

மனிதர்கள் பூமியில் சென்று பார்க்க ஆசைப்படும் இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் மனித உயிர் பாதுகாப்பு, இயற்கை சமநிலை, பழங்குடி மக்களின் வாழ்வுரிமை, உலகளாவிய பாதுகாப்பு போன்ற காரணங்களால் மனித காலடி படாத வகையில் கடுமையாக பாதுகாக்கப்படும் சில இடங்களும் உள்ளன அந்த வகையில் உலகில் பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பாம்பு தீவு, பிரேசில்
உலகின் மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படும் பிரேசிலின் கடற்கரைக்கு அருகே உள்ள பாம்பு தீவில் விஷப்பாம்புகள் அளவுக்கதிகமாக வசிப்பதால் பொதுமக்கள் செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. விஞ்ஞானிகள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஏரியா 51, அமெரிக்கா
அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் அமைந்துள்ள ஏரியா 51 ,அதிகாரப்பூர்வ ராணுவ ஆய்வு மையம் என்றாலும் அதன் உள்ளே நடப்பது பொதுமக்களுக்கு தெரியாது. பொதுமக்கள் உள்ளே நுழைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதால் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது உள்ளது . ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனை வரை நடப்பதாக பல்வேறு பேச்சுகள் அடிபடுகின்றன.
வடக்கு சென்டினல் தீவு
இந்தியாவின் நவீன நாகரிகம் தொடாத ஒரு அரிய இடமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவு இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பே இல்லாமல் சென்டினலீவ் பழங்குடியினர் வசிப்பதால் இந்தத் தீவுக்கு செல்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது .பழங்குடியினரை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவு,ம் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இது உள்ளது.
உலகளாவிய விதை வங்கி, நார்வே
பூமியின் விவசாய எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் உலகம் முழுவதிலும் சேகரிக்கப்பட்ட விதைகள் ஆர்க்டிக் பகுதியில், நார்வேக்கு சொந்தமான ஒரு தீவில் உள்ள உலகளாவிய விதை வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது .மனித குலத்திற்கான மீட்பு களஞ்சியமாக விதை வங்கி கருதப்படுவதால் பொதுமக்களுக்கு இங்கே அனுமதி இல்லை.
கின் ஷி ஹுவாங் கல்லறை, சீனா
உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் கல்லறையும் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு இடமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உண்மையான அடக்க அறை திறக்கப்படாததோடு, பழங்கால பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் இங்கு மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஹேர்ட் தீவு, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு உட்பட்ட ஹேர்ட் தீவில், எரிமலை, பனிப்பாறைகள், வனவிலங்குகள் என இயற்கை தூய்மையுடன் தொலைதூர இயற்கை தீவாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெஷ்கோர்யே, ரஷ்யா
ரஷ்யாவில் உள்ள மெஷ்கோர்யே என்ற ரகசிய நகரமும் பொதுமக்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது. அதற்கான உண்மையான நோக்கம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
மேற்கூறிய இடங்கள் அரிதானதாக இருப்பதால் பாதுகாக்கும் நோக்கில் மனிதர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.