பராசக்தியின் அம்சமான அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த நாளைத்தான் வாசவி ஜயந்தியாக வழிபாடு செய்கிறார்கள். சக்தி தேவியின் மறு உருவம்தான் வாசவி. இந்த வாசவி தேவியை, கன்னிகா பரமேஸ்வரி என்ற பெயரைக் கொண்டு அழைக்கிறார்கள். ஆந்திராவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அம்பாளே தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிய தம்பதியர்களுக்கு வரமாக, அம்பாள் பெண் குழந்தையாகப் பிறந்தாள்.
அந்தக் குழந்தைக்கு வாசவி தேவி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வாசவி தேவி ஒரு சிவன் பக்தை. மிகவும் அழகானவள். சிவனையே வழிபாடு செய்து, சிவனையே மணக்க வேண்டும் என்று வாழ்ந்து வந்தாள். இந்த பெண்ணை திருமணம் செய்ய வேறு ஒரு நாட்டின் அரசன் ஆசைப்படுகின்றான். ஆனால், தான் ஒரு சிவன் பக்தை, தான் திருமணம் செய்வதாக இருந்தால் அது அந்த சிவபெருமானை மட்டும்தான், வேறு யாரையும் கரம் பிடிக்க மாட்டேன் என்று இவள், அக்னி குண்டத்தில் இறங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், பிறகு சிவலோகத்தை அடைந்து எம்பெருமானை கரம் பிடித்ததாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.
பிறகு இந்த வாசவி தேவிக்காக அந்த ஊரில் இருப்பவர்கள் கோயில் ஒன்றை எழுப்பி, அந்த அம்பாளை கன்னிகா பரமேஸ்வரி என்று அழைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். காரணம், வாசவி நெருப்பில் இறங்கி உயிரை விடும்பொழுது, கன்னிப் பெண்ணாகத்தான் உயிரை விட்டாள். ஆந்திர மாநிலங்களில் இன்றளவும் இந்த வாசவி ஜயந்தி விழாவானது பிரசித்தியாகக் கொண்டாடப்படுகின்றது.
அன்னை கன்னிகா பரமேஸ்வரி தாயை நினைத்து, வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையை செய்தால் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும். அது மட்டுமல்லாமல், திருமணம் ஆகாத பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும், குடும்பத்திற்கு பெண் சாபம் இருந்தால், அதனால் வரக்கூடிய கஷ்டங்கள் குறையும். சுக்ர தோஷம் நீங்கும்.
இன்று வாசவி ஜயந்தி விசேஷம் கடைபிடிக்கப்படுகிறது. வாசவி ஜயந்தி அன்று கன்னிகா பரமேஸ்வரி தாயை நினைத்து வீட்டில் எளிமையாக பூஜை செய்து பலன் பெறலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
விரத நாட்கள் என்றால் வழக்கம் போல உங்களுடைய வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் அதிகாலையிலேயே குளித்துவிட்டு, விரதத்தை தொடங்கி விடுங்கள். உபவாசம் இருப்பது அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்தது. மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
எந்த அம்பாளாக இருந்தாலும், அந்த அம்மனை கன்னிகா பரமேஸ்வரி தாயாக நினைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அம்பாளுக்கு ஒரு டம்ளர் நீர்மோர், ஒரு டம்ளர் பானகம் நெய்வேத்தியமாக வைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்ய வேண்டும். கன்னிகா பரமேஸ்வரி தாயை மனதார நினைத்து உங்களுக்கு என்ன பிரச்னைகள் தீர வேண்டுமோ அந்த பிரச்னைக்காக வேண்டுதல் வையுங்கள்.
உதாரணத்திற்கு, நீங்கள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டை செய்யலாம். திருமணம் ஆனவர்களாக இருந்தால் உங்கள் கணவரோடு நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கலாம். உங்களுடைய குடும்பத்தில் ஏதேனும் பெண் சாபம் இருந்தால் அந்த சாபம் விலக வேண்டும் என்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பூஜை முடிந்தவுடன் நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் பருகலாம். குறிப்பாக உங்களுடைய வீட்டில் திருமணமாகாத பெண்கள் இருந்தால் அவர்களுடைய கையால் இந்த வழிபாட்டை செய்யச் சொல்லுங்கள். மிகவும் சிறப்பு. உங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் இந்த கன்னிகா பரமேஸ்வரிக்கு ஒரு டசன் கண்ணாடி வளையல், ரிப்பன், பொட்டு, மஞ்சள் குங்குமம் போன்ற அழகு சாதன பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்வது நல்லது. கன்னிகா பரமேஸ்வரி தாயை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் நல்லதே நடக்கும்.