
இந்தியர்களாகிய நாம் தற்போதைய உலகில் எப்போதும் பிசியாகவே இருக்கிறோம். குடும்பம், வேலை, சமூகப் பொறுப்புகள் என அனைத்துமே நம்மை சூழ்ந்துள்ளன. இந்த அளவுக்கு அதிகமாக வேலை செய்வது நமக்கு நல்லதல்ல. தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் வேலை செய்வதால் பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் போதுமான அளவு ஓய்வு எடுக்காமல் இருப்பதால், உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. நீங்கள் தினசரி போதுமான அளவு தூங்கினாலும் நாள் முழுவதும் சோர்வாக உணர்ந்தால் இது உங்கள் உடலுக்கு ஓய்வு தேவை என்பதன் அறிகுறியாக இருக்கலாம். இது தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை நிச்சயம் அணுக வேண்டும்.
2. தொடர்ச்சியான மன அழுத்தம், பதட்டம் உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது தூக்கக் கோளாறு செரிமானப் பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
3. நீங்கள் நீண்ட காலம் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உங்கள் உடல் உடலுக்கு ஓய்வு தேவை. போதுமான தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனம் சரியாக செயல்படாது.
4. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தசை வலி ஏற்படும். அதிகமாக தசைவலி எடுத்தாலும் நீங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.
5. அடிக்கடி தலைவலி வருவது உங்கள் உடலுக்கு ஓய்வு தேவை என்பதன் மற்றொரு அறிகுறி. அதேநேரம் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும் தலைவலி உண்டாகலாம்.
6. ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உங்களை எளிதில் நோய்கள் உண்டாக வழிவகுக்கும்.
இந்த 6 அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் அதை முறையாக கவனித்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். உங்கள் உடல் ஓய்வு எடுக்கச் சொல்லும் போது அதை புறக்கணிக்காமல் உடனடியாக ஓய்வெடுப்பது நல்லது. நீங்கள் தினசரி போதுமான அளவு தூங்கினாலே எந்த உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்படாது. இத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவை உங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.