மலைப்பிரதேசங்களை சிரமமில்லாமல் சுற்றிப்பார்க்க உதவும் 6 இந்திய விமான நிலையங்கள்

Indian airports
Indian airports

இயற்கையின் அழகிய படைப்பு, மலைவாழ்விடங்கள். அங்கு காணப்படும் பசுமை சூழ்ந்த மரம், செடி கொடிகளும், குளிர்ச்சி சூழலும் மனதையும் ஜில்லிட வைக்கும். வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் மிதமான வேகத்தில்தான் வாகனங்களில் பயணிக்க முடியும். திட்டமிட்டபடி இலக்கை எட்டுவதற்கு மற்ற இடங்களை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். அத்தகைய மலைப்பிரதேசங்களுக்கு விமானங்கள் மூலம் நேரடியாக சென்றடைந்து அருகில் உள்ள இடங்களை சிரமமில்லாமல் சுற்றிப்பார்க்கலாம். விமான பயணத்தின்போதே இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் ரசித்து மகிழலாம். அப்படிப்பட்ட இடங்களில் சில.

1. டார்ஜிலிங், மேற்கு வங்காளம்:

Darjeeling, West Bengal
Darjeeling, West Bengal

தேயிலை தோட்டங்களும், கஞ்சன்ஜங்கா மலையின் அழகியலும் டார்ஜிலிங்கில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். அருகில் உள்ள விமான நிலையம், பாக்டோக்ரா. இது டார்ஜிலிங்கில் இருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பயணத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கலாம். மனதை குளிர்ச்சியில் குதூகலிக்க வைக்கும் டார்ஜிலிங் தேயிலை தோட்டத்தில் உலவியவாறு டார்ஜிலிங் தேநீரை ருசிப்பது புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை தரும். படாசியா லூப், டைகர் ஹில், கூம் மடாலயம், லெப்சஜகத் உள்ளிட்டவை டார்ஜிலிங்கில் உள்ள முக்கியமான சுற்றுலாதலங்கள்.

2. காங்டாக், சிக்கிம்:

Gangtok, Sikkim
Gangtok, Sikkim

சிக்கிமின் தலைநகரான காங்டாக் சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் பாக்யோங் விமான நிலையம் அமைந்துள்ளது. நேரடியாக விமான பயணம் மேற்கொள்வதன் மூலம் பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

விமானத்தில் மிதந்தபடியே சிக்கிமின் இயற்கை அழகியலை ரசிக்கலாம். மடங்கள், ஏரிகள், கஞ்சன் ஜங்கா மலை உள்ளிட்ட இடங்களை சாலை மார்க்கமாக சென்று பார்வையிடலாம்.

3. மெக்லியோட்கஞ்ச், இமாச்சலபிரதேசம்:

McLeodganj, Himachal Pradesh
McLeodganj, Himachal Pradesh

இங்கு திபெத்திய மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அதனால் ‘லிட்டில் லாசா’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காங்க்ரா விமான நிலையம் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திபெத்திய கலாசாரம், மடாலயங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் அழகை பார்வையிட்டு மகிழலாம்.

4. குல்மார்க், காஷ்மீர்:

Gulmarg, Kashmir
Gulmarg, Kashmir

குல்மார்க், சிறந்த பனிச்சறுக்கு இடமாக அறியப்படுகிறது. இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது. நீண்ட சாலை பயணத்தின் வழியாக இந்த பனி சூழ்ந்த அதிசய பகுதிக்கு செல்வதற்கு பதிலாக விமான பயணத்தின் மூலம் குறுகிய நேரத்தில் சென்றடைந்துவிடலாம்.

இங்கிருந்து ஸ்ரீநகர் விமான நிலையம் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. விமானத்தில் இருந்து இறங்கியதும் சாலை மார்க்கமாக பசுமையான பள்ளத்தாக்குகள், புல்வெளிகளை ரசித்தபடியே பயணத்தை தொடரலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் பனிப்பொழிவை கண்டு ரசிக்க வேண்டிய 8 இடங்கள்!
Indian airports

5. சிம்லா, இமாச்சல பிரதேசம்:

Shimla, Himachal Pradesh
Shimla, Himachal Pradesh

சிம்லா, வட இந்தியாவில் அமைந்திருக்கும் பிரபலமான மலைவாசஸ்தலம். அங்கு செல்ல சாலை மார்க்கமாக மணிக்கணக்கில் நேரத்தை செலவழிப்பதற்குப் பதிலாக சிம்லாவில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிம்லா விமான நிலையத்திற்கு விமானம் மூலம் நேரடியாக சென்றடையலாம்.

அங்கிருந்து கார் போன்ற வாகனங்கள் மூலம் பயண களைப்பின்றி சிம்லாவில் இருக்கும் இடங்களை சுற்றிப்பார்க்கலாம். சம்மர் ஹில்ஸ், சிம்லா அருங்காட்சியகம், ஜக்ஹோ கில்ஸ், குர்பி, தி ரிட்ஜ், அனந்தலே, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ், சாட்விக் அருவி, கிறிஸ்ட் சர்ச் உள்ளிட்ட இடங்கள் சிம்லாவில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்.

6. குலு - மணாலி, இமாச்சல பிரதேசம்:

Kullu - Manali, Himachal Pradesh
Kullu - Manali, Himachal Pradesh

சாகசத்தை விரும்புவோருக்கும், இமயமலையின் அமைதியான அழகை பார்வையிட ஆசைப்படுபவர்களுக்கும் குலு - மணாலி சிறந்த இடம். குலுவில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், மணாலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் பந்தர் விமான நிலையம் இருக்கிறது.

விமான பயணத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயண நேரத்தை வெகுவாக குறைக்கலாம். ரிவர் ராப்டிங் (ஆற்றில் படகு சவாரி), டிரெக்கிங் மற்றும் குளிர்ந்த மலைக் காற்றை ரசிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com