திருமணத்தில் அட்சதையை வீசி எறியக்கூடாது ஏன்? அறியாத ஆன்மீகக் காரணங்கள்!

அட்சதை வீசுவது தெய்வக் குற்றமா? உச்சந்தலையில் சகஸ்ரார சக்கரம் தூண்டப்படும் ரகசியம்.
அட்சதை - Vedic traditions
அட்சதை - Vedic traditionsImage credit - Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ட்சதை என்பது அளப்பரிய ஆன்மீக மற்றும் மங்கள மேன்மைகளைக் கொண்டது. அரிசி என்பது நவதானியங்களில் முதன்மையான உணவாகும். இது அன்னபூரணி மற்றும் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. பூஜைகளில் அட்சதையைப் பயன்படுத்தும்போது அந்த வீட்டின் தானிய வளமும், செல்வ வளமும் என்றும் குறையாமல் பெருகும் என்பது நம்பிக்கை.

பூஜைகளின் பொழுது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மலரோ, பழமோ அல்லது நைவேத்தியமோ இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக "சகல உபசாரார்த்தே அக்ஷதான் சமர்ப்பயாமி" என்று கூறி அட்சதையை சமர்ப்பிக்கலாம். இது அனைத்து பொருட்களுக்கும் இணையான முழுமையான பலனைத் தரவல்லது.

மணமக்களை பெரியவர்கள் அட்சதை தூவி வாழ்த்துவது வழக்கம். அட்சதை என்றால் 'முனை முறியாத பழுதுபடாத அரிசி' என்று பொருள். அட்சதை தயாரிப்பதற்கு பயன்படுத்தும் அரிசி குருணையாக இருக்கக் கூடாது; முழுமையாக இருக்கவேண்டும்.

மண வாழ்வில் ஈடுபடும் தம்பதியரின் வாழ்வு பழுது இல்லாமல் முழுமையானதாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் அட்சதை தூவி வாழ்த்துவார்கள். அவை வெறும் அரிசி அல்ல; தெய்வீக அடையாளமாக, ஒரு ஆசீர்வாதமாகப் பார்க்கப்படுகிறது.

தம்பதிகளின் எதிர்கால வாழ்வு வளமாக இருக்கவேண்டும் என்ற பெரியோர்களின் மனமார்ந்த பிரார்த்தனையாக இது அமைகிறது. அதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து சமய சடங்குகளில் அட்சதை ஒரு தனி மரியாதையுடன் விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அரிசியும் பூவுக்கு சமமானது என்பதால் அன்றாட பூஜையில் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

அட்சதை என்பது தெய்வீக சக்திகள் நிறைந்த மங்களப்பொருள் என்பதால் அதனைத் தலையில் வீசி எறிவது அல்லது பலமாக தூக்கி எறிவது போன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும். இதற்கான ஆன்மீக காரணங்களைத் தெரிந்துகொண்டால் நிச்சயம் இம்மாதிரியான செயல்களைத் தவிர்த்துவிடுவோம் அல்லவா. அட்சதை என்பது நேர்மறை ஆற்றல் நிறைந்த, தெய்வீக சக்தி மிகுந்தது.

இதனை தலைக்கு மேல் மெதுவாக தூவுவதுபோல் அதாவது அபிஷேகம் செய்வது போல் அர்ப்பணிக்க வேண்டுமே தவிர வீசி எறிதல் கூடாது. அப்போதுதான் அதில் உள்ள தெய்வீக அலைகள் நம் உச்சந்தலையில் உள்ள 'சகஸ்ரார சக்கரம்' வழியாக உடலில் இறங்கும் என்று நம்பப்படுகிறது. வலது கையின் மோதிர விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி அட்சதையை எடுத்து மெதுவாக தலைக்கு மேல் தூவ வேண்டும்.

அட்சதை - Vedic traditions
அட்சதை - Vedic traditionsImage credit - Gemini

அரிசி (சந்திரன்), மஞ்சள் (குரு), நெய் (மகாலட்சுமி) ஆகியவை இணைந்து அட்சதை உருவாகிறது. இதில் தெய்வ சக்திகள் நிறைந்துள்ளன. சந்திரனின் அம்சமான அரிசியுடன், குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மஞ்சள் தூள் கலந்து மகாலட்சுமியின் பரிபூரண வளத்தைப் பெறுவதற்கு பசு நெய்யையும் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும். இதுவுள்ள இடத்தில் மங்களமான அதிர்வுகள் உருவாகும் என்று சாஸ்திர மரபுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு அரிசியும் பூவுக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. அதனை அலட்சியமாக வீசுவது தெய்வ குற்றமாகக் கருதப்படுகிறது. மணமக்கள் மீது அல்லது பெரியவர்கள் மீது அட்சதையை தூவும்போது, அன்போடும் மரியாதையோடும் மென்மையாகத் தலைமீது வைக்கவேண்டுமே தவிர வேகமாக வீசுவது கூடாது.

இன்று பல திருமண நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் காரணமாக தூரத்தில் இருந்தபடியே அட்சதையை மேடையை நோக்கி தூக்கி வீசி எறியும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது சிறப்பானதல்ல. மணமேடைக்கு அருகில் சென்று மணமக்களை நேரில் ஆசீர்வதித்து, அவர்களின் தலையில் மெதுவாக அட்சதையைத் தூவி மனமார வாழ்த்தவேண்டும். இப்படி செய்கின்ற ஆசீர்வாதம்தான் முழுமை பெறும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளையாரை எங்கு தொடங்கினாலும் ஏன் முதலில் வணங்க வேண்டும்? புராண ரகசியங்கள் இதோ!
அட்சதை - Vedic traditions

அட்சதைகளை திருமணங்களில் மட்டும் பயன்படுத்துவதில்லை; புதிய வீடு கட்டும்பொழுது, புதிய தொழில் ஆரம்பிக்கும் பொழுது, புதிய வாகனங்கள் வாங்கியதும் என எந்த ஒரு மங்களகரமான விஷயங்களைத் தொடங்கும் பொழுதும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். இப்படிப்பட்ட அட்சதையை அலட்சியப் போக்கு இல்லாமல் எப்பொழுதுமே நாம் மரியாதையுடன் கையாளவேண்டும்.

முக்கியமாக யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றிலும் அட்சதை முக்கியமானப் பொருளாக இடம் பெறுகிறது. சங்ககாலத்துக்கு முன்பிருந்தே நம்முடைய வழிபாட்டு முறைகளிலும், விழாக்களிலும் அட்சதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் அட்சதை இல்லாத பட்சத்தில்தான் மலர்களைப் பயன் படுத்துவார்கள். அட்சதை என்பது செல்வ வளம் பெருகவும், வம்சவிருத்திக்கு வழிவகுக்கும் ஒரு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல அடிக்கடி சண்டை வருதா... அப்போ இந்த இலையை வச்சு இப்படி செய்யுங்க!
அட்சதை - Vedic traditions

அட்சதையை அலட்சியமாக வீசுவதைத் தவிர்த்து, சரியான விரல் பிடிப்புகளுடன் மென்மையாக ஆசீர்வதிக்கும் முறையைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் ஆசீர்வாதத்தின் பூரண ஆற்றல் மணமக்களையும் அன்புக்குரியவர்களையும் சென்றடைவதை உறுதி செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com