பிளந்தபடி தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தான். விசாரித்தபொழுதுதான் துஷ்யந்தனின் மகன் என்றும்,  தாயின் பெயர் சகுந்தலை என்றும் கூறினான். தனது புத்திரன் என்று அறிந்தவுடன்,  அப்பாலகனை வாரி அணைத்தபடி சகுந்தலையைச் சென்றடைந்தான். பிரிந்தவர் கூடினர். அந்த பாலகனான பரதனின் பெயரால் இந்நாடு, ‘பாரத நாடு’ என்று போற்றப்படுகிறது என்று கூறவும் வேண்டுமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com