கன்னியாகுமரியில் கண்டு களிக்க 20 சுற்றுலாத்தலங்கள்!

கன்னியாகுமரி
கன்னியாகுமரி
Published on

பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் கண்டுகளிக்க அருமையான 20 சுற்றுலாத் தலங்களைப் பார்ப்போம். 

1. விவேகானந்தர் மண்டபம் ; கி.பி. 1892 அல்லது 1893 ஆம் ஆண்டு, விவேகானந்தர் இந்த மண்டபம் அமைந்துள்ள பாறையில், மூன்று நாட்கள் தவம் புரிந்து, ஞானத்தைப் பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு பார்வதி தேவியும் தவம் புரிந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு அருமையான தியான மண்டபமும், விவேகானந்தரின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையும் உள்ளன. விவேகானந்தர் சார்ந்த புத்தகங்கள் கிடைக்கின்றன. 

விவேகானந்தர் மண்டபம்
விவேகானந்தர் மண்டபம்

2. திருவள்ளுவர் சிலை; 133 அதிகாரங்களுக்கு ஏற்றவாறு, 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு கல்லில் எழுப்பப்பட்டுள்ள அருமையான சிலை. இது 2000 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதில் உள்பக்கமாக ஏறி, திருவள்ளுவரின் காலடி வரை செல்ல, அருமையான படியமைப்பு உள்ளது. திருக்குறள்களும், அவற்றின் பொருட்களும் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளன.

3. திருவேணி சங்கமம்; வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் என்ற மூன்று சமுத்திரங்களும் சங்கமிக்கும், திரிவேணி சங்கமம் அருமையான இடம். இங்கு சுற்றுலா பயணியரின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

குமரி அம்மன் கோவில்
குமரி அம்மன் கோவில்

4. குமரி அம்மன் கோவில்; கன்னியாகுமரி என்ற பெயருக்கு காரணமாக விளங்கும் குமரி அம்மன் கோவில் கடற்கரையிலேயே அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனின் மூக்குத்தியின் பளபளப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இது ஒரு புராதானமான கோவில். சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

5. ஸன் செட் கடற்கரை (சூரிய அஸ்தமன கடற்கரை); கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ஒரே இடத்தில் காண முடியும். இதனால், இங்குள்ள சூரிய அஸ்தமன கடற்கரையில், காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பாறைகள் நிரம்பிய இந்தக் கடற்கரை, காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. 

ஸன் செட் கடற்கரை
ஸன் செட் கடற்கரை

6. பத்மநாபபுரம் அரண்மனை; திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் அரண்மனையாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை, மர வேலைப்பாடுகளுக்கு பிரபலமானது. இந்த பிரம்மாண்டமான அரண்மனை மற்றும் அதன் பொருட்கள் நம்மை சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் அழைத்துச் செல்கின்றன. 

7.  காந்தி மண்டபம்; கன்னியாகுமரி கடற்கரை அருகே அமைந்துள்ள காந்தி மண்டபம், குஜராத்திய பாணியில் கட்டப்பட்டது. இங்கு மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் வைத்திருந்து பின்னர், கடலில் கரைக்கப்பட்டது. இங்கு காந்தியடிகள் சார்ந்த புகைப்படங்கள் போன்றவை அருமையாக பராமரிக்கப்படுகின்றன. 

8. காமராஜ் மணி மண்டபம்; கன்னியாகுமரி கடற்கரை அருகே, காமராஜ் மணி மண்டபம் உள்ளது. காமராஜ் அவர்களின் அஸ்தி இங்கு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காமராஜ் அவர்கள் நினைவாக மணி மண்டபம் கட்டப்பட்டு, அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

காமராஜ் மணி மண்டபம்
காமராஜ் மணி மண்டபம்

9. உதயகிரி கோட்டை; இது டெலனாய் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு டச்சு கடற்படை தளபதியாக விளங்கி, பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக விளங்கிய டெலனாயினால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கருங்கல் கோட்டை. இங்கு ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை உள்ளது. டெலனாய் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ளன.

