அந்தமான் ஹேவ்லாக் தீவைச் சுற்றிப் பார்ப்போமா?

ஹேவ்லாக் தீவு...
ஹேவ்லாக் தீவு...
Published on

ந்தமான் நிகோபார் தீவுகளை நாம் புதையல் தீவுகள் என்றே சொல்லலாம். இயற்கை வளம் மிகுந்த ஒரு தீவு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளாகும். அந்தமான் நிகோபார் 572 தீவுகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இதில் அந்தமானில் 550 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 28 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். நிகோபாரில் 22 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 10 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள்.

அந்தமானில் ஹேவ்லாக், நெய்ல் தீவு, பாரடாங் தீவு, ராஸ் தீவு மற்றும் நார்த்பே தீவுகள் முதலான தீவுகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லுகிறார்கள். இந்த பதிவில் நாம் ஹேவ்லாக் தீவைப் பற்றிப் பார்ப்போம்.

ஹேவ்லாக் தீவானது போர்ட்பிளேயரிலிருந்து 56 நாட்டிகல் மைல் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தமான் தீவுகளில் 113 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஹேவ்லாக் தீவில் அதிக அளவில் மக்கள் வசிக்கிறார்கள். பவழப்பாறைகள் அதிகமுள்ள கடல்பகுதியாகும். ஹேவ்லாக் தீவில் சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கேற்ப காலாபத்தர் கடற்கரை, ராதாநகர் கடற்கரை, எலிபெண்ட் கடற்கரை என முக்கியமான சில கடற்கரைகள் அமைந்துள்ளன.

போர்ட்பிளேயரில் ஒரு சிறிய துறைமுகம் Directorate of Shipping Services என்ற பெயரில் இயங்குகிறது. அந்தமானைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுலா தீவுகளுக்கு இங்கிருந்துதான் அரசு மற்றும் தனியார் படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்கான டிக்கெட்டை இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது நேரில் சென்றும் அந்த சமயத்தில் டிக்கெட் இருந்தால் பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவு செய்து கொள்ளுவது நல்லது.

துறைமுகத்திற்கு பயண நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று செக்யூரிட்டி நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டும். ஆதார் அல்லது புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

படகுப் பயணம்
படகுப் பயணம்

சுமார் இரண்டு மணி நேர படகுப் பயணம். புதிய அனுபவமாக இருக்கும். ஏழரைக்குத் தொடங்கிய படகுப் பயணம் ஒன்பதே முக்கால் மணிக்கு முடிந்தது. எங்கள் படகு ஒன்பதே முக்காலுக்கு ஹேவ்லாக் தீவைச் சென்றடைந்தது. மாலை மூன்று மணிக்கு அந்த படகு மீண்டும் புறப்படும் என்று அறிவித்தார்கள். அதற்குள் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு படகு புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக படகுத் துறையை வந்து அடைந்து விட வேண்டும். ஒரு படகில் டிக்கெட் பதிவு செய்து விட்டு வேறொரு படகில் பயணிக்க முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஹேவ்லாக்கிற்குச் செல்லும்போது உடன் ஒரு செட் துணிகளை எடுத்துச் செல்லுங்கள். கடலில் குளித்த பின்னர் மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும். உடை மாற்றுவதற்காக நிறைய பகுதிகள் இங்கே அமைக்கப் பட்டுள்ளன. இனி ஹேவ்லாக் தீவில் நாம் காண வேண்டிய கடற்கரைகளைப் பற்றிப் பார்ப்போம்.

காலாபத்தர் கடற்கரை (Kalapathar Sea Beach) மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது. காலாபத்தர் கடல்நீரானது பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இங்குள்ள கடற்கரைகளில் ஒரு விஷேசம் என்றவென்றால் நம்முர் கடலைப்போல அலைகள் தொடர்ச்சியாக ஆக்ரோஷமாக வருவதில்லை. பெரும்பாலும் அலைகள் காணப் படுவதில்லை. அப்படியே அலைகள் வந்தாலும் அவை ஒற்றை அலையாகவே இருக்கின்றன. காலாபத்தர் கடற்கரையில் ஆழம் குறைவு. கடற்கரை மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இங்கு மிகப்பெரிய நீளமான மரங்களைக் குடைந்து நீளமான இருக்கைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் எந்த ஒரு வசதியும் இல்லை. சுமார் பத்து கடைகள் மட்டும் காணப்படுகின்றன. இந்த கடற்கரையில் இளநீர், கரும்புச்சாறு போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

ராதாநகர் கடற்கரை...
ராதாநகர் கடற்கரை...

ராதாநகர் கடற்கரை ஆசிய கண்டத்தில் உள்ள கடற்கரைகளில் மிகவும் சுத்தமான அழகான ஒரு கடற்கரை என்று டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அழகிய கடற்கரையாகும். ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்பும் ஒரு கடற்கரையாகவும் இது திகழ்கிறது. இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இந்த கடற்கரையை ஒட்டி முழுக்க முழுக்க மரத்தினால் ஒரு வியூபாயிண்ட்டை அமைத்துள்ளார்கள். இதில் ஏறிப் பார்த்தால் ராதாநகர் கடற்கரையின் அழகை வெகுவாக ரசிக்கலாம்.

ஹேவ்லாக்கில் எலிபெண்ட் பீச் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹேவ்லாக் படகுத் துறையிலிருந்து இப்பகுதியை நேரிடையாக அடைய படகுகள் கிடைக்கின்றன. சுமார் நாற்பது நிமிட நேரத்தில் இந்த கடற்கரையினை அடையலாம். அல்லது இராதாநகர் கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு வழியின் மூலம் சுமார் அரைமணி நேரம் நடந்து இந்த கடற்கரையினை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
இந்திய மணப்பெண்களின் 4 தனித்துவமிக்க ரவிக்கை வடிவமைப்புகள்!
ஹேவ்லாக் தீவு...

ஹேவ்லாக் தீவில் இந்த கடற்கரைகள் மிக முக்கியமான சுற்றுலாப் பகுதிகள் ஆகும். இந்த தீவு மிகவும் அமைதியாகவும் ரம்மியமாகவும் காட்சி அளிக்கிறது. ஹேவ்லாக் தீவில் ஒருநாள் தங்கியிருந்து அவசரமில்லாமல் இப்பகுதிகளை ரசித்து மகிழலாம். இங்கிருந்து நெய்ல் தீவிற்கு படகுகள் இயக்கப் படுகின்றன. நெய்ல் தீவிற்குச் சென்று அத்தீவைச் சுற்றிப் பார்த்து ரசித்து அங்கிருந்தும் போர்ட்பிளேயருக்குத் திரும்பலாம்.

மதியம் இரண்டரை மணிக்கு ஹேவ்லாக் படகுத் துறையை அடைந்து படகில் ஏற அந்த படகு சுமார் இரண்டு மணி நேரம் பயணித்து மாலை ஐந்து மணிக்கு போர்ட்பிளேயரைச் சென்றடைந்தது. நம் வாழ்வில் அவசியம் கண்டு மகிழ வேண்டிய ஒரு தீவு அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவாகும். வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் அந்தமானுக்குச் சென்று அங்குள்ள தீவுகளைக் கண்டு மகிழ்ச்சியோடு திரும்புங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com