
ஸ்ரீ லட்சுமி தேவிக்கும் தாமரை மலருக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு. தங்க தாமரை மலரே லட்சுமி தேவியின் இருப்பிடம் என்கிறது வரலாறு. தங்கத் தாமரையில் இருப்பதால்தான் லட்சுமியை ‘பத்மபிரியா’ என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமியின் பெயர் பத்ம லதார தேவி என்றும் தாமரை மாலையை அணிந்திருக்கையில் ஸ்ரீ லட்சுமியை பத்மமுகி என்றும் தாமரை போல் முகம் ஒளிர்கின்றபோது பத்மாஸ்ரீ என்றும் லட்சுமியின் திருக்கண் தாமரை போன்று ஒளிர்கின்றபோது பத்மாஷா என்றும் கையில் தாமரையை ஏந்தி இருக்கையில் பத்ம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள்.
மகாலட்சுமியை வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற பொருட்களாக இருப்பது தங்க தாமரை பூ, சந்தனம், குங்குமம், வெற்றிலை, உலர் பழங்கள், அரிசி மற்றும் தேங்காய் ஆகும். மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோருக்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில், மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலராகும். தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு பெயர் உண்டு.
பூக்களில் சிறந்தது தாமரைப் பூவே. வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கும் உண்டு. தாமரை மலர் கொண்டு மகாலட்சுமி தாயாரை வணங்குவது சிறப்பு. தாமரை மலரை பறித்து ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். தாமரை மலர்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. இதை யாரும் தலையில் சூடிக் கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை பூ.
பொதுவாக, தாமரை மலருக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கின்ற சக்தி அதிகம் உள்ளது. எனவேதான், வெள்ளை நிற தாமரையில் கல்வி கடவுள் சரஸ்வதியும் செல்வத்தின் அம்சமான மகாலஷ்மி தேவி செந்தாமரை மலரிலும் வாசம் செய்கிறார்கள்.
தினமும் ஒரு தாமரை பூவினை மகாலட்சுமிக்கு சமர்ப்பித்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். எல்லா நாட்களிலும் முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமை, ஏகாதசி தினங்களில் மகாலட்சுமி படத்திற்கு தாமரை பூவினை சமர்ப்பித்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு நமக்கு செல்வம் பெருகும்.