தற்போது பெண்கள் தனியாக டூர் செல்வது ஃபேஷனாகி வருகிறது. பயணம் செய்யும் இடங்கள் பாதுகாப் பானவைகளாக இருந்தால் பெண்கள் பயமின்றி தனியாக பயணம் போய் வரலாம். இந்தியாவில், மழைக்காலத்தில் பெண்கள் தனியாக பயணிக்க ஏற்ற 6 இடங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மழைக்காலத்தில் மூணாறின் தேயிலைத் தோட்டங்களும் மூடுபனியால் சூழப்பட்ட மலைகளும் பார்ப்பவரை மயக்கும் விதத்தில் இருக்கும். இங்கு அவ்வப்போது பெய்யும் லேசான தூறல், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகை மேம்படுத்துகின்றன. இங்கு பெண்கள் தனியாக பயணம் செய்து இந்த அழகை ரசிக்கலாம். உள்ளூரில் பாதுகாப்பாக ஓய்வெடுக்கவும் தங்கவும் வசதியான இடங்கள் உள்ளன. மழைக் காலங்களில் இந்தப்பகுதி பரபரப்பின்றி அமைதியாக இருக்கும்.
கூர்க், இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப் படுகிறது. கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலம் இது. மழைக்காலத்தில் இந்தப் பகுதி அழகான பசுமைப் பிரதேசமாக காட்சியளிக்கிறது. இதில் உள்ள மலைப்பகுதி முழுவதும் பனி படர்ந்து பசுந்தாவரங்களால் சூழப்பட்டு, அழகான அருவிகளும் தண்ணீரை பொழிய, காபிப் பயிர்கள் செழித்து வளர்ந்து கண்களுக்கு அழகிய விருந்தளிக்கின்றது.
இந்த இடத்திற்கு பெண்கள் தனியாக பயணம் செய்யலாம். புகைப்படங்கள் எடுப்பதற்கும் இயற்கையை அமைதியாக ரசித்துக்கொண்டே நடப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்குள்ள மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். தங்கும் இடங்களும் மிகவும் பாதுகாப்பானவை. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து வேறுபட்டு அமைதியான சூழ்நிலையை இங்கு அனுபவிக்கலாம்.
ஆன்மீக மற்றும் கலாச்சார கலவையாகத் திகழும் வாரணாசி, ஒரு அழகான இடமாகும், மழைக்காலத்தில் அவ்வப்போது இங்கு மலைத்தொடர்களுக்கு அருகில் வெள்ளம் வந்தாலும் நகரத்திற்கு வசீகரத்தை சேர்க்கிறது. மழையால் அழகாக காட்சி அளிக்கும் கோயில்கள், அதிகாலை ஒலிக்கும் மந்திரங்கள், மாய கங்கா ஆரத்தி ஆகியவை மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன. சரியான திட்டமிடுதலுடன் பெண் பயணிகள் இங்கு வந்து தங்கி ஆன்மீகத் தேடலில் இறங்கலாம்
கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அடிக்கடி அழைக்கப்படும் ஷில்லாங் இந்தியாவில் சிறந்த பருவ மழைக்காலத்தில் செல்ல ஏற்ற இடங்களில் ஒன்றாகும். இங்குள்ள பச்சைப் புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், வசீகரமான காலனித்துவ கட்டிடங்களும் இந்தப் பகுதிக்கு உயிரூட்டுகின்றன. இங்குள்ள கலாச்சாரத்தையும் இயற்கை அழகையும் ரசிக்க பெண்கள் இங்கே பயணம் செய்து, தனியாக அலைந்து திரிந்து இவற்றை பொறுமையாக ரசிக்கலாம். மிக மிக பாதுகாப்பான இடமாகும்.
கோவாவின் உண்மையான இயற்கை அழகு அதன் உச்சத்தில் இருக்கும் நேரம் மழைக்காலத்தில்தான். பசுமையான அமைதியான கடற்கரைகள் குறைவான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருக்கும். இங்கு ஓய்வெடுக்கவும் உள்ளூரில் சுற்றிப் பார்க்கவும் ஏற்றது மழைக்காலம். பெண்களுக்கு இங்கே பாதுகாப்பான தங்குமிடங்கள் உள்ளன. எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகும். தனியாக தங்கும் பெண் விருந்தினர்களை சிறப்பான விருந்தோம்பலுடன் இங்கே ஆதரிக்கிறார்கள். யோகா ஓய்வு விடுதிகள், அழகான ரிசார்ட்டுகள் உள்ளன.
ராஜஸ்தான் பாலைவன வெப்பத்திற்கு பெயர் பெற்றிருந்தாலும் மழைக்காலத்தின் போது வியக்கத்தக்க வகையில் இதன் சூழ்நிலை மாறி விடுகிறது. ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படும் உதய்ப்பூர், மழையால் உயிர்பிக்கப்படுகிறது. இங்குள்ள அழகான அரண்மனைகள் மற்றும் பாரம்பரிய தளங்கள் மழையின் உதவியால் புதுப்பிக்கப்பட்ட அழகுடன் மினுமினுக் கின்றன. மழைக்காலங்களில் மற்ற பருவங்களை விட தெருக்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் பெண்கள் அமைதியாக இங்கு பயணம் மேற்கொண்டு இடங்களை சுற்றிப் பார்த்து ரசிக்கலாம். கலைக்கூடங்கள் மற்றும் ரூஃப் ரெஸ்டாரண்டுகளில் உணவுகள் உண்ணலாம். ஏரியில் அமைதியான படகு சவாரி செய்யலாம்.