
பெருமாளுக்கு சனிக்கிழமை, புரட்டாசி மாதம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை, ஏகாதசி போன்ற நாட்கள் உகந்ததாக கருதப்படுகிறது. மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களில் பக்தர்கள் பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்தால் புண்ணியம் என்பது ஐதீகம்.
ஆனி மாதம் அதாவது, ஜூன் மாதம் தேய்பிறையில் வருவது யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வணங்குவது, பாவங்களை நீக்கும், அமைதியைக் கொடுக்கும் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. யோகினி ஏகாதசி விரதத்தை, சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். யோகினி ஏகாதசி இன்று (ஜூன் 21-ம்தேதி) அதிகாலை 3:34 மணிக்கு தொடங்கி நாளை (ஜூன் 22-ம் தேதி) அதிகாலை 1:52 மணிக்கு முடிவடைகிறது. எனவே சூரிய உதய நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏகாதசி அனுசரிக்கப்படுவதால், யோகினி ஏகாதசி இன்று (ஜூன் 21-ம்தேதி) அனுசரிக்கப்படும்.
இன்று அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. நோயெல்லாம் தீர வேண்டும் என பெருமாளை மனதார வேண்டி வெறும் வயிற்றில் துளசி தீர்த்தத்தை பருகுங்கள். உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், தீராத நோய் நொடிக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும் என ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எண்பத்தெட்டாயிரம் பிராமணர்களுக்கு உணவளிப்பதன் மூலம் ஒருவன் எந்தப் புண்ணியத்தைப் பெறுகிறானோ அந்தளவு புண்ணியத்தை இந்த யோகினி ஏகாதசியன்று கடுமையான விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைக்கும். இந்த புனிதமான யோகினி ஏகாதசியன்று விரதம் இருப்பவருக்கு, ஏகாதசி தேவி, கடந்த கால பாவ வினைகளின் குவியல்களை அழித்து, புண்ணியத்தை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இன்றைய தினம் தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.
குடும்பத்தின் உங்களை தவிர மற்ற உறுப்பினர்கள் விரதம் இல்லாவிட்டாலும் பூஜையில் ஈடுபடலாம், குடும்ப ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக பஜனைகளில் பங்கேற்கலாம். ஏகாதசி நாளில் துளசி இலையை பறிக்கக்கூடாது என்பதால் பெருமாளுக்கு துளசி இலையை படைக்க முதல் நாளிலேயே பறித்து வைத்து விட வேண்டும்.
மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இந்த யோகினி ஏகாதசி விரதமும் சூரிய உதயத்திலிருந்து தொடங்கி மறுநாள் சூரிய உதயம் வரை கடைபிடிக்கப்படுகிறது. ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர் கோதுமை, பார்லி அல்லது அரிசி போன்ற எந்த வகையான தானியங்களையும் உட்கொள்ளக்கூடாது. அன்றை தினம் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளக்கூடாது. வயதானவர்கள், உடலில் பிரச்சனை உடையவர்கள் பால், பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம். யோகினி ஏகாதசி நாளில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து நாள் முழுவதும் சுத்தமாக இருப்பதுடம், விஷ்ணு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பது முக்கியம். வீட்டில் பெருமாள் படத்திற்கு மாலை சாற்றி, நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி பெருமாளை மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.
இன்று அசைவம், போதைப் பொருட்கள், தகாத வார்த்தைகள், மற்றவர்களை துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது பாவத்திலிருந்து விடுபட உதவும்.