
முன்பதிவு செய்துவிட்டு, நிம்மதியாக ரயில் பயணங்களை நாம் மேற்கொள்கிறோம். கூடவே பயணக் கட்டணத்துடன் ஒரு சிறு தொகை இன்சூரன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எதற்காக இந்தக் கட்டணம்?
ரயில் பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் உடல் பாதிக்கப்படுமானால் அந்தந்த பாதிப்புக்கு ஏற்ப ஈட்டுத்தொகையை வழங்குவதற்காகத்தான். ரயில்வே நிர்வாகம் நியமித்திருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த ஈட்டுத்தொகையை வழங்குகின்றன.
பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் பயணியிடமிருந்து 45 பைசா, இன்சூரன்ஸ் கட்டணமாகப் பெறப்படுகிறது. இதுவும் பயணி இந்தத் திட்டத்தை ஏற்க விரும்பினால்தான், பயணக் கட்டணத்துடன் இந்தத் தொகை சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
ரயில் விபத்துக்குள்ளாகும்போது, காப்பீடு தொகை கட்டிய ஒரு பயணி இறக்க நேரிட்டால், அல்லது நிரந்தர ஊனமடைந்தால் பத்து லட்ச ரூபாய் ஈட்டுத் தொகையாக வழங்கப்படும். ஏதேனும் உடற்பகுதி நிரந்தரமாக ஊனமுற்றால் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்; காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய்; விபத்தில் இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல போக்குவரத்துக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாய்.
இவ்வாறு இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டதற்கு அத்தாட்சியாக குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பாலிஸி எனப்படும் ஆவணம் வழங்கப்படும். இதை வைத்து அந்தந்த உடல்நலக் குறைக்கேற்ப ஈட்டுத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
விபத்து என்று இல்லாவிட்டாலும், ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒருவருக்கு திடீரென்று ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால்? இதற்கும் நம் ரயில்வே நிர்வாகம் சில வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது.
நீண்ட தூரப் பயணிகள் தேவைக்காக ஒவ்வொரு ரயிலிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஓர் உதவியாளர் என்ற சிறு குழு இடம்பெற வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் யோசனை தெரிவித்திருந்தது. சுவாசப்பிரச்னை உள்ள பயணியரின் வசதிக்காக எல்லா ரயில்களிலும் ஆக்ஸிஜன் ஸிலிண்டர் பொருத்தப்பட வேண்டும் என்றும், ஓடும் ரயிலில் தேவைப்படும் பயணிகளுக்கு மருத்துவ வசதிகள் அளிப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நீண்டதூர பயண வண்டிகளில் முதலுதவிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் மருத்துவர் பரிந்துரைத்த 58 வகையான மருந்துகள் உள்ளன. ரயிலில் உடன் பயணிக்கும் மருத்துவரின் பரிந்துரைப்படி நோயாளிப் பயணிகளுக்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
ரயில்வே நிர்வாகத்தின் மருத்துவ உதவி அவசர தொலைபேசி எண். 138. இந்த எண்ணை அழைத்து, தேவைப்படுவோர் தமக்கு வேண்டிய மருந்துகளை மற்றும் மருத்துவ யோசனைகளைத் தம் இருக்கையிலிருந்தபடியே பெறமுடியும். மேலும் ரயில் வண்டியில் இருக்கும் உதவியாளரையும் உதவிக்கு அழைக்கலாம். சமூக வலைதளம் மற்றும் டிக்கட் பரிசோதகர் மூலமாகவும் ரயில்வே மருத்துவரின் உதவியைப் பெறலாம்.
மொத்தம் 175 ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் உள்ளன. தவிர, அங்குள்ள வேறு கடைகள் சிலவற்றில், சில மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அனைத்து முன்பதிவுப் பெட்டிகளிலும் சிகிச்சை தேவைப்படும் பயணியருக்கு, மருத்துவர் சேவைக் கட்டணத்தில் பத்து சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ரயில்வே மருத்துவமனைகள் 600 என்ற கணக்கில் அரிய சேவைகளை ஆற்றி வருகின்றன. இந்த மருத்துவமனைகள் எல்லாம் பெரும்பாலும் ரயில் நிலையங்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இவற்றில் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமின்றி ரயில் பயணிகளுக்கும் தேவைப்படும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன; மருந்துகள் வழங்கப்படுகின்றன.
உலகிலேயே நான்காவது மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம், இந்திய ரயில்வே. தினமும் 92952 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்களை இயக்குகிறது. ஒவ்வொரு நாளும் 23 மில்லியன் மக்கள் பயணிக்கும் பிரமாண்ட போக்குவரத்து வசதி இது! பயணிகளை அவரவர் செல்லுமிடங்களுக்குப் பொறுப்பாகவும், பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளைத் தீர்த்து வைத்தும் மிகப்பெரிய சேவை புரிகிறது என்ற தகவல் பெருமைக்குரியதுதானே!