இராமாயண காவியத்தில் வரும் ராவணனைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இலங்காதிபதியான அவன், மகா சிவ பக்தன். கயிலாய மலையையே தனது கைகளால் தூக்கிய மாவீரன். சிவனிடம் இருந்து ஈஸ்வரன் பட்டத்தை வென்றவன். ஈரேழு பதினாங்கு லோகங்களுமே ராவணன் என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போகும் அளவிற்கு தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்தியவன். அவ்வளவு பெருமையையும், கீர்த்தியையும் பெற்றிருந்த ராவணனுக்கு, தான் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், வாலியின் பெயரைக் கேட்டாலே உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. எதனால் அப்படி?
கிஷ்கிந்தையின் அரசனான வாலியும் சிறந்த சிவ பக்தன். நித்யமும் செய்ய வேண்டிய அநுஷ்டானங்களை, ஒன்று விடாமல் அனுசரிப்பவன். அன்றாடம் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தை, இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அந்தந்த திக்கை நோக்கி அமர்ந்து செய்ய மாட்டான். எந்தத் திக்கை நோக்கிச் செய்ய வேண்டுமோ, அந்த திக்கின் கடை எல்லைக்கே சென்று செய்து விட்டு வரும் அளவிற்கு ஆத்மார்த்தமாக அநுஷ்டானங்களை கடைபிடிப்பவன்.
ஒரு நாள் வாலி, ஒரு திக்கின் கடைக்கோடி கடற்கரையில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ராவணன் வாலியைக் கண்டான். 'ஒரு குரங்கு இத்தனை அக்கறையாக சந்தியாவந்தனம் செய்கிறதே' என்று நினைத்துக் கொண்டான். இந்தக் குரங்கிற்கு எப்படியாவது இடைஞ்சலை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு, வாலிக்கு முன்னால் நின்றுகொண்டு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தான்.
வாலி, தனது கைகளால் ‘விலகிப் போ’ என்று ஜாடை செய்தும் அவன் விலகவில்லை. ஒருவழியாக குறிப்பிட்ட திக்கில் சந்தியாவனத்தை முடித்துக்கொண்டு, வாலி அடுத்த திக்கிற்குச் சென்றான். அங்கும் ராவணன் தனது இம்சையைத் தொடர்ந்தான். இப்படி, வாலி சென்ற எல்லா திக்குகளுக்கும் தானும் சென்று, தொந்தரவு கொடுத்ததில், வாலி மிகவும் சினம் கொண்டான்.
ஒரே தாவலில், ஒரு மலையின் அளவில் பத்துத் தலைகளுடன் இருந்தஇராவணனைப் பிடித்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தான். தன்னுடைய நீண்ட வாலில் இறுகக் கட்டி, ஒரு முடிச்சையும் போட்டு வைத்தான்.
அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டதால், மீண்டும் கிஷ்கிந்தைக்குத் திரும்பலானான் வாலி. திரும்பும் வழியில், ஒவ்வொரு மலையையும் ஒவ்வொரு கடலையும் தாண்டும்பொழுது, வாலில் கட்டப்பட்டிருந்த ராவணன் மலைகளில் மோதியும், கடலில் மூழ்கியும் மிகவும் சிரமப்பட்டான்.
கிஷ்கிந்தையில் தனது அரண்மனைக்கு வந்த வாலி, தொட்டிலில் இருந்த தனது மகன், அங்கதனைப் பார்த்தான். தந்தையைப் பார்த்த குழந்தை லேசாகச் சிணுங்கியது.
"என் கண்ணே, உனக்கு என்ன வேண்டும் சொல். பசிக்கிறதா? இல்லை விளையாட பொம்மை வேண்டுமா?" என்று கேட்டான்.
பிறகு திடீரென்று ஞாபகம் வந்தவனாக, " அடடா கண்ணே, மறந்து விட்டேன். உனக்காக ஒரு பத்துத் தலைப் பூச்சியைக் கொண்டு வந்திருக்கிறேன் பார்" என்று கூறியபடி, தனது வாலைத் தூக்கி, (ராவணனைக் கட்டி வைத்திருந்தான் அல்லவா?) தொட்டிலில் படுத்திருந்த அங்கதனின் முகத்துக்கு நேரே ஆட்டிக் காண்பித்தான். குழந்தை சிரித்தது.
பிறகு, தனது வாலிலிருந்து ராவணனை விடுவித்தான் வாலி. “நீ யார்?’ என்று வாலி கேட்க, தான் ராவணன் என்றும், இலங்கையின் அதிபதி என்றும் பதில் கூறினான்.
வாலியின் வீரத்தையும், பக்தி சிரத்தையையும் புகழ்ந்து ராவணன் கூற, ஒரு வீரனை இன்னொரு வீரன் புகழ்வது அவனுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பதிலுக்கு ராவணனை வாலியும் புகழ்ந்தான். பிறகு இருவரும் நண்பர்களானார்கள்.
ராவணனையே வாலில் கட்டி வாலி சுமந்தான் என்றால் வாலியின் வீரத்தையும், பலத்தையும் கண்டு ராவணன் அஞ்சியதில் அர்த்தமில்லாமல் இல்லையல்லவா?