
சிறைச்சாலைகள் கல்விக்கூடங்களாக மாறவேண்டும். மேலும் குற்றவாளிகள் இல்லாத நாடாக இருக்கவேண்டும் என்பதுதான் அனைத்து நாடுகளின் ஒருமித்த விருப்பமாக இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இருக்கும் அதிபயங்கரமான சிறையான அல்காட்ராஸ் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
அமெரிக்காவில் ஒரு காலத்தில் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பெடரல் சிறையாக அல்காட்ரஸ் சிறை இருந்தது. கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்த அல் காட்ராஸ் 1912 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ சிறையாக மாற்றப்பட்டது.
அதன் பின்னர் நவீன மயமாக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. 1934 முதல் அது முக்கியமான பெடரல் சிறையாகச் செயல்படத் தொடங்கியது. மூன்று மாடிகளைக்கொண்ட இந்தச் சிறை, அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறையாகக் கருதப்பட்டது.
ஏனெனில் தனியாக ஒரு தீவில் இந்த சிறை அமைந்துள்ளதால் சுலபமாக கைதிகளால் தப்பிக்க முடியாது. அப்படியே அதைத்தாண்டி கடலில் குதித்தாலும், குளிர்ச்சியான நீரும் வலுவான கடல் நீரோட்டமும் அவர்களைச் சிறிது தூரத்திற்கு மேல் செல்லவிடாது. அதை எல்லாம் சமாளித்தாலும் கூட அங்குள்ள சுறாக்கள் அவர்களைக் காலி செய்துவிடும். இதன் காரணமாகவே பாதுகாப்பான சிறையாக அல்காட்ராஸ் சிறை கருதப்பட்டது.
இதில் பிரதானச் சிறைக் கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டிருந்தது. அதில் நான்கு செல் பிளாக்குகள் இருந்தது. மேலும், வார்டன் அலுவலகம், விசிட்டிங் ரூம், ஒரு நூலகம் மற்றும் ஒரு சலூன் மட்டுமே அங்கு இருக்கும். அதில் மிகவும் ஆபத்தான கைதிகள் டி-பிளாக்கிற்கு அனுப்பப்படுவர். அந்தக் கடைசி ஆறு சிறை செல்களை தி ஹோல் என்று அழைத்தனர்.
1934ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் நவீனமயமாக்கப் பட்டபோது, அதில் இரும்பு படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. உப்புக் காற்று மற்றும் நீர் அரிப்புக் காரணமாகச் சிறை சுவர்கள் சேதமடைந்து இருந்த நிலையில், அவை வலுப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சிறைகளில் இருந்து எந்தவொரு கைதியும் தப்பித்துப்போக முடியாத சூழல் உருவாக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுக்கான கடைசி இடமாக அல்காட்ராஸ் சிறை இருந்தது. அமெரிக்க வரலாற்றில் அதிபயங்கரத்தீவிரவாதிகளாகக் கருதப்படும் ல்போன்ஸ் கபோன், ஜார்ஜ் "மெஷின் கன்" கெல்லி மற்றும் ராபர்ட் பிராங்க்ளின் ஸ்ட்ரூட் உள்ளிட்டோர் இந்தச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழைய சிறையான அல்காட்ரஸ் சிறையின் மோசமான நிலை காரணமாக இந்த அதிபயங்கரமான சிறை 1963 ஆம் ஆண்டு மூடப்பட்டது. 1972ல் இந்த சிறை அமெரிக்க தேசிய பூங்கா சர்வீஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு சுற்றுலாத்தலமானது.
ஆனால் இப்போது அமெரிக்கா அதிபராக புதிதாக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த சிறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலையும் டிரம்பின் அதிரடியில் தப்பவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.