
இயற்கையின் தூரிகை வங்கக்கடலில் தீட்டிய ஓவியமாய் 8000 சதுர கி.மீ பரப்பளவில், 500-க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்களை கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் சொர்க்கமாகவே திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும்.
இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளபோதும், அவற்றில் 36 தீவுகளில்தான் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தத் தீவுகளில் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப்பாறைகள், பசுமைக்காடுகள், அருவிகள் என இயற்கை அழகு அளவில்லாமல் கொட்டிக்கிடப்பதால் உலகம் முழுவதுமிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் வந்தது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதாவது முன்பொருமுறை கடல் வழி பயணித்த தமிழக வணிகர்கள் 'அந்தோ மான் நிக்குது பார்' என்று கூறிய வார்த்தைகளிலிருந்து அந்தமான் நிக்கோபார் பெயர் வந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
அதேபோல தங்கள் தொழிலுக்கு ஆள் பிடிக்க வந்த சீன மற்றும் மலேய வணிகர்களும், சில கடற்கொள்ளையர் களும் இந்தத் தீவின் மக்களை பார்த்து 'குரங்கு முகம் கொண்ட மக்களைக்கொண்ட தீவு' என்ற அர்த்தத்தில் 'ஹண்டுமான்' (அனுமான்) என இத்தீவுகளுக்கு பெயரிட்டதாக ஒரு கதை சொல்கிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் தஞ்சைக் கல்வெட்டுகளிலும், மலேய நாட்டு கல்வெட்டு களிலும் 'நக்காவரம்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நக்காவரம் என்பது நக்கம் எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகவும், நக்கம் என்றால் 'அம்மணம்' என்றும் பொருள். இங்கு முன்பு வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் அம்மணமாக வந்து வந்ததால் இந்தத் தீவுக்கூட்டம் நக்காவரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.
அந்தமானின் பவழப்பாறைகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.
சுற்றுலாத் தலங்கள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முக்கிய மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாக ஹேவ்லாக் தீவு, கிரேட் நிக்கோபார், தில்லன்சாங், போர்ட் பிளேர், ஜாலி பாய், ராஸ் தீவு, வைப்பர் தீவு, பேரன் தீவு ஆகியவை அறியப்படுகின்றன.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன. இங்கு 1857-ஆம் ஆண்டில் முதல் சுதந்திர போராட்டம் வெடித்த பின்னர் ஆங்கிலேயெ அரசாங்கம் இந்த தீவுப்பகுதியை அதிதீவிர சிறை வளாகமாக மாற்றி இங்கு முக்கியமான அரசியல் கைதிகளை அடைத்துவைக்க திட்டமிட்டது.
இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏறக்குறை 80 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இப்படி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் யாவும் இன்று சிதிலங்களாக காட்சியளிப்பதுதான் இந்த ராஸ் தீவின் பிரதான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.
1906-ஆம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். இந்தத் தீவில் ‘வைப்பர்' எனப்படும் கொடிய விஷம் கொண்ட ‘கண்ணாடி விரியன் பாம்புகள்' நிறைந்திருந்ததால் வைப்பர் தீவு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
போர்ட் பிளேர் பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகிய தீவான நீல் தீவு 19 சதுர கி.மீ நீளம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தத்தீவு ஹேவ்லாக் தீவைப்போல் பரபரப்பின்றி காணப்படுவதால், அமைதி விரும்பிகள் கட்டாயம் இங்கு வரலாம். இத்தீவை போர்ட் பிளேரிலிருந்து அடைவதற்கு நாள் ஒன்றுக்கு 2 படகுகள் இயக்கப்படுவதோடு, 2 மணிநேரத்தில் நீல் தேவை இந்தப் படகுப் போக்குவரத்தில் அடைந்துவிட முடியும். இங்கு சீதாநகர், ராம்நகர், லக்ஷ்மண்பூர் என 3 கவின் கொஞ்சும் கடற்கரைகள் அமையப்பெற்றுள்ளன.
அந்தமான் சிறைச்சாலை
காலா பாணி என்று பிரபலமாக அறியப்படும் அந்தமான் சிறைச்சாலை 1906 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டதாகும். இந்தச்சிறை 7 பக்கப்பகுதிகாளாக ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்டாதாக படுக்கைகளற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
ஆனால் 1942-ஆம் ஆண்டு இந்த சிறையை கைப்பற்றிய ஜப்பானியர் 7 சிறைப் பக்கப் பிரிவுகளுள் 2-ஐ இடித்து தகர்த்தனர். அதுமட்டுமல்லாமல் இந்திய விடுதலைக்குப் பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் 2 மீண்டும் இடிக்கப்பட்டன. எனினும் பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது.
இப்படி சிறப்பு வாய்ந்த இடத்திற்கு சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது ஒருமுறை சென்று ரசித்து வரலாமே.