நாம் எல்லோரும் திரைப்படங்களிலோ, நேரிலோ நாகங்களைப் பார்த்திருப்போம். அல்லது அவற்றைப் பற்றி படித்திருப்போம் . அவை நாக்கை நீட்டினால், நாக்கு பிளவுபட்டு இருப்பது நம் எல்லோருக்குமே தெரியவரும். ஏன் பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டு இருக்க வேண்டும்? இதற்கு பின்னணியில் ஒரு புராணக் கதை உண்டு.
காஸ்யப முனிவருக்கு, கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. முனிவரிடம் இருவரும் வேண்டி நின்றார்கள். கத்ரு தனக்கு ஆயிரம் நாக மகன்கள் வேண்டுமென்றாள். வினதை தனக்கு நாகங்களைவிட உயர்வாக இரண்டு மகன்கள் வேண்டுமென்றாள். இருவருக்கும் மகப்பேறு உண்டாவதற்கான வரத்தினை முனிவர் அளித்தார்.
அதன்படி கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இரண்டு முட்டைகளையும் பெற்றார்கள். கத்ருவின் முட்டைகள் உடைந்து, ஆயிரம் நாகக் குட்டிகள் வந்தன. வெகு வருடங்கள் ஆகியும் வினதையின் முட்டைகளில் ஒன்று கூட உடைபடவில்லை. இதனால் அதைச் சோதித்துப் பார்க்க விரும்பிய வினதை, ஒரு முட்டையை உடைத்தாள். அதிலிருந்து இடுப்புப் பகுதிக்கு கீழே வளர்ச்சியற்ற ஒரு மகன் தோன்றினான். அவன் வெளியே வந்ததும், “என்னை முழுமையாக வளர விடாமல் அவசரப்பட்டு அங்கஹீனம் உள்ளவனாக ஆக்கிவிட்டீர்கள். அதனால் நீங்கள் பிறரிடம் அடிமையாக வாழ வேண்டும் என்கிற சாபத்தினைக் கொடுக்கின்றேன். அடுத்த முட்டையையாவது ஐநூறு வருடங்கள் பத்திரமாகப் பாதுகாத்து, எனக்கு ஒரு நல்ல தமையனைக் கொடுங்கள்“ என்று கூறி, அவர்களை விட்டு விலகி விட்டான். அவனே அருணன் என்கிற சூரிய பகவானுடைய தேர் சாரதி ஆவான். ஐநூறு வருடங்கள் கழித்து இன்னொரு முட்டையிலிருந்து தோன்றினான் கருடன்.
ஒரு நாள் கத்ருவும், வினதையும் தோட்டத்தில் இருந்தபொழுது, இந்திரனின் வாகனம் பறக்கும் 'உச்சைஸ்ரவஸ்' என்கிற குதிரையைக் கண்டார்கள். அந்த வெண் குதிரையின் உடல் நிறம் மட்டும் தெரிந்ததே தவிர, வால் பகுதி தெரியவில்லை.
“வினதா நமக்குள் ஒரு போட்டி வைத்து கொள்ளலாம். நான் தோற்றால் உன் குடும்பத்திற்கு நாங்கள் அடிமை. நீ தோற்றால் என் குடும்பத்திற்கு நீங்கள் அடிமை சரியா?” என்று சகோதரி கத்ரு கேட்டவுடன் அதற்கு வினதை ஒப்புக்கொண்டாள்.
“இந்தக் குதிரையின் வால் என்ன நிறம் என்று கூறு பார்க்கலாம்?” என்றாள் கத்ரு.
“இதில் என்ன சந்தேகம்? குதிரை முழுவதுமே வெண்மை நிறம்தான்” என்றாள் வினதை.
சரியான பதிலை வினதை கூறினாலும் கத்ருவிற்கு, வினதையை எப்படியாவது அடிமையாக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால் தனது மகன் கார்கோடகனின் உதவியுடன், குதிரையின் வால் கருப்பு நிறமாகத் தெரிவது போல் தந்திரத்தால் நிறத்தை மாற்றினாள் கத்ரு. இதனால் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட வினதை, தனது மகன் கருடனுடன் கத்ருவிற்கும், அவள் மகன்களான ஆயிரம் நாகங்களுக்கும் அடிமையானார்கள். அருணனின் சாபம் பலித்தது.
அடிமைத் தளையிலிருந்து தாங்கள் எப்படி மீள்வது என்பதை தனது சகோதரர்களான நாகர்களிடமே கருடன் கேட்டான். மரணம் இல்லா பேற்றை அருளும் அமிர்தத்தைக் கொண்ட கலசம் தேவேந்திரன் வசம் இருப்பதாகவும், அந்த அமிர்த கலசத்தை நாகர்களிடம் சேர்ப்பித்தால் அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
கருடன் தேவலோகம் சென்று இந்திரனுடன் யுத்தம் செய்து அந்த அமிர்த கலசத்தை எடுத்துச் செல்லும்பொழுது, இந்திரன் துரத்தத் தொடங்கினான். (அதை எடுத்து வரும்பொழுது, பிரயாக்ராஜ், உஜ்ஜையினி, நாசிக், ஹரித்வார் ஆகிய நான்கு தலங்களிலும் சில அமிர்தத்துளிகள் விழுந்தன. அவையே கும்பமேளா நிகழும் திவ்யத் தலங்கள்.)
கருடன், தான் எடுத்து வந்த அமிர்த கலசத்தை நாகர்களின் முன், தர்பைப் புல்லின் மீது வைத்தான். அமிர்தத்தை உண்டால் அழிவில்லா பேற்றைப் பெறலாம் என்கிற ஆசையில் நாகர்கள் வந்தபொழுது, “சிரேஷ்டமான இந்த அமிர்தத்தை குளிக்காமல் யாரும் உண்ணக்கூடாது. அனைவரும் போய் குளித்துவிட்டு இந்த அமிர்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கருடன் கூறினான்.
அனைத்து நாகங்களும் குளிக்கச் சென்றன. அந்த சமயத்தில் கருடனை துரத்தி வந்த இந்திரன், அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துக்கொண்டு சென்று விட்டான். குளித்துவிட்டு வந்த நாகங்கள், கலசத்தைக் காணாமல், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற துக்கத்தில் இருந்தன. ஆனால், புல்லின் மேல் சிறிது அமிர்தமாவது சிந்தி இருக்கும். அதை எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஆசையில் அவை தர்பைப் புல்லை நக்கி சுவைத்ததால், நாகங்களின் நாக்குகள் பிளவுபட்டன.
இப்பொழுது புரிந்ததா எதனால் நாகங்களின் நாக்கு பிளவுபட்டிருக்கிறது என்று?