
எங்கள் நீண்ட நாள் ஆசை அசாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தியில் (Guwahati) அமைந்துள்ள காமாக்யா கோவிலை தரிசிக்க வேண்டும் என்பதுடன் மலைப்பிரதேசமான ஷில்லாங், சிரப்புஞ்சி, காசிரங்கா நேஷனல் பார்க் மற்றும் ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் என அறிவிக்கப்பட்ட Mawlynnong village ஆகியவற்றை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் மாதம் 15 - 20 ஆகிய ஆறு நாட்கள் மிகவும் சுகமான அனுபவமாக அமைந்தது. காசிரங்கா தேசிய பூங்காவில் சென்ற ஜீப் பயண அனுபவத்தை எழுதியுள்ளேன்.
இந்த தேசிய பூங்காவை பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை. நாங்கள் டிசம்பர் 15 காலை 8.55 மணிக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை டு கௌஹாத்தி புறப்பட்டோம். 11:55 க்கு விமானம் கௌகாத்தியில் தரை இறங்கியது. கூடவே உடலும் குளிரில் நடுங்கியது. குளிர்கால உடைகள் எடுத்துச் சென்றதால் அந்த குளிரை அனுபவித்தபடியே ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.
யுனெஸ்கோ பாரம்பரியத் தலமாக அங்கீகரிக்கப் பட்டுள்ள காசிரங்கா தேசிய பூங்கா அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
உலகிலேயே அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசிய பூங்காவாகும். தேசிய பூங்காவில் குறைந்தது 2500 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். காண்டாமிருகம் தவிர வங்காள வெள்ளைப் புலிகள், யானைகள், சாம்பார் மான்கள், விதவிதமான பறவைகள் வாழும் வளமான காட்டுப் பகுதியாகும்.
காசிரங்கா தேசிய பூங்கா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய வனப்பகுதியாகும். 430 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதி 1905 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்பு 1974 இல் தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது. 1985 இல் இந்த வனப்பகுதியை உலகப் பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது. 2006 ஆம் ஆண்டு இந்த தேசிய பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
ஜீப்பில் பயணம் செய்வதற்கு ஒரு நபருக்கு 850 ரூபாய் வாங்குகிறார்கள். நாங்கள் ஏழு பேர் ஒரு ஜீப்பில் என பயணம் செய்தோம். இதற்கு முன்பதிவு செய்து ஜீப்பை வாடகைக்கு எடுக்க வேண்டும். இரண்டு மணிநேரம் திறந்த வடிவமைப்பில் உள்ள ஜீப்பில் சஃபாரி செய்தோம்.
நாங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு 9 மணிக்கு ஜீப்பில் ஏறினோம். காட்டுப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லாததால் நாங்கள் எடுத்துச்சென்ற ஸ்னாக்ஸ் ஐட்டங்கள், சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை காவலர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.
எனவே அவற்றை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு ஜீப்பில் ஏறினோம். காட்டின் உள்பகுதியில் எல்லாம் மிக அழகாக லாவகமாக ஓட்டுநர் ஜீப்பை ஓட்டிக்கொண்டு காட்டை பற்றியும், அங்கு நடமாடும் விலங்குகளைப் பற்றியும் விரிவாக சொல்லிக் கொண்டே வந்தார். திடீரென்று பேச்சை நிறுத்தி விட்டு கை காட்ட எல்லோரும் அந்தப் பக்கத்தை நோக்கி திரும்பினால் நான்கு யானைகள் அப்பப்பா! ஒவ்வொன்றும் பெரிய சைஸில் மூன்று யானைகளும், ஒரு குட்டி யானையுமாக நான்கு யானைகள் ஆடி அசைந்துகொண்டு காட்டுப்பகுதியில் அடர்ந்த மரங்களுக்கு இடையிலிருந்து மெல்ல நடந்து சாலையை கடந்து திரும்பவும் வனப்பகுதிக்குள் சென்றது. அந்த அரிய காட்சியை மறக்காமல் வீடியோவும், போட்டோக்களும் எடுத்துக்கொண்டோம்.
காட்டு எருமைகளும், சாம்பர் மான்களும், நீர்நிலைகளில் பெரிய மர தண்டின் மேல் ஆமைகளும் அமர்ந்து கொண்டு எங்களுக்கு அழகாக போஸ் கொடுத்தது. விதவிதமான அரிய வகை பறவைகளும், கருப்பு கழுத்து நாரை மற்றும் ஆசிய ஓபன்பில் நாரைகள், கழுகுகளையும் வெகு அருகில் பார்த்து வியந்தோம். மரங்களில் ஆங்காங்கு கீறி வைத்ததுபோல் இருப்பதைக் காட்டி இது புலிகளின் நகக்கீறல்கள் என்று ஜீப் ஓட்டுனர் சொல்ல அதையும் 'கிளிக்'கினோம்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் ஆங்காங்கே 'ஹாயாக' உலாவிக் கொண்டிருந்தது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளன. அவற்றையும் மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பினோம். வாழ்வில் மறக்க முடியாத பயணமாக இருந்தது.