ஒரு பைக், கொஞ்சம் காசு, ஒரு டீக்கடை, ஒரு கப் டீ… இதைவிட வேறென்ன வேணும்?

Bike traveller
Bike traveller

- தா.சரவணன்

பயணம் என்பது எப்போதும் மனிதர்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். ஒருவர் ஆண்டு முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்து, வங்கிக் கணக்கில் பணம் சேர்த்துக்கொண்டே இருக்கலாம். பணி ஓய்வுக்குப் பின்னர், அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினால், பதில் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.  ஆனால், அதுவே, பணி ஓய்வுக்குப் பின்னர், வீட்டில் அமர்ந்துகொண்டு கடந்த காலத்தில் மேற்கொண்ட பயணங்களை மனதில் அசை போடும்போது ஏற்படும் சந்தோஷம் அளப்பரியது.

இதற்காகத்தான், செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தாலும், பயணத்தை நாம் அடிக்கடி மேற்கொண்டால், உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். மனமும் லேசாகும். அதற்காக வெளிநாடுகள்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நம் ஊருக்கு அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு பைக்கில் மிதமான வேகத்தில் சென்று வந்தாலே போதுமானது. அப்போது ஏற்படும் அனுபவங்களை மூளைக்குள் ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமது ஒய்வு காலங்களில் கை கொடுக்கும்.

நண்பர் ஒருவர், மாதந்தோறும் ஏதாவது ஒரு ஊருக்குப் பயணம் செய்வது அவரின் வாடிக்கை. அப்படிச் செல்லும் இடங்களில் அதன் புராதானம், அந்த ஊரில் வாழ்ந்தவர்கள், அந்த ஊருக்கான தனிச் சிறப்பு, அந்த ஊரைச் சுற்றிக் காணப்படும் விவசாயம், விவசாயிகள் நிலை உட்பட பல்வேறு விவரங்களைக் குறித்து வைத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அது குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு ஊரும் ஒரு பொக்கிஷமாக காணப்படுகிறது. என்னால் சுற்றமுடிந்த வரையில் இதுபோல குறிப்புகள் சேகரித்துக்கொண்டே இருப்பேன். சுற்ற முடியாத போது, குறிப்புகளை படித்தாலே அந்த ஊர்களுக்குச் சென்று வந்த திருப்தி கிடைக்கும். இதை என் வாரிசுகளுக்குப் பரிசாக வழங்குவேன். இதைவிட சிறந்த பரிசு அவர்களுக்கு என்னால் தர முடியாது” எனக் கூறுவார். இதுதான் பயணத்தின் வெற்றி.

இதையும் படியுங்கள்:
பயணத்தின்போது அவசியம் நாம் கொண்டு செல்ல வேண்டியது!
Bike traveller

நாம் செல்லும் இடங்களில் காணப்படும் சீதோஷ்ணம், அந்த ஊர் மக்களின் குணாதிசயங்கள், விருந்தோம்பல், விவசாயம், உணவு முறை, பழகும் விதம் என பல விஷயங்களை நாம் பார்ப்பது தினம்தோறும் கற்றுக்கொள்வதைப் போலத்தான். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நாம் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம் என்பதை பயணம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நம் மாநிலத்தை எடுத்துக்கொண்டால், வேலுாரில் ஒரு வெப்பநிலையும், கோவையில் ஒரு வெப்ப நிலையும் காணப்படும். ஒரு மாநிலத்துக்குள் அமைந்துள்ள ஊர்களுக்குள்ளே இவ்வளவு வித்தியாசங்கள் என்றால், பரந்து விரிந்த நம் நாட்டில் எவ்வளவு வித்தியாசமான விஷயங்கள் இருக்கும்; வித்தியாசமான மனிதர்கள் இருக்கின்றனர்! இது போன்றவற்றை தெரிந்துகொள்ளத்தான், பயணம் அவசியமாகிறது. ஆனால் நாமோ, கையில் செல்போனைத் துாக்கிக்கொண்டு, அதில் பார்த்து பரவசமடைகிறோம்.

பயணம் மேற்கொள்ளும்போது அதிகக் கூட்டத்தோடு செல்லாமல் இருப்பது பயணத்தைச் சிறப்பாக்கும். ஏனெனில் கூட்டமாகச் செல்லும் பயணம், வேறு ஏதோ ஒன்றில் முடிவதைக் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

தனிநபர், குறைந்த தூரம், வங்கிக் கணக்கில் போதிய பணம், ஒரு பைக் போதும். நம் பயணத்தை சிறப்பானதாக மாற்ற. பைக்கில் சென்று அடையாளம் தெரியாத கிராம டீ கடையில் பைக்கை நிறுத்தி, ஒரு டீ குடிப்பதைக் காட்டிலும் வாழ்க்கையில் என்ன பெரிய சந்தோஷம் நமக்கு காத்திருக்கப் போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com