
ஆரோக்கியமான உணவை உண்ணும்போதும், சில குறிப்பிட்ட உணவுகளை அதில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நவகிரகங்களின் அருளால் நம்மால் அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடியும். நவகிரக வழிபாடு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது.
அந்தந்த கிரகத்துக்குரிய தானியத்தை வைத்து அவர்களை வழிபடுவதன் மூலம் நமக்கு அவர்களின் அனுக்கிரகம் கிடைக்கும். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகள் மூலம் நவகிரகங்களின் அருளை பூரணமாகப் பெற முடியும். அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, செல்வம் வளர சுக்கிர பகவானின் அருள் பரிபூர்ணமாக வேண்டும். குரு பகவான் பெரும் செல்வத்துக்கு சொந்தக்காரர். சுக்கிர பகவான் வேறு எந்த கிரகங்களுடன் சேர்ந்தால் செல்வ வளம் பெருகும் என்ற சூட்சுமம் உள்ளது.
சுக்கிர பகவான் கேதுவுடனும், சனி பகவானுடனும் சேரும்போது நமக்குச் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கேது மற்றும் சுக்கிர பகவானின் அருளைப் பெற நினைப்பவர்கள் உளுந்து வடையுடன் வெண்ணையை தொட்டு சாப்பிட வேண்டும்.
உளுந்து கேது பகவானுக்குரியது. வெண்ணெய் சுக்கிர பகவானுக்குரியது. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடும்போது இருவரின் அருளும் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
இதேபோல், சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையான மகாலக்ஷ்மிக்கு விருப்பமானது நெல்லிக்கனி. குபேர பகவானுக்குரிய பொருளாகத் திகழ்வதுதான் ஊறுகாய். அதனால் தினமும் நெல்லிக்கனியை நம் உணவில் சேர்ப்பதன் மூலம் மகாலக்ஷ்மி மற்றும் குபேரனின் அருளை பூரணமாகப் பெறலாம்.
அடுத்ததாக, சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் அருளைப் பெற தினமும் நாம் எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். எள் சனி பகவானுக்கு உரியது, அதில் சேர்க்கப்படும் இனிப்பு சுக்கிர பகவானுக்குரியதாகத் திகழ்வதால் எள்ளுருண்டை சாப்பிடுவதன் மூலம் சனி மற்றும் சுக்கிர சேர்க்கை ஏற்பட்டு அதனால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
நாம் தினசரி உண்ணும் உணவில் மேற்கண்ட சூட்சுமங்களைப் பின்பற்றி வாழ்வில் செல்வ வளம் பெறுவோம்.