
இமயமலை முதல் குமரி வரை நம் நாட்டில் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு கலாச்சாரமும் இயற்கையும் நிறைந்த இடங்கள் நம் இந்தியாவிலும் உள்ளன. இந்த இடங்களுக்கு நீங்கள் ஒரு தடவை சென்றால், ஃபாரின் ட்ரிப் பிளானை (foreign trip) எல்லாம் கேன்சல் பண்ணிடுவீங்க. ஏனெனில், பனி படர்ந்த மலைகள் முதல் தென்னை மரங்கள் சூழப்பட்ட ஏரிகள் வரை மனதையும் கண்ணையும் கவரும் கிராமங்கள் அவை. பாரிஸை விட அழகான 5 இந்தியக் கிராமங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மனா கிராமம், இந்தியாவின் கடைசி கிராமமாகச் சொல்லப்படுகிறது. சுற்றிலும் பனி படர்ந்த மலைகள், பகீரதி ஆற்றின் சங்கமம் மற்றும் அமைதியான சூழல் ஆகியவை இந்த கிராமத்தை உண்மையிலேயே ஸ்பெஷலாக்குகிறது. இங்கே இருக்கும் இந்தியாவின் கடைசி டீ ஸ்டால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கும் ஒரு இடம். பத்ரிநாத் கோவிலுக்கு அருகில் இருப்பதால், இது ஆன்மீக ரீதியாகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. அட்வென்ச்சர் பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமி.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸிரோ கிராமம், அதன் பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் மூங்கில் காடுகளுக்காகப் பெயர் பெற்றது. இங்கு வசிக்கும் அபடானி பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் விழாக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 'ஸிரோ இசை விழா' இந்த கிராமத்தின் தனிச் சிறப்பு. அமைதியையும் இயற்கையுடனான இணைப்பையும் விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்.மேலும், இசைப் பிரியர்களின் தேசமாகவும் இது உள்ளது.
ஷில்லாங்கில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மேகாலயாவின் மாவ்லின்னாங் கிராமம், ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என்று சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் மக்கள், தூய்மையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். மரங்களின் வேர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தின் 'வாழும் வேர்ப் பாலம்' (Living Roots Bridge), சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. இங்கு நிலவும் அமைதியான சூழல், வெளிநாட்டு சுற்றுலாத் தளத்துக்கும் சவால் விடும் வகையில் உள்ளது. இந்தக் கிராமம், 'கடவுளின் தோட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கேரளாவின் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் கைனக்கரி கிராமம், அதன் அமைதியான ஏரிகள் மற்றும் படகுச் சவாரிகளுக்காக அறியப்படுகிறது. இங்குள்ள தென்னை மரங்களும், பின் உப்பங்கழிகளும் (Backwaters) ஒரு ஓவியத்தைப் போல அழகான காட்சியை உருவாக்குகின்றன. இதன் அழகும் எளிமையும் இதைத் தென்னிந்தியாவின் மிகவும் வசீகரமான கிராமங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள கிம்சர் கிராமம் அதன் அழகுக்காகப் பெயர் பெற்றது. தார் பாலைவனத்தின் விளிம்பில் அமைந்துள்ள கிம்சர், அதன் மணல் திட்டுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் மற்றும் பாலைவன சஃபாரி ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. இங்கு காணப்படும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் உண்மையிலேயே மூச்சடைக்க வைக்கும் அழகுடன் இருக்கும். அமைதியான சூழலும் பாரம்பரிய ராஜஸ்தானி கலாச்சாரமும் இந்தக் கிராமத்துக்கு ஒரு தனித்துவமான அழகை வழங்குகின்றன.