Palacio de Sal
Palacio de SalImg Credit: visit latin america

ஒரு குளியலறை, 12 இரட்டைப் படுக்கையறைகள் கொண்ட உப்பு மாளிகை! கரிக்குமோ? No No!

Published on

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் 'சாலர் டி உயினி' (Salar de Uyuni) என்னும் உலகின் பெரிய உப்புப்படுகை அமைந்திருக்கிறது. பொலிவியாவின் தலை நகரான லா பாசில் இருந்து 350 கி.மீ. (220 மைல்) தொலைவில் அமைந்திருக்கும் இந்த உப்புப்படுகையில், உப்புப் பாளங்களைக் கொண்டு உலகின் முதல் உப்பு விடுதி கட்டப்பட்டது. ‘உப்பு மாளிகை’ (Palacio de Sal) என்று அழைக்கப்படும் இந்த உணவு விடுதி, டான் ஜுவான் க்வீசடா என்ற கட்டுமான வல்லுநரால் கட்டப்பட்டது.

உலகின் முதல் உப்பு விடுதி பொலிவியாவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் வேறு சில இடங்களிலும் சில உப்பு விடுதிகள் கட்டித் திறக்கப்பட்டன. இருப்பினும், பொலிவியாவிலுள்ள பேலசியோ டி சால் என்றழைக்கப்படும் உப்பு மாளிகைதான் உலகின் மிகப் பெரியது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இந்த விடுதிக் கட்டிடத்தில் ஏற்படும் சில சேதங்கள், மழைக்காலம் முடிந்த பின்பு மறுசீரமைக்கப்படுகிறது.

பொலிவியாவில் அமைந்திருக்கும் ‘சாலர் டி உயினி’ உப்புப் படுகையே உலகின் மிகப்பெரிய உப்புப் படுகையாகும். தென்மேற்கில் ஆந்தீஸ் மலைத்தொடருக்கு அருகில் 3,656 மீட்டர் (11,995 அடி) உயரத்தில் அமைந்திருக்கும் இந்த உப்புப் படுகை 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு கொண்டது.

இதனை ஒளிப்படம் எடுப்பதற்காகவே, உலகம் முழுவதுமிருந்து பல ஒளிப்படக்கலைஞர்கள் இப்பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்கின்றனர். இதே போன்று, இயற்கையழகை விரும்புபவர்கள் பலரும் இப்பகுதிக்குச் சுற்றுலா வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டுக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சாலர் டி உயினி உப்புப் படுகையைப் பார்வையிட நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்லும் வரை தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி இல்லாமல் இருந்த நிலையில், நிலக் கட்டுமானப் பொருட்கள் எதுவும் கிடைக்காத இந்த ஒதுக்குப்புறமான பகுதியில் உப்புப் பாளங்களைக் கொண்டு ஒரு விடுதியைக் கட்டலாம் என்ற முடிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா – மனதைத் திறக்கும் மந்திர சாவி!
Palacio de Sal

அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் 1993 முதல் 1995 வரையிலான காலத்தில் சாலர் டி உயினி உப்புப் படுகையின் மையப்பகுதியில் உப்புப் பாளங்களைக் கொண்டு உப்பு மாளிகை கட்டப்பட்டது. 12 இரட்டைப் படுக்கையறைகளுடன் ஒரு பொதுவான குளியலறையைக் கொண்டு கட்டப்பட்ட இந்த விடுதியும் சுற்றுலாத்தலமானது. இருப்பினும், சாலர் டி உயினி உப்புப் படுகையின் மையப்பகுதியில் இந்த விடுதி அமைக்கப்பட்டிருந்ததால், இப்பகுதியில் நலவாழ்வு சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சுழல் மாசுபாடு காரணமாக, 2002 ஆம் ஆண்டில் இந்த விடுதி கலைக்கப்பட்டது.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் சாலர் டி உயினி உப்புப் படுகையின் கிழக்கு ஓரத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு, அரசின் அனைத்துச் சுற்றுச்சூழல் நடைமுறைகளையும் பின்பற்றி, ‘உப்பு மாளிகை’ (Palacio de Sal) புதிதாகக் கட்டப்பட்டது. இந்த உப்பு மாளிகை 35 செ.மீ (14 அங்குலம்) கனமுடைய 1 மில்லியன் (10 இலட்சம்) உப்புப் பாளங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இம்மாளிகையின் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை, இருக்கை மற்றும் அறைகலன்கள் என அனைத்தும் உப்பால் செய்யப்பட்டவைகள்தான். இங்கிருக்கும் நீராவிக் குளியலறை, நீர்ச்சுழல் குளியலறை, நீச்சல் குளம் என்று அனைத்தும் உப்புப் பாளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டவைதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com