பருவகால நிலைகள் மாறும்போது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஈரக்காற்று, பனிக்காற்று இரண்டும் காது மற்றும் மூக்குக்குள் நுழைந்து தலைபாரம் முதல் மூச்சிரைப்பு வரை ஏற்படுத்தி அவஸ்தையை கொடுக்கும். இந்தப் பிரச்னைகள் வராமல் தடுப்பது குறித்தும் வந்த பின் செய்யும் இயற்கை வைத்தியங்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
வருமுன் காப்போம்:
* குளிர்காலத்தில் நம்முடைய காதுகள் குளிர் காற்றை உள்ளிழுத்து கபாலத்தில் சேர்த்து தலை பாரத்தை ஏற்படுத்தும் என்பதால் வண்டியில் வேகமாக செல்லும்போதும் வாகனங்களில் ஜன்னலோர இருக்கையில் அமரும்போதும் காதுகளில் பஞ்சு அல்லது உள்ளன் ஸ்கார்ப் கட்டிக்கொள்ள வேண்டும்.
* தூதுவளை ரசம், பச்சை சுண்டைக்காய், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, பிஞ்சுக் கத்தரிக்காய், பாகற்காய், பப்பாளி, அன்னாசி என உடலில் சளி சேராமல் தடுக்கக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுவதோடு கோதுமை உணவுகளை குளிர்காலத்தில் அதிக சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும்.
* மூட்டு வலி இருப்பவர்கள் குளிர்காலத்தில் வெறுங்காலுடன் தரையில் நடக்கவோ, படுக்கவோ கூடாது.
* சுவைகளில் இனிப்பு, உப்பு, புளிப்பு தவிர்த்து காரம், கசப்பு, துவர்ப்பை அதிகமாக எடுக்க வேண்டும்.
* பாலுக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும் 'நோ' சொல்லி உருக்கிய நெய், தாளித்த மோர் என்றால் ஓகே சொல்லலாம். கூடவே கேரட், பீட்ரூட், புளித்த மாவு உள்ளிட்ட உடலை மந்தமாக்கும் உணவுகளையும் தவிர்த்து விட வேண்டும்.
* ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள், சீஸ், பனீர் போன்றவற்றையும் தவிர்த்து விடுவது நன்மை பயக்கும்.
குளிர்காலத்திற்கான இயற்கை வைத்தியங்கள்:
* மூட்டுகளில் வீக்கம், வலி, விறைப்புத்தன்மை இருப்பவர்கள், வீக்கத்தின் மீது கற்பூராதி தைலம் அல்லது வாத சார தைலத்தைத் தடவி, வெந்நீரால் ஒற்றடம் கொடுக்க, இவை மூன்றும் குறையும்.
* ஒரு டீஸ்பூன் திரிகடுகு சூரணத்தை (சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்த) வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
* சளி பிடித்துவிட்டால் சிவனார் அமிர்தம், தாளிசாதி சூரணம், தூதுவளை லேகியம், திப்பிலி ரசாயனம் ஆகியவற்றில் ஒன்றை சாப்பிட்டால் சரியாகி விடும்.
* குளிர்காலத்தில் காய்ச்சல் வந்தால், இதற்கான தீர்வு நிலவேம்பு கஷாயம். சளி பிடித்துவிட்டால் கபசுரக்குடிநீர். நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிட சிரமமாக இருந்தால் ஆடாதொடை குடிநீர் பயன் தரும்.
செய்முறை: மூன்று குடிநீரையும் தயாரிக்கும் முறை ஒன்றுதான். கால் லிட்டர் நீரில் 10 கிராம் சூரணம் போட்டு, நீரை நான்கில் ஒரு பங்காக வற்ற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். ஆடாதொடை குடிநீருக்குப் பதில் ஆடாதொடை மணப்பாகும் சாப்பிடலாம்.
* தாளிசாதி வடகம் அல்லது அதிமதுரம் சேர்க்கப்பட்ட கண்டக்குளிகையை வாயிலிட்டு சுவைத்து சாப்பிட்டால் தொண்டை வலி சரியாகும்.
* மூக்கடைப்புக்கு மிளகை தீப விளக்கில் சுட்டு,வெளியேறும் புகையை உள்ளிழுக்க வேண்டும். மஞ்சளையும் இதேபோல விளக்கில் சுட்டு புகையை உள்ளிழுத்தால் மூக்கடைப்பு சரியாகும்.
* சைனஸ் காரணமாக வருகிற தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரையை நீரில் குழைத்து பற்றுப்போட வலி குறையும்.
* செரிமானக் கோளாறு நீங்குவதற்கு ஏதாவது சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டீஸ்பூன் அஷ்ட சூரணத்தை வாயிலிட்டு வெந்நீர் அருந்தினால் சரியாகிவிடும். மேலும், குளிர்காலம் முழுவதும் வெந்நீர் அல்லது கிராம்பு போட்ட காய்ச்சிய நீரை அருந்தி வந்தால் செரிமானப் பிரச்னையே ஏற்படாது.
குளிர்காலத்தில் உடம்பை பத்திரமாகப் பாதுகாத்து சூழலை அனுபவிக்கப் பழகுங்கள்.