இராமாயண காவியம் நம் நாட்டின் இலக்கிய பொக்கிஷமாக இருக்கிறது. கணக்கிட முடியாத, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அந்த சம்பவங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ள ஊர்களை வைத்து, இராமாயணம் நிகழ்ந்ததற்கான ஆதாரமாக நாம் கொள்ளலாம். இந்த காவியத்தை படிப்பதும் இந்தியாவை சுற்றுப்பயணம் செய்வதும் ஒன்றுதான். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு இந்தக் கதை பயணிக்கிறது. நாமும் அதில் உள்ள 5 இடங்களுக்கு பயணிப்பதை பற்றி பார்ப்போம்.
இது ஶ்ரீ ராமரின் மனைவி சீதை வளர்ந்த மிதிலை நாட்டின் தலைநகரம், இன்றைய நேபாளத்தில் உள்ளது. ஜனகபூரில் தங்கள் நாட்டு இளவரசியான சீதாதேவிக்கு ஜானகி மந்திர் என்ற சிறப்பான ஒரு கோயில் கட்டியுள்ளனர். மிகவும் பிரம்மாண்டமான அரண்மனை போலவே இந்த கோயில் இருக்கிறது. இதன் அருகில் உள்ள ராம் மந்திரும் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இராமர் சீதாவிற்கும் திருமணம் நடைபெற்ற இடத்தில், இராமர் சீதாவிவாஹ மண்டபம் தனியாக கட்டப்பட்டுள்ளது. நேபாளின் வளமையை இந்தக் கோயில்கள் பிரதிபலிக்கின்றது. ஜனக்பூர் செல்ல காட்மாண்டுவரை விமானத்தில் சென்று, அங்கிருந்து ரயில் அல்லது சாலை வழியாக செல்லலாம்.
ஜனக்பூரில் இருந்து ரயில் அல்லது பஸ் மூலமாக அயோத்தியை அடையலாம். உலகின் மிகவும் பழமையான நகரங்களில் அயோத்தியும் ஒன்று. ஶ்ரீ ராமர் பிறந்த புண்ணிய பூமியான இங்கு சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் நவீன கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றுகிறது.
இந்த ராமர் கோயிலுக்கு செல்லும் முன் சாய்நகரில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கர்ஹி கோயிலுக்கு செல்லவேண்டும். இங்கிருந்துதான் ஹனுமான் அயோத்தி நகரை காவல் செய்துள்ளார். ராமரின் மகன் குஷன் கட்டிய பிரம்மாண்டமாக நாகேஸ்வர்நாத் கோயிலையும் தரிசித்துவிட்டு வரலாம். மேலும் ராஜா மந்திர், ராம்கதா பூங்கா, சோட்டி சாவ்னி போன்ற அருகில் உள்ள இடங்களையும் சுற்றிவிட்டு வரலாம்.
அயோத்தியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து சாலை வழியாக கிஷ்கிந்தாவை சுற்றிப் பார்க்கலாம். கிஷ்கிந்தா என்பது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஹனுமான், வாலி, சுகிரீவன் உள்ளிட்ட வானரங்க்கள் வாழ்ந்த, அவர்களின் ராஜ்ய பகுதியாகும். இங்குள்ள ஹம்பியில் லேபாக்ஷி என்னும் சிறப்பு வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான புராண சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளது.
ஹம்பி அருகில் உள்ள ஆஞ்சநேய மலையில்தான் ஹனுமான் பிறந்து வளர்ந்துள்ளார். அருகிலுள்ள ரிஷிமுக பர்வத மலையில்தான், தன் அண்ணன் வாலிக்கு பயந்து சுக்ரீவன் அனுமனுடன் தங்கியிருந்தார். இங்கிருந்துதான் அனுமான் ஶ்ரீ ராமரையும் லட்சுமணனையும் சந்தித்தார்.
கிஷ்கிந்தாவின் ஹம்பியிலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலமாக ராமேஸ்வரத்தை அடையலாம். ராமர் மற்றும் அவரது வானர சேனைகள் இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் ஒன்றினை கட்டினர். இந்த பாலம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை செல்கிறது. ராமர் பாலத்தின் ஒரு பகுதிகள் இன்றும் காணப்படுவது இராமாயணத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை போரில் வென்று ராமேஸ்வரம் திரும்பிய ராமர், இராவணனைக் கொன்ற பாவத்திலிருந்து விடுபட ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். சேதுபதி மன்னர்கள் இந்த இடத்தில் பெரிய கோயிலை கட்டியுள்ளனர். ராமேஸ்வரம் கடல், தனுஷ்கோடி போன்ற சுற்றுலா இடங்களையும் கண்டுகளிக்கலாம்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று, விமானம் வழியாக கொழும்புவை அடைந்து, சாலை மார்க்கமாக சீதா எலியாவை அடையலாம். இராவணன் சீதையை கடத்திச் சென்று சிறை வைத்த இடம்தான் அசோக வாடிகா என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஹனுமான் சீதையை சந்தித்து ராமர் கொடுத்த திருமண மோதிரத்தை அளித்தார். பின்னர் இந்த இடத்தில் சீதையின் நினைவாக சீதா அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது.உள்ளூர்காரர்கள் இந்த பகுதியை சீதா எலியா என்று அழைக்கின்றனர்.