ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஸ்மார்ட் ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக் கொடுக்கும்போது, இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையையும் அறிமுகப்படுத்திக் கொடுப்பது இன்றியமையாதது எனலாம். அதற்கு இந்த சம்மர் ஹாலிடே சீசனில் குழந்தைகள் இயற்கையின் அற்புதங்களை கண்டு களிக்க பெற்றோர் உதவலாம். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்...
1. ஃபயர் ஃபிளை (Firefly watching): மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புருஷ்வாடி, ராஜ்மச்சி அல்லது பீமாஷங்கர் போன்ற இடங்களில் உள்ள வன விலங்கு சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். அங்கு இரவு நேரங்களில் தலைக்கு மேலே பறக்கும் ஆயிரக் கணக்கான மின் மினிப் பூச்சிகளையும் அவை புரியும் மாயா ஜாலங்களையும் கண்டு களிக்கச் செய்யலாம். இதனால் குழந்தைகள் பயோலூமினெசென்ஸ் (bioluminescence) பற்றி அறிந்து கொள்ளவும் இயற்கை வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும்.
2. டீ எஸ்டேட் விசிட்: மூணாறிலுள்ள கொழுக்கு மலை டீ எஸ்டேட் அல்லது கண்ணன் தேவன் மலைகளுக்கு குழந்தைகளை கூட்டிச் சென்று தேயிலைத் தோட்டங்களைக் காணச் செய்யலாம். அங்கு அவர்கள் கையாலேயே டீ இலைகளைப் பறிக்கவும் பின் அந்த இலைகள் பதப்படுத்தப்பட்டு டீத்தூளாக மாறி பாக்கெட்களில் அடைக்கப்படும் நிலை வரை தொழிற்சாலைகளில் நிகழும் செயல்களை கண்டு புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
3. நைட் சஃபாரி: உத்தர்காண்டில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அங்கு வழிகாட்டிகளின் துணையோடு நைட் சஃபாரி செல்லலாம். அங்குள்ள புலி, ஆந்தை, சிவெட் பூனை (Civet cat) போன்ற விலங்குகளை நேரில் பார்க்கவும், இரவு நேரங்களில் காட்டிற்குள் நிலவும் அபூர்வமான சூழலையும், சப்தங்களையும் பிள்ளைகள் உணர்ந்து கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த சஃபாரி அமையும்.
4. மேன்ங்குரூவ் கயாக்கிங்: கோவாவில், சதுப்பு நிலக் காடுகள் சூழ்ந்த கடலோரப் பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். அங்கு படகில் கடல் நீரில் சிறிது நேரம் சுற்றி வரும்போது நண்டு, கிங்ஃபிஷர்ஸ் போன்ற கடல் வாழ் உயிரினங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பதுடன், கடலோரப் பகுதிகளைக் காப்பதில் சதுப்பு நிலக் காடுகளின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்.
5. ஆமை முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரித்தல்: ஒரிசாவிலுள்ள ருஷிகுல்யா பீச்சுக்கு குழந்தைகளை கூட்டிச் சென்று அங்கே ஆலிவ் ரிட்லீ வகை ஆமைகள் பீச் மணலுக்கு அடியில் இட்டு வைத்திருந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரித்து அவை முதல் முறையாக கடல் நீருக்குள் செல்லும் அனுபவத்தை காண வைக்கலாம்.
6. காபி மற்றும் மசாலா பொருட்கள் உற்பத்தி ஸ்தலம்: கர்நாடகா மாநிலத்தின் மடிகேரி அல்லது கூர்க் பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று காபி மற்றும் மிளகு, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களின் உற்பத்தியைப் பற்றி விளக்கிக் கூறலாம். எஸ்டேட்டை சுற்றி வரும்போது அங்கு நிலவும் சுகந்தமான வாசனையை அனுபவிக்க செய்யலாம்.
7. பறவைகளுக்கு உணவுக் கூடம் அமைத்தல்: பரத்பூர் நேஷனல் பார்க்கிற்கு குழந்தைகளை கூட்டிச் சென்று அங்கே மரக் கிளைகளில் பறவைகள் உண்பதற்காக உருவாக்கப்பட்ட மரத்திலான அமைப்புகளையும் அதில் தூவி வைத்திருக்கும் தானியங்களையும் பற்றி விளக்கிக் கூறலாம்.
8. கிளீன் வில்லேஜ் விசிட்: மேகாலயாவின் டா (Daw) அல்லது சிரபுஞ்சி போன்ற சுத்தமான சிற்றூர்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று காண்பித்து அந்த மலைப் பிரிதேசத்தின் அழகையும் அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் அவர்கள் அறிந்து கொள்ள உதவலாம்.
9. பீச் கிளீன்-அப்: சென்னையிலுள்ள மெரினா அல்லது எலியட் பீச்சுக்கு அழைத்துச் சென்று கம்யூனிட்டி பீச் கிளீன்-அப் செயல்பாடுகளில் பங்கேற்க செய்யலாம். அதன் மூலம் கடலோரப் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதின் அவசியத்தை அவர்கள் உணரச் செய்யலாம்.