ஆப்பிரிக்கா என்றாலே அழகிய மலைகளும், அடர்ந்த காடுகளும் ஏராளமான வன விலங்குகள் வசிக்கும் பூமி என்பதை நாம் அறிவோம். பிரம்மாண்டமான இயற்கை அதிசயங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை கொண்ட, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும், சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ள அழகிய பிரதேசம் இது. இந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய தலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று புதிய அனுபவத்தை பெறலாம்.
தான்சானியா நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்காவை பற்றி எந்த அறிமுகமும் தேவை இல்லை. டிஸ்கவரி சேனலில் ஓயாமல் காட்டப்படுவது பெரும்பாலும் செரங்கட்டி தேசியப் பூங்காவைத்தான். 10 லட்சத்திற்கும் அதிகமான காட்டு மாடுகளையும், வரிக்குதிரைகளையும் கொண்ட பரந்த வனப்பகுதி இது.
பெரிய சவன்னா புல்வெளிகளில் சிங்கங்கள் நன்கு உண்டுவிட்டு மயங்கி கிடப்பதையும், சிங்கம் சாப்பிட்ட எச்சத்தை இழுத்துச்செல்ல காத்திருக்கும் கழுதைப் புலிக்கூட்டத்தையும், ஏதேனும் உணவு கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நிற்கும் சிறுத்தைகளையும், பார்க்க முடியும். இயற்கை அழகில் லயித்துபோக செரங்கட்டி ஒரு அற்புதமான இடமாகும். மும்பையில் இருந்து தான்சானியாவின் ஜூலியஸ் நைரரே விமான நிலையம் வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து சிறிய விமானம் மூலம் செரங்கட்டியை அடையலாம்.
இதுவும் தான்சானியா நாட்டில்தான் உள்ளது. ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமாக கிளிமஞ்சாரோ இருக்கிறது. பனி மூடிய மலைகளை கொண்ட இந்த மலைப்பிரதேசம், பல வனவிலங்குகளின் வாழிடமாகவும் உள்ளது. கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவில் ஒருபுறம் வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் ஆல்பைன் பாலைவனம் வரை பறந்து உள்ளது. ஒரு தேசியப் பூங்கா ஒரே நேரத்தில் பல்வேறு காலநிலைகளை பிரதிபலிப்பது இங்கு மட்டும்தான்.
இங்கு காட்டெருமைகள், யானைகள், சிறுத்தைகள், நரிகள் போன்றவை ஏராளமாக வாழ்கின்றன. செரங்கட்டி தேசிய பூங்காவை சுற்றிய பின்னர் தரைவழியில் கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவையும் சுற்றிப் பார்க்கலாம். ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமாக இருந்தாலும் இதில் ஏறுவது எளிமையானது.
காங்கோ ஜனநாயக குடியரசு தான்சானியாவிற்கு அருகில் உள்ள நாடான காங்கோவில்தான் ஆப்பிரிக்காவின் மிகவும் பழமையான விருங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு செயலில் உள்ள எரிமலைகளும், எரிமலை ஏரிகள் மற்றும் பசுமையான மழைக் காடுகளும் உள்ளன. இந்த பூங்காவில் அழிந்துவரும் மலைக் கொரில்லாக்கள் மற்றும் தங்கநிற கொரில்லாக்கள் அதிகளவில் இருக்கின்றன. கண்கவர் பசுமையான மலைகளும், காடுகளும் கொண்ட மனதிற்கு அமைதியை தரும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. கிளிமஞ்சாரோவில் இருந்து ரயில், கார் மூலம் விருங்கா தேசிய பூங்காவிற்கு செல்லலாம். விமானம் மூலமும் செல்லலாம்.
காங்கோவில் கோமா விமான நிலையத்தில் இருந்து போட்ஸ்வானாவின் மவுன் விமான நிலையத்தை அடையலாம். அங்கிருந்து சிறிய விமானம் மூலமாக ஒகாவாங்கோ டெல்டா பகுதியை அடையலாம். மிகப்பெரிய சுட்டெரிக்கும் கலஹாரி பாலைவனத்தின் நடுவில் மிகவும் பசுமையுடன் காணப்படும் இயற்கை எழில் மிகுந்த ஒகாவாங்கோ டெல்டா உள்ளது.
இங்கு இயற்கையில் அமைந்துள்ள கால்வாய்கள், ஏரிகள், அதன் நடுவில் உள்ள அழகிய தீவுகள், பசுமையான மரங்கள் என மனதை கவரும் இடங்கள் இங்கு ஏராளம். சதுப்பு நிலங்களில் வசிக்கும் வனவிலங்குகளின் நடமாட்டங்கள் மாலைப் பொழுதை ரம்மியமாக்கும். சதுப்பு நில முதலைகள், சதுப்பு நிலப் பறவைகள் , சிறிய நீர் விலங்குகள், பெரிய யானைகள், நீர் யானைகள் பயணத்தை திரில்லாக்குகின்றன.
போட்ஸ்வானாவின் மவுன் விமான நிலையத்தில் இருந்து, நமீபியாவின் வால்விஸ் பே விமான நிலையம் வரை விமானத்தில் சென்று, பின்னர் தரை வழியாக நமீப் மணல் கடலை அடையாளம். சிவப்பு நிறத்தில் மணல்களை கொண்ட உயரமான மலைகளையும் அருகில் நீல நிறக்கடலையும் காண்பது கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த மணல் கடலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், அயன் படத்தில் சூரியாவும் தமன்னாவும் ஆடும் நெஞ்சே நெஞ்சே பாடல் இங்குதான் படமாக்கப்பட்டுள்ளது.