10. வட்டக் கோட்டை; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக விளங்கிய டெலானாய் அவர்களால், கடற்கரையை ஒட்டி வட்ட வடிவில் வளைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை, வட்டக்கோட்டை எனப்படுகிறது. இதில் கடற்கரை சார்ந்த மதில்கள், போர்வீரர் தங்கும் அறைகள், குளம், பீரங்கிகளை மேலேற்றும் சரிவுப் பாதை என பிரம்மாண்டமான அமைப்புகள் நமது கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

11. தாணுமாலயான் கோவில்; சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் ஒரு சேர அருள்பாலிக்கும் பரந்து விரிந்த கோவில். இங்குள்ள பிரம்மாண்ட அனுமன் பிரபலம். இதன் கட்டடக்கலை திராவிடக் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.

12. திற்பரப்பு அருவி; 50 அடி உயரத்திலிருந்து விழும், அகலமான திற்பரப்பு அருவி காண்பதற்கு அழகான அருவி. மேலும், குளிப்பதற்கு பல்வேறு வசதிகளும் உள்ளன. அருகிலேயே 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாதேவர் சிவாலயமும் உள்ளது. 

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி

13. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்; இது திவ்யதேசங்களின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள பிரம்மாண்ட அனந்த சயன பெருமாள் நமக்கு விஸ்வரூப தரிசனத்தைப் போன்ற அனுபவத்தை வழங்குகிறார். 

14. பாரதமாதா கோவில்; பாரதத் தாய்க்கு என எழுப்பப்பட்ட பிரம்மாண்ட கோவில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் உள்ளது. இங்கு இராமாயணத்தை பெரிய ஓவியங்களாக விவரிக்கும் கண்காட்சியும் உள்ளது. மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவிலும் இங்கேயே உள்ளது. 

15. திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில்; கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட்டுள்ள அழகான பெருமாள் கோவில், நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

16. மாத்தூர் தொட்டிப் பாலம்; இரண்டு மலைகளுக்கு இடையே நீரினை எடுத்துச் செல்ல 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலத்தில், நடக்கும் போது, நமக்கு இயற்கை காட்சிகள் இருமருங்கும் அமைந்து, கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. இது ஆசியாவின் மிகவும் உயரமானதும், நீளமானதுமான பாலம் ஆகும். இது 115 அடி உயரமும், 1 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.

17. பேச்சிப்பாறை அணை; பேச்சிப் பாறை அணை, பாசனத்திற்கு பெரிதும் உதவுகிறது. பேச்சிப் பாறை அணைக்கு செல்லும் பாதையில், இரு பக்கங்களிலும் உள்ள இரப்பர் தோட்டங்களும், இயற்கை சூழ்நிலைகளும் என்றும் நினைவில் நிற்கும். 

பேச்சிப்பாறை அணை
பேச்சிப்பாறை அணை

18. நாகராஜா கோவில் - நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு பெயர் காரணமான நாகராஜா கோவில், நாக வழிப்பாட்டிற்கு பிரசத்தி பெற்றது.

19. கடற்கரைகள் - முட்டம் கடற்கரை , தேங்காய்பட்டினம் கடற்கரை,  சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை போன்ற அழகிய ரம்மியமான கடற்கரைகள் அருகே அமைந்துள்ளன. 

இதையும் படியுங்கள்:
எல் அண்ட் டி நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி!
கன்னியாகுமரி

20. சிதறால் ஜைன மலைக்கோவில்; இங்குள்ள ஜைன குகைக்கோவிலில், ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன்பு ஜைன மக்கள் இங்கு பெருமளவில் வாழ்ந்து வந்தனர். இங்கு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. 

நீங்களும் கன்னியாகுமரி செல்ல தயாராகி விட்டீர்களா ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com