கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதமிருந்து பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி ஐயப்பனை தரிசிக்க இருமுடி சுமந்து செல்வார்கள். அப்படி விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் தங்களுடன் ஒரு தென்னம்பிள்ளையையும் உடன் எடுத்துச் செல்வது எதற்காக தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி, பதினெட்டாவது வருடம் செல்லும்போது இரு முடியுடன் ஒரு தென்னங்கன்றையும் எடுத்துச் செல்லும் வழக்கம். இது காலம் காலமாக நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகப் வழக்கமாக உள்ளது. இந்த முக்கியத்துவம் தென்னனம்பிள்ளை தவிர, வேறு எந்தப் பொருளுக்கும் கிடையாது. அதாவது, மற்ற செடிகளைக் காட்டிலும் தென்னங்கன்று வளர்ந்து அது தரும் பொருட்களின் பயன்கள் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, தென்னை மரத்தில் இளநீர், தேங்காய், கொப்பரை, சிரட்டை, தென்னை ஓலை, மரம், தேங்காய் நார், தென்னங்குருத்து ஆகியப் பொருட்கள் கிடைக்கின்றன.
நல்ல நேரம் ஒன்றில் தென்னங்கன்று ஒன்றை வாங்கி வந்து அதை நமது பூஜை செய்யும் சுவாமி ஐயப்பன் படத்தின் அருகில் ஒரு தாம்பாளத் தட்டு ஒன்றில் ஆற்று மணல் பரப்பி அதன் நடுவே வைத்து தூய நீரை தெளித்து விட வேண்டும். தென்னங்கன்றின் அடிப்பகுதியான தேங்காயில் மூன்று பக்கமும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். தினசரி சுவாமிக்கு பூஜை முடிந்தவுடன் ஆரத்தி காண்பிக்கும்போது தென்னங்கன்றுக்கும் ஆரத்தி காண்பித்து பக்தியோடு அதை வணங்க வேண்டும்.
இருமுடி கட்டும் நாளில், பூஜை அறையில் உள்ள தென்னங்கன்றை இருமுடி கட்டும் இடத்தில் ஐயப்ப சுவாமி படத்தின் அருகே வைத்து இருமுடி கட்ட வேண்டும். கட்டி முடித்தவுடன் தென்னங்கன்றை தோளில் மாட்டக்கூடிய சிறிய அளவில் உள்ள பையில் தேங்காய் மறைந்து செடி வெளியில் தெரியும்படி வைத்து சபரிமலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கூடவே ஒரு சிறு பையில் விபூதியை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏனென்றால், பதினெட்டாவது சபரிமலை பயணம் புனிதமானது. அதிலும் தென்னங்கன்றை பார்த்தவுடன், ‘இவர் பதினெட்டாவது ஆண்டுகளாக ஐயப்பனைக் காண சபரிமலை வரும் குருசாமி’ என்று எண்ணி சுவாமிமார்கள் நம்மிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். பிறகு அந்தத் தென்னங்கன்றை சுவாமி சன்னிதானத்தின் பின்புறம் உள்ள பஸ்ம குளத்தின் அருகே வைத்து விட வேண்டும்.
தென்னையை நாம் மனித இனத்திற்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால்தான் அதை தென்னம்பிள்ளை என்று அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச் சென்று அங்கே நடுகிறோம். இதற்காகத்தான் சபரிமலை செல்லும்போது தென்னம்பிள்ளையை ஐயப்ப சுவாமிகள் உடன் எடுத்துச் செல்கிறார்கள்.