

வெளியூர் பயணம் சென்றால் மனது மிகவும் உற்சாகமாக இருக்கும். சாலையின் இருமருங்கை ரசிப்பது, நீர்நிலை வந்தால் கண்களை அகல விரித்து அதில் ஏதாவது வித்தியாசமான நீர் விலங்கினங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்பது, புதிதாக ஏதாவது மரமோ, செடியோ பூத்து, காய்த்து , கணிந்து இருந்தால் அதை போட்டோ எடுப்பது என்று மனதை ரம்யமாக வைத்துக் கொள்வதுதான் பயணத்தின் மிகப்பெரிய இன்பமே.
சில பயணங்களின் பொழுது அன்று நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய இன்பம் கிடைக்கப் போகிறது என்று நினைப்பது உண்டு. சில நேரங்களில் நாம் நினைத்ததை விட அருமையான நிகழ்வுகள் நிகழ்வதும், சில தருணங்களில் அப்படியே மாறி நடப்பதும் உண்டு. ஆமாம் நாம் நினைப்பது அனைத்தும் அப்படியே நடந்துவிட்டால் "கடவுள் இருக்கிறார்" என்பதை நாம் நம்புவோமா என்ன? அதற்குத்தான் சில சந்தர்ப்பங்களை கடவுள் நமக்கு அளிக்கிறார் போலும். அப்படித்தான் எங்களது பயணத்திலும் அன்று ஒரு பெரிய பயங்கரம் ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டபொழுது அந்த அப்பார்ட்மெண்ட்டின் செக்யூரிட்டி கேட்டை திறந்துவிட்டு எங்கள் கையில் ஒரு புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் போட்டோவை கொடுத்து வழி அனுப்பி வைத்தார். எனக்கு அது மிகவும் அதிசயமாகவும் இன்று ஏதோ நம் வாழ்வில் மிகப்பெரிய நல்லது நடக்கப் போகிறது என்றும் நினைத்துக் கொண்டு அதை கண்களில் ஒற்றி சீரடி சாய்பாபா போட்டோ அருகில் வைத்தேன்.
பிறகு பயணம் தொடர வந்து கொண்டிருந்த பொழுது சூளகிரியில் பொதி சுமந்து வந்த ஒரு பெரிய லாரி எங்கள் காரை இடித்துவிட கார் அங்கும் இங்கும் தடம் புரண்டு மீடியனில் வந்து நின்றது. கார் அப்பளம் போல் நொறுங்கிவிட்டது என்றாலும் நானும் என் கணவரும் உயிர் தப்பித்தோம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் சிரித்துவிட்டோம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
காரணம் நாங்கள் இருவரும் காரில் எப்படி அமர்ந்தோமோ அப்படியே இருந்தோம். தடம் புரண்டபோது அந்த சாய்பாபா இருவரின் படங்களும் என் மடியில் விழுந்தது. அதைத்தான் நான் மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தேன். அதற்காகத்தான் காலையில் அந்த பெரியவர் இந்த போட்டோவை கொடுத்து வழி அனுப்பி வைத்தாரோ என்று நினைத்தேன். உண்மையில் நான் சீரடி சாய்பாபாவின் பக்தியில் திளைப்பவள். பாபா மந்திர் செல்லும் பொழுது அதற்கு நேராக இருக்கும் புட்டபர்த்தி சாய்பாபாவை வணங்குவது உண்டே தவிர, அவரின் மேல் அவ்வளவு பக்தியானவள் இல்லை.
ஆனால் அன்று காலையில் அவர் அந்த போட்டோவினை கொடுத்ததன் காரணம் பெரிய விபத்தில் இருந்து நீங்கள் உயிர் பிழைப்பீர்கள் என்பதை வலியுறுத்தி கூறியதுபோல், இந்த விபத்திற்கு பிறகு நாங்கள் புரிந்துகொண்டோம்.
அதன் பிறகு அங்கு கூடி நின்ற ஜனங்கள் வழிவிட, எங்கள் காரை ஒருவர் அதிலிருந்து மீட்டு எடுத்து ஒரு ஓரத்தில் நிறுத்தினார். அப்பொழுது நான் டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறேன் உங்களுக்கு ஊருக்குச் செல்வதற்கு டாக்ஸி வேண்டும் என்றால் இந்த காண்டாக்ட் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி ஒரு அட்டையை கொடுத்து விட்டுச் சென்றார்.
அதை வாங்கி அப்படியே வைத்துவிட்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக பெட்ரோல் பங்கின் அருகில் அமர்த்தோம். அப்பொழுது அவர் கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்து அவரிடம் உதவி கோரலாம் என்று பார்த்தால் அதனுடன் ஒரு அட்டை தென்பட்டது. அதைப் பார்த்து அதிர்ந்தே போய்விட்டேன். காரணம் அதிலிருந்ததும் புட்டபர்த்தி சாய்பாபாதான்.
பிறகு பாபா வழி காட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த ட்ரான்ஸ்போர்ட் கம்பெனிக்கே போன் செய்து வண்டியை வரவழைத்து வீடு வந்து சேர்ந்தோம். பயணம் செய்யும்பொழுது சில நேரங்களில் இதுபோல் விபத்தும் ஏற்படலாம். இதற்கும் நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். அதன் பிறகு செய்யவேண்டிய ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிப்பதற்கு நம் மனதை தயார்படுத்திக் கொண்டு செயலில் இறங்கவேண்டும்.
என்றாலும் கடந்த ஆண்டு நடந்த இந்த விபத்திற்கு பிறகு பயணம் என்று புறப்படும் பொழுது யாராவது கையில் எதையாவது ஒரு பொருளை கொடுத்தால், அதை அலட்சியப்படுத்தாமல் பத்திரப்படுத்துவதை பழக்கமாக்கி கொண்டுள்ளேன். ஏனெனில் அது ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் ஆபத்பாந்தவனாக ஆகக்கூட இருக்கலாமே!