இந்தியா என்றாலே பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு பன்முகம் கொண்ட நாடு. அந்த வரலாற்றை இன்னும் சுவாரஸ்யம் ஆக்க நம் நாட்டில் அனைவராலும் பார்த்து ரசிக்க வேண்டிய சில நீர் பகுதிகளின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ரேட்டாஸ் குண்ட், ஒரு புனிதமான நிலத்தடி ஏரியாகும். புராணங்களின் படி, காதல் கடவுளான காமதேவ், சிவபெருமானின் கோபத்தால் அழிக்கப்பட்ட போது, அவரது மனைவி ரதி இந்த இடத்தில் கண்ணீர் விட்டு, குண்டத்தை உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது . இந்த ஏரி நீரின் கீழ் "ஓம் நம சிவா" என்று நாம் உச்சரிக்கும் போது, நீர் இயற்கையாகவே கொப்புளிப்பது இதன் சிறப்பம்சமாகும். கூடுதலாக, ரேட்டாஸ் குந்திலிருந்து புனித நீர் அருந்துவது சிவபெருமானின் தெய்வீக அருளைப் பெறுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள சக்ரதீர்த்த பகுதியில்(Chakratirtha area) அமைந்துள்ள ருத்ரவர்த் குண்ட், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் அரிய கோவிலாகும். பாரம்பரிய சிவலிங்கங்கள் போல் இங்கு சிவலிங்கம் தெரிவதில்லை. இக்கோயில் "ருத்ராவர்த் தீர்த்தம்" மற்றும் "ருத்ராவர்த் குண்ட்" என இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் அதிசய அம்சம் விஞ்ஞானிகளைக் கூட வியப்பில் ஆழ்த்துகிறது; பக்தர்கள் ஐந்து பழங்களை வழங்கினால், இரண்டு அல்லது மூன்று மட்டுமே திரும்பும், மீதமுள்ளவை தண்ணீரில் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆற்றின் ஆழத்தில், படல்புரியில்,(Patalpuri) சிவபெருமானின் மறைந்த சிவலிங்கம் உள்ளது, இது தான் இந்த நிகழ்வை ஏற்படுத்துகிறது என்பது நம்பிக்கை. கோமதி ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த கோவிலின் அமைதியான சூழல், யாத்ரீகர்கள் மற்றும் ஆர்வமுள்ள பயணிகள் அவசியம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய இடமாக இருக்கும்.
இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பீம்குண்ட், பசுமையான காடுகள் மற்றும் பாறை மலைகளுக்கு மத்தியில் இயற்கையாக உருவான நிலத்தடி ஏரியாகும். உள்ளூர் புராதன கதைகளின் படி, பாண்டவ இளவரசர் பீமன், பாண்டவர்களின் வனவாசத்தின் போது தனது கதாயுதத்தால் தரையில் அடித்து இந்த புனித நீர் தொட்டியை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. பீம்குண்ட் நீர் மிகவும் சுத்தமாகவும், தெளிந்தும் இருப்பதால், அதன் ஆழத்தில் மீன்கள் நீந்துவதைத் தெளிவாகக் நாம் காணலாம். மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படும் இந்த குளிர்ந்த நீரில் குளிக்க பக்தர்கள் இந்த அமைதியான இடத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள சடோபந்த் தால் மலையேற்றமானது இயற்கை அழகையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு வசீகரமான பயணமாகும். வழியில், இந்து புராணங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் அற்புதமான வசுந்தரா நீர்வீழ்ச்சியை நாம் பார்க்கக்கூடும். இறுதியாக, மலையேற்ற பயணமானது, பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு பனிப்பாறை ஏரியான, அழகிய சடோபந்த் தால்க்கு செல்கிறது. இந்த ஏரி புராண முக்கியத்துவம் வாய்ந்தது, காரணம் இமயமலை சிகரங்களான சௌகம்பா(Chaukhamba), நீலகந்த்(Neelkanth) மற்றும் ஸ்வர்கரோஹினி(Swargarohini) போன்ற பிரமிக்க வைக்கும் மலைத்தொடர்களை நம்மால் இங்கு காண முடியும்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் கோயில் மற்றும் அலக்நந்தா நதியின் நடுவே அமைந்துள்ள தப்த குண்ட், நோய்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட வெப்ப நீரூற்றாகும். கோவிலுக்குள் நுழையும் முன் பக்தர்கள் பாரம்பரியமாக அதன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது வழக்கம். கந்தகம் நிறைந்த நீரூற்று நாராயண் சிகரத்தில் இருந்து உருவானதாகவும் மற்றும் இந்து கடவுளான அக்னியின் உறைவிடம் என்றும் நம்பப்படுகிறது.
இந்தியாவின் குஜராத்தில் கிர்னார் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தாமோதர் குண்ட் ஒரு புனிதமான ஏரியாகும். தாமோதர் குண்டில் நீராடுவதும், சாம்பல் மற்றும் எலும்புகளை இங்கு மூழ்கடிப்பதும் மோட்சத்தை (இறந்த ஆத்மாக்களுக்கு விமோசனம்) அளிக்கும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இப்பகுதியில் இளஞ்சிவப்பு மணற்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட தாமோதர் ஹரி கோயிலும் உள்ளது. இது கிருஷ்ணரின் பேரனால் நிறுவப்பட்ட சிலைகளைக் கொண்டுள்ளது மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் நரசின் மேத்தாவுடன் தொடர்புடையது. இந்த ஏரியானது கிர்னாரின் அழகிய மலையடிவாரங்களால் சூழப்பட்டுள்ளது, இது ஒரு அமைதியான மற்றும் ஆன்மீகம் நிறைந்த இடமாக நம்மால் உணர முடியும். ஆடி பௌர்ணமியின் போது ஒரு விசேஷமான பெரிய திருவிழா இங்கு நடைபெறும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோவர்தனில் அமைந்துள்ள ராதா குண்ட், பிரம்மாவின் படைப்புகளில் மிகவும் புனிதமான இடமாகும். ராதா குண்ட் மற்றும் ஷியாம குண்ட் ஆகியவை மயில் வடிவில் இருக்கும் கோவர்தனின் கண்களைக் குறிக்கின்றன. ராதையும் கிருஷ்ணரும் தங்களின் மிக நெருக்கமான மற்றும் இனிமையான நேரங்களை கழித்த இடம் இது. கிருஷ்ணர் இங்கு அரிஷ்டாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ராதா குண்ட் பக்தர்களுக்கு மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்தும் இடமாகவும் மற்றும் ஒரு புனித யாத்திரை தலமாகவும் இருக்கிறது. ராதா குண்டைச் சுற்றியுள்ள பகுதி பசுமையான சூழலை கொண்டுள்ளது. மேலும் அதன் நீர் ராதை மற்றும் கிருஷ்ணரின் தெய்வீக அன்பால் புனித படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ராதா குண்டில் புனித நீராடினால், இந்த தெய்வீக தம்பதியரிடம் ஆசி பெறுவதாக நம்பி யாத்ரீகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.