உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரம் இந்து புராணங்களிலும் மகாபாரதத்திலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி எனும் மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரே இடம் பிரயாக்ராஜ்தான். கும்பமேளாவை பொறுத்த வரை அர்த்த, பூரண மற்றும் மகா கும்பமேளா என மூன்று வகைகள் உள்ளன. அதில் அர்த்த கும்பமேளா என்பது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்துவார் மற்றும் பிரயாக்ராஜ் நகரில் மட்டுமே நடக்கும்.
பூரண கும்பமேளா என்பது ஹரித்துவர், பிரயாக்ராஜ், உஜ்ஜயினி, நாசிக் என நான்கு இடங்களிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால், மகா கும்பமேளா என்பது பிரயாக்ராஜ் நகரில் நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது ஆகும். இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5482 சதுர கிலோ மீட்டர். கங்கை நதி வெண்மை நிறத்திலும் யமுனை நதி நீல நிறத்திலும் இருக்கும். சரஸ்வதி நதி மறைந்த நிலையில் இங்கு இருக்கும். இந்தப் பகுதிக்கு சென்று நீராட வேண்டும் என்றால் படகில்தான் செல்ல வேண்டும். அங்கு இறங்கி நீராட முடியாது. படகில் செல்பவர்கள் தலையில் தண்ணீரை அள்ளித் தெளித்துக் கொள்வார்கள்.
மகா கும்பமேளா நீராடுதலில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அரச குடும்ப நீராடுதல் ஆகும். அதாவது, ஆதி சன்னியாசிகள் அகோரிகள் மற்றும் சாமியார்கள் தலைமையில் இந்த புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கும். இவர்களுக்கு பின்னால் நின்று மக்கள் நீராடுவார்கள். அடுத்தது மனதின் நீராடல். உடலை நனைக்காமல் திருவேணி சங்கமத்தில் மனதினை ஒருநிலைப்படுத்தி மன நீராடல் செய்வார்கள். மேலும், தர்ம நீராடல் என்பது ஆற்றில் மூழ்கி எழுந்து தர்மத்தை பின்பற்றும் உறுதிமொழியை எடுத்துக்கொள்வது ஆகும்.
சமூக நீராடல் என்பது ஒரு சமூகம் அல்லது குடும்பமாக வந்து நீராடுவதை குறிக்கும். அவசர நீராடல் என்பது ஆற்றில் குறிப்பிட்ட நேரத்தில் மூழ்கி எழுவதாகும். அதேபோல், நீராடும்போது மூன்று முறை ஆற்றில் மூழ்கி எழுவார்கள். அதாவது முதல் தடவை தனக்காகவும் இரண்டாவது தடவை தனது குடும்பத்திற்காகவும் மூன்றாவது முறை பிறருக்காகவும் நீராடுவது என்பது ஐதீகம்.
கும்பமேளா கொண்டாடப்படுவதற்கு அடிப்படையே பாற்கடல் கடைவதுதான். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். அப்போது தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளியே வந்தார். அந்த கலசத்தை பெறுவதில் தேவர்களும் அசுரர்களும் மோதிக் கொண்டனர். அப்போது கலசத்தில் இருந்த அமிர்தம் கங்கை ஆறு பாயும் ஹரித்துவார், கங்கா, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் மற்றும் கோதாவரி நதி ஓடும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்தது. எனவே, அமிர்தத்தின் புனித துளிகளால் அந்த இடங்களில் உள்ள நதிகள் புனிதமானது.
இந்த அமிர்தம் பூமியில் விழுந்த நேரத்தில் வானில் காணப்பட்ட சூரியன், சந்திரன் மற்றும் குரு கிரகங்களின் அடிப்படையில் நான்கு இடங்களிலும் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூரண கும்பமேளா நடக்கிறது. இதில் 45 நாட்கள் நடந்தாலும் அதில் ஆறு நாட்கள் மிகவும் சிறப்பானது. ஜனவரி 13ம் தேதி பூர்ணிமா நாள், 14ம் தேதி மகர சங்கராந்தி, 29ம் தேதி அமாவாசை, பிப்ரவரி 3ம் தேதி பஞ்சமி, 12ம் தேதி பூர்ணிமா, 26ம் தேதி மகாசிவராத்திரி ஆகும். இந்த நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கும்பமேளா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. மிகவும் பழைமையான இந்து புராணங்களில் கும்பமேளாவிற்கு அடிப்படையான பாற்கடலில் மந்தனம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்த கும்பமேளாவில் பங்கேற்பது என்பது ஒரு வரம் என்றே மக்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியான அடையாளம் மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமையின் பெருமைமிக்க நிகழ்வாக மகா கும்பமேளா திகழ்கிறது. இதுவரை கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடல் செய்து விட்டார்கள். நீங்களும் மகா கும்பமேளாவிற்கு சென்று புனித நீராடல் செய்து விட்டு வாருங்கள்.