
சுற்றுலா செல்ல ஏற்ற பிளான் செய்யும்போது நமது பட்ஜெட்டில் அடங்குகிறதா எனப்பார்ப்போம். அப்படி எளிய பட்ஜெட்டில் எக்கச்சக்கமான அனுபவங்களை அள்ளித்தரும் சுற்றுலாத்தலமாக இருக்கிறது கொல்லிமலை. கொல்லிமலை என்றாலே சித்தர்களுக்கும், மாந்திரீகத்துக்கும் பெயர் பெற்ற இடம் என்ற கருத்து நிலவுவதால் பலருக்கும் இதன் அழகியல் புரிவதில்லை.
ஆனால் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைதியான இயற்கை சூழ் மலைவாசஸ்தலம், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், இதமான மூடுபனி மற்றும் குளிர்ந்த காலநிலை. ஆன்மிகத்துக்கு அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் உல்லாசத்துக்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி என அனைத்து வயதினரையும் கவர்கிறது கொல்லிமலை.
இதன் அமைவிடம் - நாமக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சேந்தமங்கலம் எனும் ஊரைக் கடந்தால் கொல்லிமலைஅடிவாரமான காரவல்லியை அடையலாம். அதன் பிறகு, வழியில் கிட்டத்தட்ட 70 கொண்டை ஊசிவளைவுகள் உள்ளன.
இவற்றைக் கடந்ததும் வரும் செம்மேடுதான் கொல்லிமலையின் மையப்புள்ளி. வழிநெடுகிலும் காணப்படும் லாட்ஜ், ஹோட்டல், ரிசார்டுகள் தங்குவதற்கு ஏதுவாக உள்ளது.
செம்மேட்டில் அருகருகே அமைந்துள்ள சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ எனும் 3 வியூ பாயின்ட்கள் மூலம் கொல்லிமலையின் அழகை ரசிக்கலாம்.
அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு `ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி' அமைந்திருக்கிறது. செல்வதற்கு ஏதுவாக செங்குத்தான சுமார் 1,200 படிகளுடன் கிட்டத்தட்ட 140 அடி உயரம் கொண்டது இந்த அருவி. சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும். இதில் குளித்துவிட்டு வரும்போது நிச்சயம் புத்துணர்ச்சி கிடைக்கும்.
மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கிருந்து நாமக்கல்லில் உள்ள சிவன் கோயிலுக்குச் சுரங்கப்பாதை இருப்பதாக சொல்கிறார்கள்.
அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது `மாசிலா அருவி'. கொல்லிமலையில் உள்ள மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளை உரசிக்கொண்டு வருவதால் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். பெயருக்கேற்ப தூய்மையான அருவியாகத் திகழும் இதில் அவ்வப்போது நீர்வரத்தின் தன்மை மாறுபடும்.
மாசிலா அருவியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான மாசி பெரியசாமி கோயில். அருகிலேயே உள்ள எட்டுக்கை அம்மன் கோவில் ஆகியவைகள் செய்வினை, பில்லி, சூனியம் நிவாரணத்திற்கு ஏற்றவையாக திகழ்கிறது.
மலையில் இருந்து கீழே செல்லும் வழியில் அமைந்துள்ள வாசலூர்பட்டி பாதுகாப்பான படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களில் ஒன்றான கொல்லிமலை இனி உங்கள் டூர் லிஸ்டிலும் இருக்கும்தானே?