

நம் வீட்டில் ஒரு திருமணம் முடிவானதும் நாம் முதலில் யோசிக்கும் விஷயம் பட்டுப்புடவை. திருமண நாளன்று அணியக்கூடிய பட்டினால் நெய்யப்பட்ட முகூர்த்தப் புடைவையினை ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து வாங்குவது தமிழ்நாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். காஞ்சிப் பட்டு, திருபுவனம் பட்டு, ஆரணிப்பட்டு, பனாரஸ் பட்டு என பல வகையான பட்டுப் புடைவைகள் பிரபலமாக விளங்குகின்றன. திருமணத்திற்கு அவரவர் வசதிக்கேற்ப ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை பட்டுப் புடைவைகளை வாங்குகின்றனர்.
ஒரு பட்டுப்புடைவை தயாரிக்க ஆயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. சில புடைவைகளுக்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் பட்டுப்புழுக்கள் வரை தேவை என்று கூறப்படுகிறது. தோராயமாக ஒரு பவுண்டு, அதாவது சுமார் 450 கிராம் பட்டு தயாரிக்க சுமார் மூவாயிரம் முதல் மூவாயிரத்து ஐநூறு புழுக்கள் வரை கொல்லப்படுகின்றன. ஒரு பட்டுப்புடைவையின் எடைக்கேற்ப தேவையான புழுக்களின் எண்ணிக்கை மாறுபடும்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரை பக்தர்கள் காஞ்சிப்பெரியவர், பரமாச்சாரியார், மகா பெரியவா, ஸ்ரீ ஸ்வாமிகள் என்று மிகுந்த மரியாதையோடு அழைப்பார்கள். பக்தர்களால் சிவ ஸ்வரூபமாக வணங்கப்பட்ட பெரியவர் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்டார்.
நமது பாரத தேசத்தின் ஆடை கதராடை என்ற கொள்கை ஒரு கட்டத்தில் தீவிரமாகப் பரவியது. மகா பெரியவாவும் கதராடையை ஊக்குவிப்பது அவசியம் என்று முடிவு செய்தார். 1918ம் ஆண்டில் தாம் இனி கதராடையினை அணியப்போவதாகக் கூறி அதை செயல்படுத்தவும் செய்தார். மடத்தில் பணியாற்றும் அனைவரும் இனி கதராடையினை அணிய வேண்டும் என்று கட்டளையிட, தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்யும்போது அனைவரும் தங்களுடைய மில் ஆடைகளை எறிந்து விட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்ததுடன் நில்லாமல், மதுரையிலிருந்து மடத்தைச் சேர்ந்தவர்களுக்காக நூற்றுக்கணக்கில் கதர் வேட்டிகளை வரவழைத்தார். ஒவ்வொருவருக்கும் இரண்டு கதராடைகள் வழங்கப்பட்டன.
இதுபோலவே பட்டுப்புடைவைகளைத் தயார் செய்ய ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொல்லப்படுவதை அறிந்த மகாபெரியவா பட்டுப்பூச்சிகளைக் கொல்லாமல் பட்டு நூலைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தவண்ணம் இருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களிடம் கலந்தாலோசித்தவாறு இருந்தார்.
ஒரு சமயம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து துர்காநாத் என்ற கிராமக் கைத்தொழில் விற்பனை அதிகாரி ஸ்ரீ ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் ஸ்ரீ ஸ்வாமிகள் அகிம்சை முறையில் பட்டு தயாரிக்க முடியுமா என்று கேட்டார். இதற்கு துர்காநாத், அஸ்ஸாம் மாநிலத்தில் நூலைப் பிரித்து எடுத்ததும் பூச்சிகள் உயிருடன் வெளியேறிவிடும் முறையில் பட்டினைத் தயாரிப்பதாகக் கூறினார். மேலும், இதற்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட மகாபெரியவா மகிழ்ச்சி அடைந்தார். இனி அகிம்சா பட்டினையே பயன்படுத்த வேண்டும் என்று அக்கணமே முடிவு செய்தார். மடத்தில் பூஜையில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் விக்கிரகங்களுக்கு அகிம்சா பட்டுத்துணியையே பயன்படுத்தினார்.
இதன் பின்னர் மடத்தில் செய்யப்படும் சன்மான வஸ்திரங்களும் அகிம்சா பட்டாக இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். பட்டுப் பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து கிடைக்கும் பட்டு நூலில் பட்டுப்புடைவையினைத் தயாரித்துப் பயன்படுத்துவதில் பெரியவாளுக்கு உடன்பாடில்லை. நாமும் இனி நமது வீட்டு விசேஷங்களுக்கு அகிம்சா பட்டினையே பயன்படுத்துவோம்.