ஒரு அழகான தோட்டத்தின் வழியாக ரசனையோடு நடந்து செல்வதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? இந்தியாவில் கடந்த கால முகலாயத் தோட்டங்கள் முதல் தற்கால தாவரவியல் பூங்காக்கள் வரை பல்வேறு வகையான தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் பெற்று சிறப்புற்று விளங்குகிறது. அவ்வாறான அழகியத் தோட்டங்ககள் சிலவற்றையும் அவற்றின் மணமிக்க வசீகரத்தையும் நுகர்ந்து மகிழ்வோம்!
கிருஷ்ணராஜ சாகர் அணை வளாகத்திற்குள், 60 ஏக்கர் பரப்பளவில், பசுமை போர்த்தி வசீகரித்து அழகுடன் நறுமணம் கமழ்ந்து வருகிறது பிருந்தாவன் தோட்டம்.
காவேரி நதியைக் கடக்க கிருஷ்ண ராஜ உடையார் கே ஆர் எஸ் அணையைக் கட்டினார். அப்போது மைசூர் திவானாக இருந்த சர் மிர்ஷா இஸ்மாயில், அணையின் சுற்றுப் புறங்களை அழகு படுத்தும் விதமாக 1927-ல் இத் தோட்டத்தை அமைத்தார். இந்தியாவின் சிறந்த மொட்டை மாடி தோட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது பிருந்தாவன் தோட்டம்.
இந்தியாவில் முதன் முதலில் அமைக்கப்பட்டது, இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம். இது தால் ஏரியின் அழகிய பின்னணியில் அமைந்துள்ளது. ஸ்ரீ நகரில் ஜபர்வான் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் 75 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டமாக தனித்துவம் கொண்டு விளங்குகிறது. 2007-ஆம் ஆண்டு முதல் இத்தோட்டம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் வருடாந்திர துலிப் திருவிழா அனைவரையும் தனித்துவமாக ஈர்த்து வருகிறது. இங்கு இத்தோட்டம் பிரத்யேகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு மொட்டை மாடிகளில், துலிப் பூக்களால் அழகுப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரான்குலஸ், டாஃபோடில்ஸ், பதுமராகம் வகைப் பூக்களும் அழகூட்டி வருகிறது. மலர் ஆர்வலர்களுக்கு துலிப் திருவிழா மனதை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
காஷ்மீரின் மிகப்பெரிய முகலாயத் தோட்டமான ஷாலிமார் பாக் தோட்டமாகும். இது தால் ஏரியின் விளிம்பில் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் தனது ராணி நூர்ஜஹானுக்காக இத்தோட்டத்தை வடிவமைத்தார். இது 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு மூன்று மொட்டை மாடிகள் அழகியப் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. திவான் - இ – ஆம் என்று அழைக்கப்படும் நுழைவாயிலில் பொதுமக்கள் நுழையலாம். திவான்- இ-காஸ் இது தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது. இதில் அரசவைப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மூன்றாவது மொட்டை மாடி தோட்டப்பகுதியை அரசவைப் பெண்கள் பயன்படுத்தலாம் என்கிற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ளது மெஹ்தாப் பாக் தோட்டம். இது இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான தோட்டங்களில் ஒன்றாகும். மெஹ்தாப் பாக் என்பது உருது மொழி வார்த்தை ஆகும். இதற்கு நிலவொளித் தோட்டம் என்பது பொருள்.
முதல் முகலாயப் பேரரசர் பாபர் 16 ஆம் நூற்றாண்டில் சதுர வடிவ தோட்டமாக நிறுவினார். இது யமுனை மறுகரையில் இருந்து தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு இதுவே சிறந்த இடமாக ஷாஜஹான் தேர்ந்தெடுத்தார். அற்புத நினைவுச் சின்னம் வழங்கும் அழகான காட்சிகளை கண்டுகளிக்கும்படி இத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மிக அழகியத் தோட்டங்களில் ஒன்றாக சாமோலி தோட்டம் கருதப்படுகிறது. இது பூக்களின் பள்ளத்தாக்கு என்ற தனித்துவம் கொண்டுள்ளது. இது உத்ரகண்டில் உள்ள கம்பீரமான இமயமலைத் தொடர்களில் மறைந்துள்ளது. இதனை புகழ்பெற்ற ஆய்வாளரும், மலையேறுபவருமான ஃபிராங்க் எஸ்.ஸ்மித் கண்டுபிடித்தார்.
உலக பாரம்பரிய தளமான பூக்களின் பள்ளத்தாக்கு சாமோலி ஆகும். சாமோலி மாவட்டத்தில் 87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பூக்களால் நிரம்பி மனதை மயக்கி வருகிறது.
இதனை சுற்றியுள்ள பனிப்பாறைகளிலிருந்து புஷ்பவதி நதி உருவாகி பள்ளத்தாக்கைக் கடக்கிறது. மின்னும் பனிப்பாறைகள், சலசலக்கும் நீரோடைகள் மற்றும் பூக்கும் புல் வெளிகளால் சூழப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு முதல் தேசியப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
லால் பாக் இந்தியாவின் அழகிய தோட்டங்களில் ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டில் மைசூர் இராஜ்ஜியத்தின் ஆட்சியாளரான ஹைதர் அலி, முதலில் இத்தோட்டத்தை வடிவமைத்தார். பின்னர் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தானால் காஷ்மீரில் உள்ள முகலாயத் தோட்டங்களின் பாணியில் பெரியதாக அலங்கரிக்கப்பட்டது.
ஒரு பெரிய கண்ணாடி கன்சர்வேட்டரி மற்றும் மூவாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரானைட்டால் ஆன லால் பாக் பாறையால் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இது ஒரு வகையான புவியியல் நினைவுச் சின்னமாகும்.
இந்த அழகியத் தோட்டங்களை கண்டு வந்த பின்னர் நம் அகத்தோட்டத்தில் இனிய நினைவுகள், நித்தம் நித்தம் பூத்துக் குலுங்கும் மலர்களாக மலரும் என்பது மட்டும் நிச்சயம்!