
சென்னையின் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு நாள் சுற்றுலாவாக இயற்கை எழில் கொஞ்சும் சென்னைக்கு அருகிலேயே உள்ள தீவுகளுக்கு சென்று வருவது மனதிற்கு புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த வகையில் சென்னைக்கு அருகில் இருக்கும் 6 தீவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆலம்பறை தீவு
சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில், மகாபலிபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் ஈசிஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணிநேரத்தில் ஆழம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழி நாடை அடைந்துவிடலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றிலும் கடல் சூழ்ந்த ஆலம்பறை சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருப்பதோடு, மூன்று புறமும் தண்ணீரால் சூழப்பட்ட இக்கோட்டையின் பின்புறத்தில் ஆறு கடலுடன் கலக்கும் காட்சியை கண்டு ரசிப்பதோடு வரலாற்றுச் சின்னங்களை சுற்றி பார்த்து சிறுசிறு தீவுகளில் விளையாடலாம்.
இருக்கம் தீவு
சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் புலிகாட் ஏரியின் நடுவே அமைந்திருக்கிறது இருக்கம் தீவு. இது ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விலகி பல அரிய உயிர்களைகாண இந்த புலிக்காட்டில் நிழலில் ஓர் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலே மனம் இலகுவாகும். அவ்வளவு கொள்ளை அழகு கொண்ட சுற்றுலாத்தலமாக இருப்பதால் நண்பர்கள் குடும்பம் என ஒரு நாள் பிக்னிக்கிற்கு ஏற்ற ஸ்பாட்டாக இருக்கிறது
திமிங்கல தீவு
சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திற்கு அருகே உள்ளது திமிங்கலதீவு. ஆற்றில் நீர்மட்டம் நன்றாக இருக்கும்போது இங்குள்ள போட் கிளப்பின் சார்பில் போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. அடையாறு பாலத்திற்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாக தெரிவதால், பல புலம்பெயர் பறவைகளை காணமுடியும். இங்கு படகோட்டும் அனுபவம் மனநிம்மதியை கொடுக்கும் என்பது இங்கு சென்று வந்தவர்களின் கருத்தாக உள்ளது.
க்விபிள் தீவு
சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் அமைந்துள்ள க்விபிள் தீவு (Quibble island), சால்ட் வாட்டர்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் மிகப்பெரியது. பிரெஞ்சு தலைமையிலான இந்திய படைகளுக்கும் நவாப் படைகளுக்கும், இடையே நடந்த போருக்குப் பிறகு கட்டப்பட்ட ஐரோப்பிய கல்லறையால் இந்த தீவு பிரபலமானதாக கூறப்படுகிறது. மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்த இந்த தீவை மயிலாப்பூர், அடையார் பகுதிகளில் இருந்து எளிதில் செல்லமுடியும் என்பதோடு கரைகளில் மோதும் அலைகளின் இனிமையையும் ரசிக்கலாம்.
காட்டுப்பள்ளி தீவு
எண்ணூர் தீவு என்றும் அழைக்கப்படும் இந்த காட்டுப்பள்ளி தீவு, புலிகாட் ஏரியின் தெற்கு சுற்றளவில் உள்ள ஒரு தீவாக இருப்பதோடு, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் இந்த தீவில்தான் அமைந்துள்ளது. தீவு புதர்க்காடுகளால் சூழப்பட்டுள்ளதோடு, சில கேசுவரினா மற்றும் தென்னந்தோப்புகளைக் கொண்டு, பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. சென்னையில் இருந்து ஒருநாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான இடமாகும்.
தடா - பிளமிங்கோ தீவு
தடா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கும் தீவுதான் தடா பிளமிங்கோ தீவு. தடாவில் இருந்து பிளமிங்கோ தீவிற்கு படகுமூலம் 50 நிமிட பயணத்தில் செல்லலாம். படகில் வெல்கம் ட்ரிங், மதிய உணவு சுடச்சுட வழங்குவதோடு தீவை அடைந்ததும் சுடச்சுட மீன்குழம்பு, மீன் வறுவல், சிக்கன் பார்பிக்யூ உணவு வகைகள் செய்து தரப்படுகிறது.
குறைவான நேரத்தில் நிறைவான சுற்றுலாவாக இருக்கும் இந்த தீவுகளை கண்டு களிப்போம்.