
இந்து புராண வரலாறு மனித வாழ்வியலின் நீதியையும் நேர்மையையும் வழிநடத்தும் வகையில் புனையப்பட்ட அல்லது உண்மை சம்பவங்களால் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், சுவாரசியமான ஆன்மிகக் கதைகள் நம்மை சிந்திக்கவும் வைக்கும் வகையில் உள்ளது. அதில் ஒன்றுதான் படைப்புத் தொழிலுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு முதன்மை தெய்வமாக வணங்கப்படும் சிவன் தந்த சாபம் குறித்த வரலாறு.
புராணக் கதைகளின்படி சிவபெருமான், பிரம்மாவுக்கு அளித்த சாபம் வெவ்வேறு சூழல் கொண்ட கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும், அந்தக் கதைகள் வழியே ஒரு நீதியைக் குறிப்பதுதான் சிறப்பு. வழிவழியாக நாம் கேட்டு அறிந்த அந்தக் கதைகள் மற்றும் விளக்கங்கள் குறித்துக் காண்போம்.
பிரம்மாவின் ஐந்தாவது தலை கொய்த கதைகள்: திரிமூர்த்திகளில் படைப்புத் தொழிலுக்கு அதிபதியான பிரம்மா, பெரும்பாலும் நான்கு தலைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். இது நான்கு வேதங்கள், நான்கு திசைகள் மற்றும் தெய்வீக அறிவின் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையைக் குறிக்கிறது. ஆனால், சில புராணங்கள் உட்பட பண்டைய ஆன்மிக நூல்களில் ஒரு காலத்தில் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்ததாகவும் ஐந்தாவது தலை மேல் நோக்கிப் பார்ப்பதாகவும், அது ‘நான்‘ எனும் ஈகோ, பெருமை அல்லது அதன் வரம்புகளை மீறும் நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன் அகந்தையுடன் கூடிய அறிவு எவ்வாறு ஆபத்தானதாக மாறும் என்பதற்கான தெய்வீக உருவகமாகவும் அந்த ஐந்தாவது தலை சொல்லப்படுகிறது.
ஒரு சமயம் பார்வதி தேவி, பரமேஸ்வரன் திருமண நிகழ்வில் புரோகிதராக செயல்பட்டார் ஐந்து தலை பிரம்மா. திருமணம் முடிந்ததும் புரோகிதருக்கான தட்சணையை நான்கு திசைகளிலும் இருந்து ஒவ்வோர் தலை முன்னும் அளித்து மரியாதை தந்த சிவசக்தி தம்பதியிடம், "எனது ஐந்தாவது தலைக்கு எந்த திசையிலிருந்து தட்சணை தர முடியும்? புரோகிதம் வாசித்த எனக்கு சொன்னபடி தட்சணை தராத நீர், முதல் கடவுளாக எப்படி இருக்க முடியும்?"என ஆணவத்தின் உச்சியில் பிரம்மன் கேட்க, அதனால் சினம் கொண்ட சிவபெருமான், "அனைத்து வேதங்களையும் கற்ற ஆணவத்தில் பேசிய இந்த தலை இனி புரோகிதம் வாசிக்கக் கூடாது" என்று கோபத்துடன் அந்த தலையை கொய்தார் எனவும் அன்றிலிருந்து பிரம்மன் நான்முகனாக மாறியதாகவும் சில கதைகளில் சொல்லப்படுகிறது.
சில சிவ புராணக் கூற்றின்படி பிரம்மா, பிரபஞ்சத்தைப் படைத்த பிறகு, தனது பணியே உயர்ந்தது என கர்வம் கொண்டு, அவர் தன்னையே சிவனுக்கும் மேலான உயர்ந்த கடவுளாக அறிவிக்கத் தொடங்கி, மக்களை தன்னை உயர்ந்தவராக வணங்கும்படி தவறாக வழிநடத்தினார். மேல் நோக்கிய அவரது ஐந்தாவது தலை ‘தான்‘ எனும் ஈகோ மற்றும் கட்டுப்பாடற்ற பெருமையின் அடையாளமாக மாறியது.
இதைக் கண்ட சிவன், பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்து, ஆணவத்தை அமைதிப்படுத்தி உலகையே படைத்தவராக இருப்பினும் அகந்தை கொண்டவர் தர்மத்திற்கு மேலே உயர முடியாது என்ற கொள்கையை வலியுறுத்தவே இந்த திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தானே அனைத்திற்கும் பெரியவன் எனும் ஈகோ இருந்தால் அது எவ்வளவு ஆபத்தைத் தரும் என்று இந்தப் புராணக் கதையின் மூலம் நாம் உணரலாம்.
மற்ற புராணங்களில், பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான தனிப்பட்ட மேன்மை குறித்த மோதலைத் தீர்க்க சிவபெருமான் ஒரு நெருப்பு மலை வடிவில் தோன்றி, அவர்கள் இருவரையும் விட தானே உயர்ந்தவர் என்பதைக் காட்டினார் என்று கூறப்படுகிறது.
வராக வடிவில் இருந்த மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியைக் காண புறப்பட்டதாவும், அன்ன வடிவில் இருந்த பிரம்மா சிவலிங்கத்தின் உச்சியைத் தேடிச் சென்று இறுதியில் மகாவிஷ்ணு தன்னால் சிவனின் அடியை காண முடியவில்லை என்ற உண்மையைச் சொல்லி தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால், பிரம்மா தான் சிவனின் உச்சியை கண்டதாகப் பொய் கூறி, அதற்கு சாட்சியாக தாழம்பூவை உபயோகித்துக் கொண்டதாகவும் அந்தக் கதை செல்கிறது.
பொய் சொன்ன பிரம்மா சிவனின் சினத்துக்கு ஆளானதாக வரலாறு உண்டு. இதன் காரணமாகவே பிரம்மனுக்கு பூமியில் தனிக் கோயில்கள் கிடையாது. அதேபோல் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவும் பூஜைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் அறியலாம்.
இந்தக் கதை மூலம் பொய் என்பது எவ்வளவு ஆபத்து தரும் என்பதை அறியலாம். ஆன்மிகம் நல்ல நெறிகளையே என்றும் நமக்குக் கற்றுத் தருகிறது.