

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அமைந்துள்ள ஓர்ஃபீல்ட் லேபரட்டரிஸ், உலகின் மிக அமைதியான இடமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரு சாதாரண அறை 50% ஒலியை உறிஞ்சும் என்றால், அனெகோயிக் சேம்பர் என்று அழைக்கப்படும் இந்த அறை, 99.99% ஒலியை உறிஞ்சி, கிட்டத்தட்ட முழுமையான அமைதியை வழங்குகிறது. இந்த அமைதியின் காரணமாகத்தான் இதற்கு எக்கோலெஸ் சேம்பர் என்று பெயர். இங்கு இருக்கும் அனுபவம், ஒரு தனித்துவமான பயண அனுபவத்தை வழங்குகிறது.
நாம் சாதாரணமாக வாழும் உலகில், சத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாகன இரைச்சல், மக்கள் பேச்சு, இசை என ஏதேனும் ஒரு சத்தம் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கும். ஆனால், ஓர்ஃபீல்ட் லேபரட்டரிஸில் உள்ள அனெகோயிக் சேம்பர், இந்த சத்தங்கள் அனைத்திலிருந்தும் உங்களை முழுமையாகத் துண்டித்துவிடும்.
இந்த அறைக்குள் நுழைந்தவுடன், முதலில் ஒருவித அசௌகரியம் ஏற்படும். காரணம், நமது காதுகள் வழக்கமான ஒலியைக் கேட்கப் பழகியிருப்பதால், இந்த முழுமையான அமைதி ஒருவித வெறுமையை உருவாக்கும். இதன் அமைதி அளவு -9.4 டெசிபல் ஆகும்.
இந்த அறையின் சுவர்கள், தரை, மற்றும் கூரை என எல்லாமே ஒலி அலைகளை முழுவதுமாக உறிஞ்சும் சிறப்புப் பொருட்களால் ஆனது.
உள்ளே செல்லும்போது, முதலில் எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் சில நிமிடங்கள் கடந்ததும், வெளியே இருந்த எந்த ஒலியும் உள்ளே வராது. இதனால், உங்கள் மூளை வெளியுலகை சார்ந்திராமல், உடலின் உள் ஒலிகளைக் கேட்க ஆரம்பிக்கும். நுரையீரலில் காற்று நிரம்பும் சத்தம், இதய துடிப்பு, வயிற்றில் ஏற்படும் சலசலப்பு, ஏன் எலும்புகளின் அசைவு சத்தம் கூட கேட்கலாம்.
இந்த அறையில் 45 நிமிடங்களுக்கு மேல் யாரும் தனியாக இருந்ததில்லை என்று ஆய்வகத்தின் நிறுவனர் ஸ்டீவன் ஓர்ஃபீல்ட் கூறுகிறார். பெரும்பாலான மக்கள் 30 நிமிடங்களிலேயே வெளியேறி விடுகிறார்களாம். இந்த தீவிரமான அமைதி மனிதர்களுக்கு மனக் குழப்பத்தையும், திசைத் தெரியாமையும் உருவாக்குகிறது.
இந்த அறையை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைச் சோதிக்கப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு புதிய ஃபிரிட்ஜ் அல்லது ஏர் கண்டிஷனர் எவ்வளவு சத்தம் எழுப்புகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட இந்த அறை உதவுகிறது.
நாசா (NASA) விண்வெளி வீரர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கவும், பெரிய கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் அமைதியை மேம்படுத்தவும் இந்த அறையைப் பயன்படுத்துகின்றன.
நீண்டகால அமைதி மனித மனதில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
சாதாரண வாழ்க்கையில் நாம் எப்போதும் ஏதோ ஒரு இரைச்சலில் இருக்கிறோம். ஆனால் இந்த ஆய்வகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் கேட்டிராத அமைதியைக் கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும்போது, சத்தத்தைக் குறைத்து, அமைதியின் உச்சத்தை உணர ஒருமுறை மினசோட்டா ஓர்ஃபீல்ட் ஆய்வகத்திற்கு விசிட் அடியுங்கள்.