கோடைக்கு ஏற்ற 3 நீர்வீழ்ச்சிகள்: புத்தூருக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!

Waterfalls
Waterfalls

கோடை விடுமறையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், மனச் சோர்வை நீக்கவும் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் செல்கின்றனர். அவ்வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூரில் இருக்கும் முத்தான மூன்று நீர்வீழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.

ஆந்திராவில் இருக்கும் இந்த குளிர்ச்சியான சுற்றுலாத்தலம் வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. புத்தூரை அடுத்துள்ள நாராயணவனம் வனப்பகுதியில் இருக்கும் சிங்கிரி பெருமாள் கோனை, கைலாச கோனை மற்றும் கண்ணாடி கோனை ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மூன்று நீர்வீழ்ச்சிகளிலும் வருடம் முழுவதும் நீர்வரத்து இருப்பது தான் சிறப்பு. இங்கு மழைக்காலத்தில் யாரும் அருகில் செல்ல முடியாத அளவிற்கு ஆக்ரோஷமாக நீர் கொட்டும். ஆனால் கோடைகாலத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இயல்பாக இருக்கும்.

கைலாச கோனை:

புத்தூர் செல்கின்ற சாலையில், ஆரண்ய கண்டிகைப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி 1.5 கிமீ தூரம் பயணித்தால் கைலாச கோனை நீர்வீழ்ச்சியை அடைந்து விடலாம். இங்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சில்லென்று தண்ணீர் கொட்டுகிறது. பலவிதமான மூலிகைச் செடிகளும், மரங்களும் உள்ள மலையில் இருந்து தண்ணீர் பாயும் இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டியவாறு பாறை பிளவுகளுக்கு இடையில் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் அருள்பாலித்து வருகிறார்.

சிங்கிரி பெருமாள் கோனை:

ஆரண்ய கண்டிகையில் இருந்து நாராயணவனத்திற்கு செல்கின்ற வழியில், கீளகரம் என்ற கிராமத்தின் வழியாக கிழக்கே 8 கிமீ பயணித்தால், சிங்கிரி பெருமாள் கோனை நீர்வீழ்ச்சியை அடைந்து விடலாம். இங்கு எவ்வித ஆரவாரமுமின்றி 10 அடி உயரத்தில் இருந்து சில்லென்று தண்ணீர் கொட்டுகிறது. மகிழ்ச்சியாக குளிப்பதற்கு நீர்வீழ்ச்சியும், நீச்சல் அடிக்க அருகில் இருக்கும் குளத்தையும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த நீர்வீழ்ச்சிக்கு நேர் எதிரில் 30 படிகளைக் கொண்ட மலைச் சரிவில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உடனுறை நரசிம்ம பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கதிரவனைக்காண கண் கோடி வேண்டும்!
Waterfalls

கண்ணாடி கோனை:

புத்தூர் புறவழிச் சாலையில் இருந்து கிழக்கு திசையில் கண்ணாடி கோனை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 2 கிமீ முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல வேண்டும். இங்கு நீர்வீழ்ச்சியும், அதையொட்டி சிறிய குளமும் அமைந்துள்ளது. குளக்கரையில் ஒரு சிவன் கோவில் அமைந்திருப்பது நீர்வீழ்ச்சிக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர் மிகத் தெளிவாக இருப்பதால் தான் இதற்கு கண்ணாடி கோனை நீர்வீழ்ச்சி என்ற பெயர் வந்தது.

கோடையில் குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்லவே பலரும் விரும்புவார்கள். அவ்வகையில் புத்தூரில் இருக்கும் இந்த 3 நீர்வீழ்ச்சிகள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று குளித்து விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com