ஐப்பசி மாதத்தை ‘துலா மாதம்’ என்று கூறுகிறோம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் மாதம் என்றும், துலாம் என்றால் தராசு என்று அர்த்தம். இந்த மாதத்தில் பகல் பொழுதும், இரவு பொழுதும் தராசு தட்டு போல் சமமாக இருப்பதால் இதற்கு துலாம் மாதம் என்றும் கூறுவார்கள். ஐப்பசி மாதம் முழுவதுமே விசேஷமான மாதம்தான். இந்நாட்களில், பிரம்ம முகூர்த்தத்தில், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், இந்திராணி , முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், கங்கா, யமுனா, கோதாவரி மற்றும் பதினான்கு லோகங்களிலும் உள்ள ஆறு கோடி தீர்த்தங்களும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து கலப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால், துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வது மிகவும் பவித்திரமாகக் கூறப்படுகிறது.
காவிரிக்கு லோபமுத்ரா, பொன்னி, கல்யாணி, கோனி மாதா போன்ற பல பெயர்கள் உண்டு. காவேரன் என்கிற அரசனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அப்பொழுது பிரம்மா மானச புத்திரி ஒருவளை உண்டாக்கி காவேரனிடம் கொடுத்து மகளாக பாவித்து வளர்த்து வரும்படி கூறினார். அவளுக்கு காவிரி என்று பெயரிட்டு அரசன் வளர்த்து வந்தான். தகுந்த பருவம் அடைந்தவுடன் அவள் அகஸ்தியரை மணம் முடித்து லோபமுத்ரா என்கிற பெயர் கொண்டாள். காவிரி நதி ரூபமாக இருக்க விருப்பம் கொண்டதால் அகஸ்தியர் அவளை ஆசீர்வதித்து நதி ரூபமாக இருக்குமாறு கூறியதுடன், அவளுக்கு விசேஷமான ஒரு மகத்துவத்தையும் அளித்தார். அதாவது, பிற நதிகளில் ஸ்நானம் செய்து மக்களின் பாவங்களை ஏற்று தவழ்ந்து கொண்டிருக்கும் நதிகள், காவிரியில் வந்து கலந்தால், பாவங்களை ஏற்ற அந்த நதிகளின் பாவச் சுமை விலகும் என்கிற ஒரு விசேஷமான சக்தியையும் அளித்தார்.
ஐப்பசி முதல் நாளன்று திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாள் அன்று மாயவரத்தில் இருக்கும் நந்தி கட்டத்திலும் நீராடுதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் எல்லா நாட்களிலுமே நீராடுதல் மிகவும் விசேஷம். ஏனென்றால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.
ஐப்பசி முதல் நாள் ஸ்நானம் செய்ய முடியாதவர்கள், ஐப்பசி கடைசி நாளான ‘கடை முகம்’ என்று கூறப்படும் அன்றாவது அல்லது கார்த்திகை முதல் நாள், (முடவன் முழுக்கு) அன்றாவது ஸ்நானம் செய்தால் ஐப்பசி மாதம் முழுவதுமே ஸ்நானம் செய்த பலனைத் தரும்.
துலா ஸ்நானம் செய்வதால் நாம் செய்த பாவங்கள் கழிவதோடு அல்லாமல், நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் கழியும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமல்ல, ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், வீரம், கல்வி, செல்வம் பெருகும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலவிதமான சுப காரியங்களும் உண்டாகும்.
காவிரியில் துலா ஸ்நானம் செய்பவர்கள் கூற வேண்டிய மந்திரம்:
‘நமஸ்தே தவிதாம் முக்யே நிகமாகம ஸம்ஸ்துதே
பாபகாயம் பாரிஸூத்யம் ஆயுராரோக்ய மேவ ச
ஸெளபாக்யமநி ஸந்தானம் க்ஞானம் தேஹி மருத்வ்ருதே’