
திருப்பதி செல்பவர்கள் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில், கீழ் திருப்பதியில் உள்ள அலமேலு மங்காபுரம், சீனிவாச மங்காபுரம் போன்ற கோவில்களுக்கு மட்டுமே சென்று வருகிறார்கள். ஆனால் திருப்பதியில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகையில் திருப்பதி செல்பவர்கள் சுற்றி பார்க்க வேண்டிய 7 இடங்கள் குறித்து இப்பதிவை காண்போம்.
சந்திரகிரி கோட்டை
திருப்பதியிலிருந்து 17கி.மீ தூரத்தில் 11ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் உருவாக்கப்பட்ட சந்திரகிரி கோட்டை உள்ளது. விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்த அரண்மனைகள், கோவில்கள் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருப்பதோடு, இந்தக் கோட்டையை சுற்றி அழகான தோற்றங்கள், இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன.
தலகோனா நீர்வீழ்ச்சி
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் 270 அடி உயரத்தில் அமைந்துள்ளது தலகோனா நீர்வீழ்ச்சி . நீர்வீழ்ச்சி உச்சி முதல் அடி வரை முழுவதுமாக காண முடியும் என்றாலும், மழைக்காலங்களில் இதன் அழகை பார்ப்பதே தனி சுகமாக இருக்கும். காட்டுப்பகுதியில் இயற்கை அழகை ரசித்து மகிழ,பறவைகளை ரசிக்க, டிரக்கிங் செல்ல , நீர்வீழ்ச்சியில் நீராட நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் தேசிய நெடுஞ்சாலையில் 57 கி.மீ., தூரத்தில்இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
சிலா தோரணம்
இயற்கையாக பாறைகள் ஒன்றிணைந்து தோரணம்போல் அமைந்து பிரமிப்பை ஏற்படுத்தும் சிலா தோரணம் திருமலைக்கு செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம். இந்த பாறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக சொல்லப்படுவதோடு, மிகவும் அபூர்வமான, இந்த இடம் அமைதியை உணர்வதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்ற இடம்.
டீர் பார்க்
இயற்கையான சூழ்நிலையில் பல வகையான மான்கள் பராமரிக்கப்படும் திருப்பதியில் அமைந்துள்ள மிகவும் அழகான மான்களின் சரணாலயம்தான் டீர் பார்க். நகரத்திலிருந்து சற்று ஒதுங்கி இருக்கும் இந்த இடம் இயற்கை அழகு நிறைந்த ஒரு இடமாக உள்ளதோடு திருப்பதியில் மறக்க முடியாத அனுபவத்தை பெறுவதற்கு ஏற்ற இடம்.
கபில தீர்த்தம்
கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்வதற்கு முன்பாக மலை அடிவாரத்திலேயே இந்த கபில தீர்த்தம் அமைந்துள்ளது. தீர்த்தம் என்பது பெயரில் மட்டுமே உள்ளது. ஆனால் உண்மையில் இது நீர்வீழ்ச்சி. மிகவும் புனிதமான தீர்த்தமாக கருதப்படும் இந்த தீர்த்தத்திற்கு அருகிலேயே சிவபெருமான் கோவில் உள்ளது. இயற்கை அழகு நிறைந்து, மனதிற்கு அமைதி தரும் ஒரு அற்புதமான இடம்.
குடிமல்லம் குகை கோவில்
திருப்பதியின் பெருமைமிகு கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சொல்லும் இடம் குடிமல்லம் குகை கோவில். நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இங்குள்ள சிவன், லிங்கமாகவும், உருவமாகவும் ஒரு சேர அமைந்திருப்பது காண்பதற்கு மிகவும் சிலிர்ப்பாக இருக்கும். பல புராண கதைகள் இங்கு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளதோடு, பழமையான ஆன்மீக தலமாகவும் இது கருதப்படுகிறது.
வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றுதான் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா. ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். மயில்கள், அரிய வகை விலங்குகள், புலிகள், பச்சை கிளிகள், சிறுத்தைகள் போன்ற பல விதமான உயிரினங்களை இங்கு காண முடியும்.
திருப்பதி செல்வர்கள் மேற்கூறிய சுற்றுலா இடங்களையும் பார்த்து வருவது ஒரு இனிமையான அனுபவத்தை கொடுக்கும்.